சாதனைப் பெண் இந்தியாவின் முதல் பெண் கமாண்டோ சீமாராவ்!
என்னை புரிந்து கொள்ளவும், வேலைகளைப் பகிர்ந்து கொள்ளவும் அன்பான கணவர் இருந்ததால் வீட்டிலாகட்டும் பயிற்சியிலாகட்டும் எவ்வித பிரச்னையும் இல்லை.
போர்க்களத்தில் ராணுவ வீரர்களுக்கு பெரும் உதவியாக உள்ள கமாண்டோக்கள் கடுமையான பயிற்சிகளைப் பெறுவதுண்டு. 30கி.மீ. மாரத்தான், பாராசூட் பயிற்சி, தலை மீது ஆப்பிள் வைத்து குறி பார்த்து சுடுவது, ஒரே கையில் தன்னைவிட இருமடங்கு பலசாலியான எதிராளியை மடக்குவது, கையில் கத்தியுடன் உள்ள எதிராளியை மடக்கி பிடிப்பது. 60 கிலோ எடையுள்ள ராணுவ கருவிகள், வெடிகுண்டுகள் ஆகியவைகளை சுமந்து செல்வது போன்ற பயிற்சிகளில் தேர்ச்சிபெற்ற இந்தியாவின் முதலாவது மற்றும் ஒரே ஒரு பெண் கமாண்டோ என்ற சிறப்பைப் பெற்றவர் டாக்டர் சீமாராவ் (47) பயிற்சியை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை சீமாராவ் விளக்குகிறார்;
தொழில் ரீதியாக டாக்டரான நீங்கள் கமாண்டோ பயிற்சிபெற காரணமென்ன?
என்னுடைய தந்தை ரமாகாந்த் சினாரி ஒரு சுதந்திர போராட்ட வீரர். இந்தியா சுதந்திரம் பெற நடந்த போராட்டங்களின் போது நடந்த சம்பவங்களையும், உயிர்விட்ட தியாகிகள் குறித்தும் அடிக்கடி அவர் என்னிடம் கூறுவார். என்னுடைய கணவர் தீபக்ராவ் ராணுவத்தில் மேஜராக உள்ளார். இந்த நாட்டிற்காக ஏதாவது செய்யவேண்டுமென்ற எண்ணம் மனதில் தோன்றியது.
வாழ்க்கை அபூர்வமானது. ஏதாவது ஒரு பாதையை நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது மாற்றங்கள் வரும், அப்போது வேறு பாதைக்கு செல்ல தோன்றும். டாக்டராக இருந்தபோது பெண் கமாண்டோ பயிற்சியாளர்கள் யாருமே இல்லை என்பது தெரிந்தவுடன், இதை ஒரு சவாலாக ஏற்கலாமே என்ற எண்ணம் மனதில் தோன்றியது.
வீட்டில் எப்படி உங்கள் முடிவை ஏற்றுக் கொண்டார்கள்?
வீட்டைப் பொருத்தவரை என்னை புரிந்து கொள்ளவும், வேலைகளைப் பகிர்ந்து கொள்ளவும் அன்பான கணவர் இருந்ததால் வீட்டிலாகட்டும் பயிற்சியிலாகட்டும் எவ்வித பிரச்னையும் இல்லை. வாழ்க்கை எப்போதுமே ஒரு போர்க்களம்தான். உடல் ரீதியாகவும் நிறைய சவால்கள் ஏற்படுவதுண்டு. உடல் ரீதியான சாவல்களை ஏற்கும்போது காயங்கள் ஏற்படலாம். மனோரீதியான சவால்கள் எப்படியும் வெற்றி பெற வேண்டும்; சாதிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தும். பயிற்சியின்போது தலையில் ஏற்பட்ட காயத்தினால் நினைவாற்றலை இழந்தேன். அம்னீஷியாவால் பாதிக்கப்பட்டேன். இருந்தாலும் பின்வாங்காமல் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டேன். வாழ்க்கையில் இடையூறுகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
பயிற்சியின்போது ஆண்- பெண் என்ற வித்தியாசம் ஏற்பட்டதுண்டா?
எந்த துறையாக இருந்தாலும் ஆணாகட்டும் பெண்ணாகட்டும் தங்கள் திறமையை காட்ட முயற்சிப்பது வழக்கமானது தான். நான் தேர்ந்தெடுத்த துறை உடல் ரீதியான திறமையை வெளிப்படுத்துவது என்பதால் இந்த வித்தியாசத்தைப் பற்றி கவலைப்படவில்லை. இதனால் இந்தியாவின் முதல் ஒரே ஒரு பெண் கமாண்டோ மற்றும் ஆசியாவிலேயே பெண்களில் பிளாக்பெல்ட் பெற்ற மூத்த பெண் பயிற்சியாளர்களில் ஏழாவது பெண் என்ற பெருமைகளும் எனக்கு கிடைத்தது. இதனால் சில இழப்புகளையும் ஏற்க வேண்டியதாயிற்று.
அப்படி என்ன இழப்பு?
நான் இல்லையென்றாலும் குடும்பம் சிரமமின்றி நடக்க என் குடும்பத்தினர் மிகவும் உதவியாக இருந்தனர். நான் எடுத்துக் கொண்டது உடல்ரீதியான பயிற்சி என்பதால், குழந்தை பெறுவதை தவிர்த்துவிட்டேன். இதற்கு என் கணவரும் குடும்பத்தினரும் சம்மதித்ததால் குடும்பம் என்பதை முழுமைப்படுத்த பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து கொண்டோம். அவளும் எங்கள் எதிர்பார்ப்புக்கேற்ப வலிமையாகவும், புத்திசாலியாகவும் வளர்ந்து வருகிறாள். திரைப்படங்களை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் என்பதால் இந்தியாவின் மார்ஷல் ஆர்ட் சண்டை பயிற்சியை விளக்கும் "ஹத்தாபயி' என்ற படமொன்றை தயாரித்து பாராட்டுகளையும் பெற்றுள்ளேன்.