ஸ்பெஷல்

வீட்ல தாத்தா தான் இல்லை; அட்லீஸ்ட் தாத்தாக் குடையாவது இருக்கா?

மறைந்த பழம்பெரும் நடிகர் வி.கே.ராமசாமி, டி.ராஜேந்தர், ஆனந்த் பாபு, ஜான் விஜய் உள்ளிட்டோர் இவர்களது ரெகுலர் கஸ்டமர்களாம். அவங்க எப்பவும் குடை வாங்க இங்கே தான் வருவார்கள் என்றார். 

கார்த்திகா வாசுதேவன்

மான் மார்க் குடை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இல்லை என்றால் தியாகராய நகர் என்எஸ்சி போஸ் சாலையில் இருக்கும் இப்ராஹிம் கரீம் & சன்ஸ் கடைக்கு ஒருமுறை சென்று பார்த்தீர்களானால், நேரடியாகவே மான் மார்க் குடைகளை கண்டு ரசித்து விட்டு வரலாம். அட... அந்தக் குடையில் ரசிப்பதற்கு அப்படி என்ன இருக்கிறது என்கிறீர்களா? கவர்ந்திழுக்கக் கூடிய விசயமென ஏதுமில்லாவிட்டாலும் ஒரு தலைமுறை மனிதர்களின் ஞாபகப் பொதிகளை கிளறி விட்டு பழங்கதைகளை நினைவு கூர மிக நல்லதொரு வாய்ப்பை ஒரு வேளை அந்தக் குடைகள் ஏற்படுத்தித் தரலாம். ஏனெனில் குடை கம் வாக்கிங் ஸ்டிக் ஆகப் பயன்படுத்தப் பட்டு வந்த அத்தகைய குடைகளைக் காண்பது இப்போது அபூர்வம்!

தாத்தா குடைகள் என்று அழைக்கப் படும் அந்த வகைக் குடைகள் கருப்பு நிறத்தில் மட்டுமே கிடைக்கும். கிராமப் புறங்களில் முன்பெல்லாம் குடை என்றாலே அது மட்டும் தான் குடை! அந்தக் குடைகள் ஒரு போது, வயதான கிராமத்து தனவந்தர்களின் அந்தஸ்து அடையாளங்களாக இருந்தன. பிற்பாடு பட்டணவாசிகள் அவர்களைப் பகடி செய்யத் தோதான பட்டிக்காட்டுக் கலாச்சார அடையாளங்களாகவும் மாறிப் போயின. 

இப்போது கடைகளில் பல தினுசுகளில் ஃபேன்ஸி குடைகள், புதுப்புது வெரைட்டிகளில் கிடைக்கின்றன. திறந்த வெளி ஐஸ் கிரீம் பார்லர்கள், ரூஃப் டாப் கார்டன்கள் போன்றவற்றில் பயன்படுத்தப் படும் மெகா சைஸ் குடைகள் தொடங்கி, பூக்கார அக்காவும், பழ வண்டி அண்ணாவும் நிழல் வேண்டி தங்களுக்காக விரித்திருக்கும் கார்டன் குடைகள், பள்ளி ஆசிரியைகள் பயன்படுத்தும் ஹேண்ட் பேகில் அடங்கி விடக்கூடிய 2 ஃபோல்டு, 5 ஃபோல்டு பட்டன்குடைகள், கிண்டர்கார்டன் குழந்தைகள் வெயிலுக்கும், மழைக்கும் பயன்படுத்தும் தலையோடு பொருத்திக் கொள்ளத் தோதான தொப்பிக் குடைகள், கிராமத்துப் பழம் பெரியவர்கள் பயன்படுத்தும் தாத்தா குடைகள், காசி யாத்திரை செல்லப் பயன்படுத்தும் அலங்காரக் குடைகள், என பட்டியலிடத் தொடங்குகையில் குடைகளின் வகைகள் நீண்டு கொண்டே செல்கின்றன. இப்போது குடைகளில் டார்ச் லைட், ஃபேன் எல்லாம் வைத்து நவீன ரகக் குடைகள் கூட வந்து விட்டன. அது மட்டுமல்ல குடை என்றால் அதற்கு குறிப்பிட்ட ஒரே ஒரு வடிவம் தான் என்றில்லாமல் இதய வடிவில் கூட இப்போது குடைகள் கிடைக்கிறது.

