ஸ்பெஷல்

 அருண்மொழி ஆசானுக்கு ஓர் ஆரவாரக் கலைவிழா!

டிஸ்கவரி புத்தக நிலையத்தில் ஆசிரியர் தினத்தையொட்டி ஒரு விழா நடைபெற்றது

தினமணி

சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தையொட்டி ஒரு விழா நடைபெற்றது. வித்தியாசமான கலைவிழாவாகவும் அது அமைந்திருந்தது. கல்லூரிகளில் திரைப்பட ரசனைக்கான பல வகுப்புகளை இன்றும் நடத்தி வரும் அருண்மொழி, 1974 களிலிருந்து திரைப்படம், குறும்படம்  மற்றும் ஆவணப் படங்களை இயக்கிக் கொண்டிருப்பவர். தன்னுடைய கலையை பல மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தும் வருகிறார். இவரது ஆசிரியர் பணியினை கொண்டாடும் விதமாக அவரது மாணவ, மாணவிகள் முன்னின்று ஒழுங்குபடுத்திய கலைவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 

இந்நிகழ்வில் ஏழாவது மனிதன், ஏர்முனை, விட்டு விடுதலையாகி (பெண்ணியம் குறித்த படம்) போன்ற திரைக்கதைப் படங்களிலிருந்தும், நில மோசடி, இரண்டாம் பிறவி (திருநங்கைகள் பற்றியது), நகுலன், லா.ச.ரா, வெங்கட் சாமிநாதன், ராஜம் கிருஷ்ணன் போன்றோரின் ஆவணப் படங்களிலிருந்து தொகுக்கப்பட்ட காட்சிகள் திரையிடப்பட்டது. அதன் பின்னர் அருண்மொழியுடன் தொடர்ந்து பயணிக்கும் கலைஞர்களான ஓவியர் மருது, இயக்குனர்கள் வசந்தபாலன், மார்டின் ரெப்கா, அஜயன் பாலா, பிருந்தா சாரதி, ஒளிப்பதிவாளர் சரோஜ் சந்திரபாடி, எழுத்தாளர் கி.அ.சச்சிதானந்தம், கவிஞர்கள் ஜெயபாஸ்கரன், பரிணாமன், , நடிகர்கள் நாஸர், பாவெல் ஆகியோர் அவரை சிறப்பித்து பேசினார்கள்.

திரைப்பட இயக்குனர் வசந்தபாலன் சிறப்புரை ஆற்றுகையில் அருண்மொழி ஒரு போதும் தன்னை முன் நிறுத்தாது தம் மாணவர்களை வழி நடத்தி செல்வதையே பணியாக செய்து வருவதையும் அவரது அர்ப்பணிப்பு உணர்வையும் பாராட்டினார். மார்டின் ரெப்கா ஜெர்மனி நாட்டிலிருந்து இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியது ஒரு ஹைலைட்.  ஸ்லோவேகியா இந்தியா கூட்டுறவு முறையில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் அசோகமித்ரனின் ‘புலிக் கலைஞன்’அதை இயக்கியவர் தான் மார்டின் ரெப்கா. இப்படத்தின் இணை தயாரிப்பாளரான அருண்மொழியின் கதைத் தேர்வையும், பங்களிப்பையும், முழு ஈடுபாட்டுத் தன்மையையும் மிகவும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

ஓவியர் மருது தனக்கும் அருண்மொழிக்கும் நாற்பதாண்டு கால நட்பைப் பற்றி பேசி, அருண்மொழியின் ஆவணப்படங்களைத் திரட்டி பத்திரப்படுத்தவேண்டும், கிடைப்பதற்கரிய பொக்கிஷங்கள் அதில் உள்ளன என்று வேண்டுகோள் விடுத்தார். நிகழ்ச்சியில் பேசிய மற்ற அனைவரும் ஆத்மார்த்தமாக பேசி தங்களுக்கும் அருண்மொழிக்கும் உள்ள நட்பை சிலாகித்தனர். காலம் பல தாண்டியும் மாறாத ஒரு கலைஞனாக அருண்மொழி அனைவர் மனத்திலும் பதிந்திருந்தார். ஓர் ஆசிரியர் அவர் வாழும் காலத்திலேயே அவரது சிறப்பான பணிக்காக கொண்டாடப்பட்டது நெகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்தியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT