முகப்பு
ஸ்பெஷல்

வேலையே பொழுது போக்கு என்றால் அதுவே சிறந்த வரப்பிரசாதம்!

எங்களுக்கென்று வேறு எந்தப் பொழுதுபோக்கும் இல்லை. அதுபோல எங்கள் நிறுவனத்துக்கு விடுமுறையும் இல்லை. வேலைதான் பொழுதுபோக்கு.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:49 PM
பகிர்:

கார் வாங்குவதும், கார் ஓட்டுவதும் இப்போது சாதாரணமாகிவிட்டது. படித்துவிட்டு வேலை கிடைக்கவில்லை என்று வீணாகப் பொழுதைக் கழிக்காமல், வசதிக்கேற்ப ஒரு காரோ, பல கார்களோ வாங்கி டிராவல்ஸ் நிறுவனம் நடத்தினால் என்ன? என்று நினைக்கும் இளைஞர்களும் இருக்கிறார்கள்.
சென்னை கோடம்பாக்கத்தில் ஸ்ரீ ராகவேந்திரா டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்திவரும்  டி.ஆர்.செல்வம், ஆர்.சந்தானம், எஸ்.ஏ.உமாபதி ஆகியோரைச் சந்தித்தபோது, டிராவல்ஸ் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த என்ன செய்ய வேண்டும்? அதில் வரும் பிரச்னைகளைச் சாமளிப்பது எப்படி? இப்போது வந்துள்ள கால் டாக்ஸியால் இந்தத் தொழில் நடத்துபவர்களுக்குப் பாதிப்பா? வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பன போன்ற பல கேள்விகளுக்கு பதில் சொன்னார்கள். அவற்றிலிருந்து...
"டூரிஸ்ட் டாக்ஸி தொழிலைப் பொறுத்தவரை முதலில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். அதுதான் முக்கியமானது. எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் முதலில் சம்பளத்துக்கு கார் ஓட்டும் டிரைவராகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினோம். சென்னை மந்தவெளியில் ஒரு டூரிஸ்ட் டாக்ஸி தொழில் நடத்தும் நிறுவனத்தில் வேலை செய்தோம். அதன் பிறகு 84 இல் சொந்தமாக ஒரே ஒரு காரை வாங்கி தொழில் தொடங்கினோம். நாங்கள் வேலை செய்த டூரிஸ்ட் டாக்ஸி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், தொழிலை நடத்த முடியாமல், எங்களிடம் அவர்களிடமிருந்த கார்களை லீசுக்கு விட்டார்கள். அப்போதிருந்து தொடங்கிய எங்கள் பயணம் இன்று 20 க்கும் மேற்பட்ட டூரிஸ்ட் கார்களை இயக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
நாங்கள் திரைப்படத்துறையினருடன் தொடர்பு வைத்திருந்தோம். அப்போது எல்லாம் ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டுமானால், ஃபிலிம் சுருள்களைத் திரையரங்குகளில் உரிய நேரத்தில் சேர்ப்பிக்க வேண்டும். எங்களிடம்  இரவு 12 மணிக்கு  ஃபிலிம் சுருளைக் கொடுத்தாலும், இரவு முழுவதும் கார் ஓட்டி மறுநாள் காலையில் உரிய இடத்தில் சேர்த்துவிடுவோம். 
இந்தத் தொழிலுக்கு நேரம் மிகவும் முக்கியம். இரவு,பகல் எந்நேரத்தில் அழைத்தாலும் நாங்கள் உடனே காருடன் சென்றுவிடுவோம்.
டிராவல்ஸ் தொழிலில் டிரைவர்களின் பங்கு முக்கியமானது. நாங்கள் எங்களிடம் வேலை செய்யும் டிரைவர்களுக்கு வெளியிடங்களில் தரப்படும் சம்பளம், பேட்டா அளவுக்கு சிறிதும் குறையாமல் தந்துவிடுவோம். அதோடு அவர்களுக்குத் தனிப்பட்ட முறையிலும் உதவி செய்வோம். கல்விக் கட்டணம், எதிர்பாராத மருத்துவச் செலவு ஆகியவற்றுக்கு உடனடியாக உதவுவோம். இதனால் எந்த நேரத்தில் எந்த இடத்துக்குப் போகச் சொன்னாலும் எங்களிடம் வேலை செய்யும் டிரைவர்கள் மனம் கோணாமல், முகம் சுளிக்காமல் காரை எடுத்துக் கொண்டு போவார்கள்.
டிராவல்ஸ் தொழில் வரும் அடுத்த பிரச்னை கார்கள் திடீரென்று பழுதாகிவிடுவது. எங்களுடைய கார்களைப் பழுதுபார்ப்பவர்களுடன் நல்ல உறவை நாங்கள் பேணுகிறோம். இதனால் எவ்வளவு சீக்கிரம் பழுதுகளை நீக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பழுதுகளை நீக்கிக் கொடுத்துவிடுவார்கள்.
இந்தத் தொழிலை நடத்துபவர்கள் நேரம், காலம் பார்க்கக் கூடாது. எந்த நேரத்திலும் வாடிக்கையாளர்களிடம் இருந்து அழைப்பு வரலாம். எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். 
எங்களுக்கென்று வேறு எந்தப் பொழுதுபோக்கும் இல்லை. அதுபோல எங்கள் நிறுவனத்துக்கு விடுமுறையும் இல்லை. வேலைதான் பொழுதுபோக்கு. இப்படிப்பட்ட மனநிலை இருப்பவர்கள்தான் இந்தத் தொழில் வெற்றி பெற முடியும். 
இப்போது நிறைய கால் டாக்ஸி நிறுவனங்கள் போட்டிக்கு வந்துவிட்டன. அதனால் எங்களுக்குப் பாதிப்பு ஏற்படவில்லையா? என்று நிறையப் பேர் கேட்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை பாதிப்பில்லை. 
எந்த நேரம் கூப்பிட்டாலும் உடனே நாங்கள் காருடன் சென்றுவிடுவதால் எங்களை வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் கூப்பிடுகிறார்கள். சென்ற ஆண்டு பெய்த தொடர் மழையின்போதும் எங்களுடைய கார்கள் ஓடிக் கொண்டிருந்தன.
வாடிக்கையாளர்களுக்கு டிரைவர்கள் மீது நம்பிக்கை வர வேண்டும். கால் டாக்ஸி யார் என்று வாடிக்கையாளர்களுக்குத் தெரியாது. எனவே எங்களையே அழைக்கிறார்கள். இந்தப் பகுதியிலேயே எங்களுக்கு 400 வாடிக்கையாளர்களுக்கு மேல் இருக்கிறார்கள்'' என்கிறார்கள் பெருமையாக.

முழு கட்டுரையைப் படிக்க →