மேலே சொல்லப்பட்ட எல்லா வகைக் குடைகளையும் நேரில் கண்டு குசலம் விசாரிக்கும் ஆர்வமிருந்தால் இப்ராஹிம் கரீம்& சன்ஸின் நூற்றாண்டுப் பழமை கண்ட   என் எஸ் சி போஸ் சாலை குடைக் கடைக்கு ஒரு நடை சென்று வரலாம். தாத்தாக் குடைகள் முதல் நண்டு, சிண்டு பேரன் பேத்திகள் பயன்படுத்தும் ஃபேன்ஸி குடைகள் வரை அங்கு மர ரேக்குகளில் ஒன்றையொன்று இடித்துக் கொண்டு அமர்ந்தும், படுத்தும், மயிற்தோகை போல குடை மடக்குகள் விரியத் திறக்க   பலப் பல நிறங்களில் அணிவகுத்து நின்றும்  அழகாகக் காட்சி தருகின்றன.

இது அவர்களது ஷோ ரூம் மட்டுமல்ல வொர்க்ஷாப் ஆகவும் இதையே தான் பயன்படுத்தி வருகிறார்களாம். ஷோரூம் மேனேஜர் சுரேஷிடம் அவர்களது மான் மார்க் குடை புராணத்தைக் கேட்டதும் சந்தோசமாகக் கூறத் தொடங்குகிறார்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், சென்னையில் இருக்கும் இந்த ஷோ ரூமில் மட்டும் தான் இந்த தாத்தா குடைகள் விற்பனைக்கு கிடைக்குமாம். மும்பையில் இருக்கும் இவர்களது ஷோ ரூமில் இதே விதமான குடைகளை வெறுமே காட்சிக்காக மட்டும் அடுக்கி வைத்திருக்கிறார்களாம். ‘ரெகுலர் குடைகள் இப்படித்தான் இருக்கும் என மும்பை வாசிகள் தெரிந்து கொள்வதற்காக அப்படிச் செய்திருக்கிறோம்’ என்கிறார் சுரேஷ். காலம் போகிற போக்கில் பழைய கால கருப்புக் குடைகளைக் கூட காட்சிக்கு வைத்து தான் அறிமுகப்படுத்த வேண்டியதாக இருக்கிறது. ஃபேஷன் அப்டேட் என்ற பெயரில் பழைய பாரம்பரிய வடிவங்கள் அனைத்தும் திரிந்து காணாமலாகி வரும் லிஸ்டில் இன்று இந்தக் குடைகளும் அடக்கம்.  

1860 ஆம் ஆண்டு வாக்கில் மும்பையைப் பூர்வீகமாகக் கொண்ட இப்ராஹிம் கரீம் தனது வாழ்வாதரத்திற்காக குடை ரிப்பேர் செய்யும் வேலையைக் கையிலெடுத்தார். முதலில் குடை ரிப்பேர் செய்வதற்குத் தேவையான இயந்திரத்தை இங்கிலாந்தில் இருந்து வரவழைத்த இப்ராஹிம் சின்ன வொர்க் ஷாப் ஒன்றைத் திறந்து தனது வேலைகளைத் துவக்குகிறார். அப்படித் தொடங்கிய அந்த வொர்க் ஷாப் இன்று சென்னை, மும்பை என்று பரந்து, விரிந்து இரு தலைமுறைகள் தாண்டி அவர்களுக்கு நற்பெயர் பெற்றுத் தந்த பரம்பரைத் தொழிலாகி விட்டது.

முதலில் குடை ரிப்பேர் செய்வதை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்த இப்ராஹிம் மெல்ல, மெல்ல குடைகளைத் தயார் செய்வதற்கும் கற்றுக் கொண்டு, தானே சொந்தமாகக் குடைகளைத் தயாரிக்கத் தொடங்கினார். இப்ராஹிம் தயாரித்தவையே பின்னாளில் தாத்தா குடைகள் என்று அழைக்கப்பட்ட கருப்பு நிறக் குடைகள். இந்தக் குடைகளை வாக்கிங் ஸ்டிக்குகளாகவும் பயன்படுத்துமாறு இப்ராஹிம் வடிவமைத்ததால் அது பெரு வெற்றி பெற்றது. அதற்கு பின்னரே தனது குடைகளுக்கு மான் மார்க் குடைகள் எனப் பெயரிட்டார் அவர். இப்படித்தான் மான் மார்க் குடைகள் மும்பையிலிருந்து, கல்கத்தா, சென்னை என்று பரந்து விரிந்து இன்று உலக நாடுகள் பலவற்றுக்கும் கூட ஏற்றுமதியாகிறதாம்.

