ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்தில் (வைசாக்) கின்னஸ் சாதனை முயற்சியாக அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மூன்று பாடல்களுக்கு ஒரே நேரத்தில் சுமார் 7000 மாணவிகள் இணைந்து குச்சிப்புடி நடனம் ஆடினர்.
ஆந்திராவின் வடக்கு கடற்கரை மாவட்டங்களின் அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளில் பயிலும் 7000 மாணவிகள் இந்த சாதனை நிகழ்வில் பங்கேற்றனர். அம்பேத்கரின் 125 வது பிறந்தநாளை ஒட்டி அவரது நினைவுகளைப் போற்றும் விதத்தில் அம்பேத்கரின் வாழ்க்கையை இன்றைய தலைமுறையினரும் எளிதில் அறியும் வண்ணம் எழுதப்பட்ட மூன்று பாடல்களுக்கு அம்மாணவிகள் ஆந்திராவின் பாரம்பரிய நடமான குச்சிப்புடி நடனம் ஆடினர்.
இந்த மாபெரும் நிகழ்வை ஆந்திர அரசின் சமூக நலத்துறையும், ஆந்திர அரசின் உண்டு, உறவிடப் பள்ளிகளின் கூட்டமைப்பும் இணைந்து நடத்தியது.
பாரம்பரிய குச்சுப்புடி நடனத்தைப் பொறுத்தவரை இதற்கு முன்பு 6,117 கலைஞர்கள் இணைந்து குச்சிப்புடி நடனம் ஆடியது தான் கின்னஸ் சாதனையாகப் பதிவானது. அந்த முயற்சியை இது முறியடித்து விட்டது இம்மாபெரும் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள் அனைவரும் கடந்த இரண்டு மாதங்களாக திறமை வாய்ந்த பாரம்பரிய குச்சுப்புடி நடனக் கலைஞர்களிடம் பயிற்சி பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கின்னஸ் சாதனை முயற்சி குறித்துப் பேசுகையில் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு; ‘குச்சுப்புடி ஆந்திராவின் பாரம்பரிய நடனம், இதன் பெருமையை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்த வேண்டியது நம் அனைவரின் கடமை!’ என்றார்.
மேலும் அவர் பேசுகையில்; குச்சிப்புடி பாரம்பரிய நடனக்கலை வளர்ச்சிக்காக ஆந்திர மாநில அரசின் பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் தங்களது புது தலைநகரமாக உள்ள அமராவதியில் ‘குச்சுப்புடி அகாடமி’ ஒன்றும் பிரத்யேகமாக அமைய உள்ளதாக அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.