இறையன்புவின் வாழ்வியல் தொடர்

உச்சியிலிருந்து தொடங்கு-9

ஒளவையார் "கொடிது கொடிது இளமையில் வறுமை' என்று பாடினார். இன்று இருந்திருந்தால், "கொடிது கொடிது முதுமையில் தனிமை' என்று கூறியிருப்பார்.

வெ. இறையன்பு

முதுமையும் தற்கொலையும்! 

ஒளவையார் "கொடிது கொடிது இளமையில் வறுமை' என்று பாடினார். இன்று இருந்திருந்தால், "கொடிது கொடிது முதுமையில் தனிமை' என்று கூறியிருப்பார்.

"அமெளர்' என்கிற பிரெஞ்சுப் படத்தைப் பார்க்க நேர்ந்தது.  காதல் என்று பொருள்.  எண்பது வயதைத் தாண்டிய இரண்டு பியானோ இசை ஆசிரியர்கள். ஜார்ஜஸ், ஆனி என்கிற அவர்கள் இருவரும் மாணவனுடைய இசைக் கச்சேரியைப் பார்த்த பிறகு வீட்டிற்குத் திரும்புகிறார்கள். ஆனிக்கு பக்கவாதம் வந்துவிடுகிறது. அவள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் சுருண்டுவிடுகிறாள். யாருமற்ற தனிமை அவர்கள் இருவரையும் வாட்டுகிறது. மனைவியை ஒற்றையாளாகக் கவனிக்கும் சமயத்தில் கணவனுக்கு எரிச்சல் ஏற்படுகிறது.

ஆனி தான் வாழ விரும்பவில்லை என்று தெரிவித்த வண்ணம் இருக்கிறாள். இரண்டாவது முறை மறுபடியும் பக்கவாதம் ஏற்பட அவள் பேச்சும் குழற ஆரம்பித்து விடுகிறது.  தாதிகளை வைத்து மனைவியைக் கவனித்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யும் கணவன், ஒருநாள் சலித்துப்போய் அவளைத் தலையணையால் அமுக்கி முடித்துவிடுகிறான். மனைவியை ஒரு பெரிய துயரத்திலிருந்து விடுவித்ததைப்போல அவன் உணர்கிறான். படத்தைப் பார்க்கும்போது இரண்டு முதியவர்கள் படும் வேதனை மனதைப் பிழிந்தது.  

அகவை 65ஐத் தாண்டியவர்கள் தற்கொலை செய்து கொள்கிற நிகழ்வுகள் அமெரிக்கா போன்ற நாடுகளில் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. அங்கு ஒவ்வொரு 83 நிமிடத்திற்கும் ஒரு தற்கொலை நிகழ்கிறது. 1980 முதல் 1992 வரை இது ஒன்பது சதவிகிதமாக உயர்ந்தது. 74,675 தற்கொலைகள் அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்தன.  அமெரிக்காவின் முதியோர் ஜனத்தொகை 12 விழுக்காடு. தற்கொலை விகிதமோ 18 விழுக்காடு.  

இதுபோன்ற பிரச்சினை இந்தியாவிலும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏறத்தாழ மேற்கத்திய வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதே காரணம். குழந்தைகள் எங்கேயோ பணிபுரிகிறார்கள், எப்போதோ வருகிறார்கள், அவர்கள் வசதியாக இருக்க வேண்டும் என்று கட்டிய வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது. அவசரத்திற்கு உதவ யாருமில்லை. அவர்களை நாடிச்சென்றால் அந்தச் சூழல் ஒத்துவருவதில்லை. கையில் பணம் இருக்கிறது, ஆனால் உதவ ஆள் இல்லை. ஒவ்வொரு வீடும் மவுன மண்டபமாக மாறிவிட்டது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் யாரென்றே தெரியாத அந்நியச் சூழல். இவையெல்லாம் வாழ்க்கையின் நோக்கத்தை கேள்விக்குறியாக்குகிறது.  

இன்னொரு பக்கம் கிராமப்புறங்களில் வசதியின்றி வறுமையில் உழலும் வாழ்க்கை முறை.  பிள்ளைகள் அருகிலிருந்தாலும் கவனித்துக் கொள்வதில்லை.  வயிற்றை நிரப்ப வழியில்லை.  கஷ்டப்பட்டு கடுகு டப்பாவிலும், மிளகு டப்பாவிலும் சேர்த்து வைத்திருந்ததையும் குடிப்பதற்காக பிடுங்கிக்கொள்ளும் மகன்கள். முதியோர் உதவித்தொகையையும் பத்திரப்படுத்த பிரயத்தனம். இருந்தாலும், இதேபோல பாதிக்கப்பட்ட முதியோர் அனைவரும் அமர்ந்து பேசவும், ஒன்றாகக் கூடவும் வாய்ப்புகள்.  வாழ்வென்றும் கூற முடியாமல், சாவென்றும் போக முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாய் வாழ்க்கை முறை.  முடியாத பெற்றோர்களை சில இடங்களில் பிள்ளைகளே முடித்து வைக்கிற அவலங்களும் கிராமப்புறங்களில் சகஜம்.