இப்ராஹிமின் வொர்க்ஷாப்பில் ஆரம்பத்தில் 30 முதல் 40 பேர் குடை தயாரிக்கும் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் காலம் மாற, மாற மனிதர்களின் தேவை குறைந்து இயந்திரங்களின் பயன் அதிகரிக்கவே தற்போது இவரது வொர்க் ஷாப்பில் 99 % தயாரிப்பு வேலைகளை இயந்திரங்கள் தான் செய்கின்றனவாம். முன்பெல்லாம் ஒரு குடை தயாராக வேண்டுமானால், குடைக்கான துணிகளைத் தைக்க, ஃப்ரேம்களை அடுக்கி தயார் நிலையில் வைக்க, என எல்லா வேலைகளையும் கச்சிதமாக முடிக்க நான்கு முதல் 5 நபர்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை. இயந்திரங்கள் மனிதர்களை விட வேகமாக அதிக எண்ணிக்கையிலான குடைகளைத் தயார் செய்து விடுகின்றன என்கிறார் சுரேஷ் ஷா.

இன்று அவர்களது சென்னை வொர்க் ஷாப்பில் இரண்டே இரண்டு ஊழியர்கள் தான் இருக்கிறார்கள். அவர்களும் கூட கார்டன் குடைகள் எனப்படும் மெகா குடைகளை மட்டுமே தயார் செய்வார்கள். மற்றபடி மீதி அனைத்து வகைக் குடைகளும் அவர்களது மும்பை வொர்க்ஷாப்பில் தயாராகி சென்னைக்கு அனுப்பப் படுவதாக சுரேஷ் கூறுகிறார்.

குடை விற்பனை என்பது ஒரு சீஸனல் வியாபாரம். வெயில் காலங்களில் 30 முதல் 40 % விற்பனையில் சரிவு இருக்கும். மழைக்காலங்களில் விற்பனை அதிகரிக்கும். எப்படிப் பார்த்தாலும் வருடம் முழுவதும் நஷ்டமில்லாமல் வியாபாரம் ஆகக் கூடிய ஒரு வியாபாரம் இது. எங்களுக்கு அமோக விற்பனை நடந்தது எப்போதென்றால் 2015 ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ள நாட்களில் தான். அப்போது தொடர்ந்து பல நாட்கள் நிற்கக் கூட இடமில்லாமல் வாடிக்கையாளர்கள் நிறைந்திருந்தனர். இங்கே இன்னொரு விசயத்தையும் குறிப்பிட விரும்புகிறேன், அது என்னவென்றால், இப்போதும் பழைய தாத்தா குடை என்று சொல்லப் படக் கூடிய கருப்பு நிறக் குடைகளை வாங்க இங்கே தமிழ்நாட்டில் மட்டும் தான் வாடிக்கையாளர்கள் உண்டு. வேறு எங்கும் அவற்றைத் தேட ஆட்கள் இல்லை. மற்ற இடங்களில் எல்லாம் சராசரியாக ஃபேன்ஸி குடைகள் விற்பனையாகும்.

இப்போதெல்லாம் வெயில், மழைக்காக மட்டுமே ரெகுலர் குடைகள் வாங்குவது என்றில்லாமல் அரசியல் கட்சிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்டவை தங்களது கட்சி மற்றும், நிறுவனங்களின் சின்னங்களையும், முத்திரைகளையும் அச்சிட்டு பொது மக்களிடையே பிரபலப்படுத்த மெகா, மெகா சைஸ் குடைகளை ஆர்டர் செய்கிறார்கள். தவிர பூ மற்றும் பழ விற்பனையாளர்கள், நடை பாதை குறுந்தொழில் கடைக்காரர்கள் உள்ளிட்டோர் கார்டன் டைப் மெகா குடைகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இது தவிர காசி யாத்திரைக்கான அலங்காரக் குடைகள் விற்பனையும் அமோகமாக இருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் குடைகளுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

மான் மார்க் குடைக்கதை கேட்டு முடித்து விடைபெறுகையில் கடைசியாக சுரேஷ் பகிர்ந்து கொண்டது, மறைந்த பழம்பெரும் நடிகர் வி.கே.ராமசாமி, டி.ராஜேந்தர், ஆனந்த் பாபு, ஜான் விஜய் உள்ளிட்டோர் இவர்களது ரெகுலர் கஸ்டமர்களாம். அவங்க எப்பவும் குடை வாங்க இங்கே தான் வருவார்கள் என்றார். 

Article concept courtsy: The new indian express

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நானும் மக்களும் ரத்தமும் சதையும், உடலும் உயிரும்..! கண்கலங்கிய விஜய்

விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு

மீண்டும் நடிக்க வரும் ரம்பா!

வாக்காளர் இறுதிப் பட்டியல்! தருமபுரியில் 12.40 லட்சம் பேர்!

வேலூரில் விஜய் சொன்ன குட்டிக் கதை!

SCROLL FOR NEXT