கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து நிரம்பிய பொருள்கள் மற்றும் சர்க்கரை அதிகமாக எடுத்துக்கொள்வதே நீரிழிவு நோய்க்கு காரணமாக இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.
நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் ஐசிஎம்ஆர் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதில் பல முக்கிய தகவல்கள் தெரிய வந்துள்ளன.
'இந்தியாவில் உணவு முறைகள் மற்றும் அதுசார்ந்த வளர்சிதை மாற்ற ஆபத்து' என்ற அறிக்கையின் முடிவுகளின்படி ஐசிஎம்ஆர் மக்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இந்தியாவில் தென் மாநிலங்களில் அரிசி அதிகமாகவும் வட மாநிலங்களில் கோதுமை அதிகமாகவும் உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதுவே நீரிழிவு, உடல் பருமன் போன்ற பிரச்னைகளுக்குக் காரணமாகிறது. அதாவது நீரிழிவு நோய்க்கு அரிசியும் கோதுமையும் சரிசம அளவில் காரணமாக இருக்கிறது என்று ஆய்வு கூறியுள்ளது.
அரிசியை ஒப்பிடுகையில் கோதுமை உடல்நலத்திற்கு நல்லது கூறுவது இந்த அறிக்கையின் மூலமாக பொய்யாகிறது.
கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்வதை 5% சதவீதம் குறைத்து அதற்கு பதிலாக புரதத்தை உட்கொள்வது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றாத நோய்களைக் கட்டுப்படுத்த உதவும் என்று கூறியுள்ளது.
இந்தியர்கள் நாள் ஒன்றுக்கு வெறும் 12% மட்டுமே புரதம் எடுத்துக்கொள்கின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் அதிகமாக 14% என்ற நிலை இருக்கிறது. இதில் 9% புரதம் தாவர உணவுகளில் இருந்து பெறுகிறார்கள். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் புரத உணவு உட்கொள்வது மிகவும் குறைவாக இருக்கிறது. மாவுச்சத்து உணவுகளைக் குறைத்து புரத உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சைவம் மட்டும் சாப்பிடும் இந்தியர்கள், முட்டையை அதிகமாக உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும், அசைவம் சாப்பிடுபவர்கள் கோழி இறைச்சி, மீன் அதிகம் எடுத்துக்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கின்றனர்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் வட மாநிலங்களில் உள்ள மக்கள் உடல் பருமன், நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றனர்.
இருப்பினும் அதிகப்படியான புரதம் எடுத்துக்கொள்வது சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்று எச்சரிக்கின்றனர்.
"அரிசி மற்றும் கோதுமையை மெருகூட்டுவதே அவை நச்சுத்தன்மையடைவதற்குக் காரணம். அவ்வாறு அரிசி, கோதுமையை மெருகூட்டுவதால் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நார்ச்சத்தும் அதிலிருந்து நீக்கப்படுகின்றன. இன்று நாம் சாப்பிடும் அரிசி வெறும் ஸ்டார்ச் மட்டுமே" என்று மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் ஆய்வின் ஆசிரியருமான டாக்டர் மோகன் கூறினார்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் உள்ள உணவு பழக்கவழக்கங்கள் வேறுபாட்டையும் இந்த ஆய்வு எடுத்துரைக்கிறது. தெற்கு, கிழக்கு, வடகிழக்கில் அரிசி ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. அதே நேரத்தில் வடக்கு, மத்திய மாநிலங்களில் கோதுமை அதிகம் பயன்பாட்டில் உள்ளது. சிறுதானியமான தினை எடுத்துக்கொள்வதில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது.
அதிக சர்க்கரை எடுத்துக்கொள்வது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். ஆனால், சர்க்கரை மட்டுமே இதற்கு காரணமல்ல. புரதம் இல்லாமல் அரிசி, கோதுமை அதிகம் எடுத்துக்கொள்வதும் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாக இருக்கிறது, அதனால் சிறுதானியங்கள், புரத உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
மோசமான உணவு முறையுடன் அமர்ந்தே வேலை செய்யும் வாழ்க்கை முறை, உடல் இயக்கம் இல்லாதது தொற்றாத நோய்களின் பரவலை மோசமாக்கியுள்ளது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 83% நடுத்தர வயதினருக்கு உடல் பருமன், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் அபாயம் இருக்கிறது.
சுமார் 18,090 பேரிடம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் 'நேச்சர் மெடிசின்' இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
வரும் காலத்தில் தொற்றா வளர்சிதை மாற்ற நோய்களில் இருந்து தப்பிக்க உணவுப்பழக்கவழக்கம் உள்ளிட்ட வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிக்க | முகத்தில் கரும்புள்ளிகள் பிரச்னையா? சரிசெய்ய இயற்கையான வழி இதோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.