முதியோர்களின் தற்கொலைக்கு முக்கிய காரணம் அவர்களின் உடல்நலம் குறித்த பிரச்னை. 80 விழுக்காடு தற்கொலைகள் நோய்களின் காரணமாக நிகழ்கின்றன. கணவனை இழந்த மனைவி தைரியமாக வாழ்கிற அளவிற்கு மனைவியை இழந்த கணவனால் வயோதிகத்தில் வாழ முடியவில்லை. சமூக ரீதியாக அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதும், மனைவியிடம் கிடைத்த உணர்வுப்பூர்வமான பலம் கிடைக்கப் பெறாததும் ஒரு காரணம். 

பல மங்கல நிகழ்ச்சிகளுக்கு மனைவியை இழந்து வாழும் கணவன் அழைக்கப்படுவதில்லை.  மனைவியோ அதைப் பொருட்படுத்துவதில்லை. மனரீதியாக ஆண்களைக் காட்டிலும் பெண்கள் வலிமையானவர்கள். இல்லத்துப் பணிகளை தனியாகக் கவனித்து பழக்கப்பட்டதால் அவர்கள் இழப்புகளைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தையும் பெறுகிறார்கள்.

விருப்பமானவர்களின் மரணம், தாங்கமுடியாத வலி, நீண்டகாலம் படுக்கையில் இருக்கும்படி நேரிடுமோ என்கிற பயம், தனிமை, பணி ஓய்வினால் பல் பிடுக்கப்பட்டது போன்ற உணர்வு ஆகியவை அவர்களிடம் இந்த எண்ணத்தைத் தூண்டுகிறது.  

எப்போதும் இசையை நேசிக்கிறவர்கள் இப்போது இசை நிகழ்ச்சிகளுக்கு இலவச அனுமதிச் சீட்டு கிடைத்தாலும் போவதில்லை. ஐ.பி.எல். என்றால் அசையாமல் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்பே தவமிருப்பவர்கள், இப்போது உலகக்கோப்பை என்றாலும் உதாசீனம் செய்கிறார்கள். யார் வந்தாலும் "தொணதொண'வென்று அவர்களைப் பேசவிடாமல் இவர்களே பேசிக்கொண்டிருப்பவர்கள், இப்போது அதிகமாகப் பேசுவதில்லை.

மருத்துவர்கள் சொன்ன உணவுக்கட்டுப்பாடுகளைத் துல்லியமாகக் கடைப்பிடிப்பவர்கள், இப்போது எதையும் பொருட்படுவதில்லை. மருந்து சாப்பிடுவதில்லை, பத்தியம் இருப்பதில்லை. எப்போது பார்த்தாலும் மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டிருப்பது  அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு அழுவது, தூக்க மாத்திரைகளைச் சாப்பிடாமல் சேமித்து வைப்பது, நாம் பார்ப்பது இதுதான் கடைசி தடவை என்று வெளியூர்களிலிருந்து வருபவர்களிடம் சொல்வது, தன் புகைப்படத்தை பெரிதாக்கி சட்டம் போட்டு வைப்பது,  பிடித்த உணவைக் கூட குறைவாகச் சாப்பிடுவது, விருப்பமாக வைத்திருக்கும் பொருட்களையெல்லாம் அடுத்தவர்களுக்குக் கொடுத்து விடுவது போன்ற அறிகுறிகளை வைத்து அவர்கள் மனநிலையை நாம் யூகித்துக் கொள்ளலாம்.  

முதியோர்களை அடிக்கடி குழந்தைகள் சென்று பார்ப்பதும், வற்புறுத்தியாவது அவர்களை வெளியூர்களுக்கு அழைத்துச் செல்வதும், சில செயல்பாடுகளில் அவர்களை ஈடுபட வைப்பதும், தன்னார்வத் தொண்டுகளில் அவர்களைக் கலந்துகொள்ளச் செய்வதும் அவர்களிடம் வாழ்க்கைச் சம்பவங்களைக் குறித்து பேசுவதும் தனிமை உணர்வைத் தணிக்க உதவும்.

எனக்குத் தெரிந்து ஒரு பெரியவர்.  வயது 90 இருக்கும்.  அவரை நான் அடிக்கடி சந்திக்கச் செல்வேன். ஒருகாலத்தில் அவர் மிஸ்டர் மெட்ராஸôக இருந்தார். ஒவ்வொரு முறை நான் செல்லும்போதும் அவர் உடற்பயிற்சி செய்த விதத்தையும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வையும் வரிவிடாமல் சொல்லுவார்.  நான் அதை வாழ்க்கையில் முதல்முறை கேட்பதைப்போலக் கேட்டுக் கொள்வேன்.  அதில் அவருக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. எப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுப்பார். நான் அவற்றை கேட்டுக் கொள்வேன். நானே சில கேள்விகள் கேட்டு அவரது இளமைப் பருவத்தின் நினைவுகளையும், மகிழ்ச்சியாக இருந்த தருணங்களையும் கிளறுவேன். அதைச் சொல்வதில் அவர் மகிழ்ச்சி அடைந்துபோவார்.  

மனரீதியாக முதியவர்களைச் சிகிச்சைக்குட்படுத்துவதும் அவசியம். தூக்கமும், கவலையற்ற மனநிலையும் அவர்களைத் தனிமையிலிருந்து மீட்டெடுக்க உதவும். நாம் நம் மண்ணுக்கே உரிய கலகலப்பான பழகும் முறைகளை எப்போது மீட்டெடுக்கப்போகிறோம் என்று ஏங்காமல் இருக்க முடியவில்லை.


தொடரும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

ஜெஸிக்கா பெகுலா சாம்பியன்!

ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அசத்தல் அல்கராஸ் சாம்பியன்!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT