முகப்பு
ஸ்பெஷல்

ஆன்மீகச் சொற்பொழிவுகளில் கலக்கும் கிருபானந்த வாரியரின் மாணவி தேச மங்கையற்கரசி!

பெண்களே நீங்கள் நல்ல தன்னம்பிக்கைப் புத்தகங்களை படியுங்கள். வாழும் முறைகளை சரியாகப் பயன்படுத்தி வெற்றி பெறுங்கள்'' என்றார் தேச மங்கையற்கரசி.

Updated On : 1 டிசம்பர், 2016 at 11:48 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:20 AM

ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்றிய  கிருபானந்த வாரியாரின் மாணவி தேச மங்கையற்கரசி.
மதுரையைச் சேர்ந்தவர். ஆறுவயதில் ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்றத் தொடங்கிய இவர் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். இந்தச் சாதனை குறித்து கேட்டபோது:

"எனது தந்தை தேவி சண்முகம், தாய் பாக்கியலட்சுமி. இவர்கள் கிருபானந்த வாரியாரின் ஆன்மிகப் பேச்சில் கவரப்பட்டு சுவாமிக்கு சேவை செய்வதே பாக்கியம் என எண்ணி அவருக்கு சேவை செய்து வந்தனர். நான் பிறந்ததும் எனக்கு பெயர் சூட்டியதும் சுவாமிகள்தான். எனக்கு மூன்று வயதானபோது சுவாமிகளின் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடைபெறும் மேடையில், சுவாமிகளின் அருகில் என்னை அமரவைத்து விடுவார்கள். மேடையில் இருந்தபோது சுவாமிகளின் ஆன்மிகப் பேச்சினை கேட்கும் பழக்கம் தானாகவே வந்துவிட்டது. 
பின்னர் சுவாமிகள் எனது பெற்றோர்களிடம் ராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள் உள்ளிட்ட புத்தகங்களை கொடுத்து என் முன்பு வாசிக்க வேண்டும் என கட்டளையிட்டார். அதன்படி தினசரி ஏதாவது ஒரு புத்தகத்திலிருந்து சில பக்கங்களை எனது பெற்றோர்கள் என்னிடம் வாசித்துக்காட்டத் தொடங்கினார்கள். சுவாமி அருகில் மேடையில் அமர்ந்திருப்பதால் எனக்கு மேடைக் கூச்சம் தொடக்கத்திலேயே இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் எனக்கு ஆறுவயது ஆகும் போது மதுரை ஆடி வீதியில் சுவாமிகளின் சொற்பொழிவு நடைபெற்றது.
அப்போது திடீரென சுவாமிகள், "நீங்கள் மதுரை மீனாட்சியை பார்த்திருப்பீர்கள். அவர் பேசுவதை கேட்டிருக்கிறீர்களா? இப்போது கேளுங்கள் - எனக் கூறி, என்னைப் பார்த்து பேசு'' என திடீரென கூறினார். எனக்கு சிறிய படபடப்பு. எனினும் தயக்கம் இல்லாமல் திருக்குறள் குறித்து 45 நிமிடம் பேசினேன். அந்த பேச்சுக்கு சுவாமிகள் உள்ளபட பலரும் பாராட்டினார்கள். அது எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.
 பின்னர் சுவாமிகள் சொற்பொழிவு நிகழ்த்தும்  பல இடங்களில் என்னை பேசும்படி கூறுவார். நானும் பேசி வந்தேன். 9வயதில் நான் மட்டும் தனியாக மதுரையில் சொற்பொழிவு ஆற்றத் தொடங்கினேன். மதுரை மேலமாசி வீதியில் உள்ள "இன்மையிலும் நன்மை தருவார் கோயிலில்' சொற்பொழிவு ஆற்றினேன். 
சுவாமியின் பாணியையே நான் பின்பற்றினேன். ஆன்மிகத்தோடு, வாழும் முறைகள், கூட்டுக்குடும்பம், குடும்பத்தை எப்படி நடத்தி செல்ல வேண்டும், பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என வாழ்க்கைக்குத் தேவையானவற்றையும் புத்தகங்கள் மூலம் படித்து, சொற்பொழிவாற்றி வருகிறேன். வெறும் ஆன்மிகம் மட்டுமில்லாமல், சமகால வாழ்க்கையில் நடைபெறும் குளறுபடிகள். அது இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் எனது சொற்பொழிவில் சேர்த்துக் கொண்டேன். இதுவே எனது வெற்றிக்கு காரணம் என நினைக்கிறேன்.
தற்போது பல குடும்பங்களில் கணவன் மனைவிக்கும் இடையே புரிதல் குறைவாக உள்ளது.
விட்டுக் கொடுக்கும் மனம் இருபாலருக்குமே குறைவுதான். நீ பெரிதா? நான் பெரிதா? எனப் பலர் எண்ணுகிறார்கள். பெற்றோர்களை பிள்ளைகள் கவனிப்பதில்லை. தற்போது உள்ள வாழ்க்கைச் சூழலில் அவரவர் குடும்பத்தை அவரவர் செம்மையாக நடத்துவதே பெரிய விஷயமாகிவிட்டது. இந்நிலையில் பிறருக்கு உதவுவது, உடன் பிறந்தவர்களையும், பெற்றோர்களையும் கவனிப்பது குறைந்து வருகிறது. இது கவலைக்குரிய விஷயமாகும். எனவே குடும்ப ஒற்றுமையை எனது சொற்பொழிவில் வலியுறுத்தி வருகிறேன். இதனை பலரும் கேட்டு வருவது ஆரோக்கியமானதாகும்.
எனது 13வது வயதில் முதல் முதலில் மொரீஷியஸ் நாட்டிற்கு சொற்பொழிவு ஆற்றச் சென்றேன். பின்னர் பல வெளிநாடுகளில் கோயில்களிலும், தமிழர்கள் வாழும் பகுதியிலும் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளேன்.இவை ஆயிரத்தைத் தொடும். தொலைக்காட்சியில் 2009 ஆண்டு முதல் பல ஆன்மிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறேன். எனது சொற்பொழிவு மூலம் மக்களிடம் நல்ல கருத்துக்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது இலட்சியமாகும்.
இந்து மதம் குறித்து இரு புத்தகங்கள் எழுதியுள்ளேன். ஆன்மிகம் குறித்து பல குறுந்தட்டுகளை வெளியிட்டுள்ளேன். ஆன்மிகம் தொடர்பான மாத புத்தகம் ஒன்று வெளியிட்டு வருகிறேன். எனினும் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துவதே எனது மனத்திற்கு முழு திருப்தியாக உள்ளது. பெண்களே நீங்கள் நல்ல தன்னம்பிக்கைதரும் புத்தகங்களை படியுங்கள். வாழும் முறைகளை சரியாகப் பயன்படுத்தி வெற்றி பெறுங்கள்'' என்றார் தேச மங்கையற்கரசி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.