வேகமாக வளர்ந்துவரும் நவீனத்திற்கு ஏற்ப மக்களும் மாறிக்கொண்டு வருகிறார்கள். அதில் குறிப்பிட்டத்தக்க ஒன்றுதான் ஆன்லைன் ஷாப்பிங்.
முன்பெல்லாம் கடைகளுக்குச் சென்று நாம் பொருள்களை வாங்கும் சூழல் இருந்துவந்த நிலையில் இன்று அனைத்திற்கும் ஆன்லைன் ஷாப்பிங்தான்.
வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் முதல் ஆடம்பரப் பொருள்கள் வரை வீட்டில் இருந்துகொண்டே ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும். எளிதாக மிக விரைவாகவும் இப்போது அனைத்தும் கிடைக்கின்றன. பொருள்களை விரைந்து டெலிவரி செய்வதற்கு எனவும் பல நிறுவனங்கள் வந்துவிட்டன.
ஆன்லைனில் அதிகமாக பொருள்கள் வாங்குவது உங்கள் பணம் செலவாவது மட்டுமன்றி உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்குமாம், எப்படி?
ஆன்லைன் ஷாப்பிங், ஒருவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிப்பதாக பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
சிலர் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமை ஆகியிருப்பார்கள். தினமும் ஆன்லைனில் ஆர்டர் போடுவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். அவர்கள் ஒருநாள் ஆர்டர் போடவில்லை என்றால் அவர்களுக்கு தூக்கம் வராது என்ற நிலையில் இருப்பார்கள், இதுவும் ஒருவகை அடிமைதான். மருத்துவத் துறையிலே இதனை 'ஆன்லைன் ஷாப்பிங் அடிமையாதல்'(OSA) என வகைப்படுத்தி தனியாக சிகிச்சை அளிக்கின்றனர்.
இதனால் அவர்களுக்கு கவலை, மனச்சோர்வு ஏற்படலாம். மற்றவர்களின் கருத்துகளால் மரியாதை குறைவாக உணரலாம். பணம் செலவழிப்பது குறித்தும் வருத்தம் ஏற்படலாம். இறுதியாக அவர்களுக்குள் ஒரு குற்ற உணர்வுகூட ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதனால் வீட்டு பொருளாதாரத்திலும் நிதிச் சிக்கல் ஏற்படும் ஆபத்து இருக்கிறது. அதனாலும் மன உளைச்சலும் ஏற்படலாம். இது தீவிரமாக இருப்பவர்களுக்கு மன அழுத்தம், சலிப்பு போன்ற எதிர்மறை எண்ணங்கள் அதிகம் வரும்.
ஏற்கெனவே பெரும்பாலும் அலுவலகத்தில் உட்கார்ந்தேதான் வேலை செய்கிறோம். வீட்டிலும் அமர்ந்தே இருந்தால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். இது உடல் பருமன், இதய நோய் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது கணினி அல்லது மொபைல்போன் முன்பாக நீண்ட நேரம் இருக்கும்போது அது கழுத்து வலி, முதுகு வலி, தசை வலி பிரச்னையை ஏற்படுத்தக்கூடும். தூக்கத்திலும் பிரச்னைகள் வரலாம்.
இவ்வாறு ஆன்லைன் ஷாப்பிங்குடன் உடல் மற்றும் மன ரீதியான பல பிரச்சனைகள் தொடர்புடையவையாக இருக்கின்றன.
என்ன செய்யலாம்?
ஆன்லைனில் பொருள்கள் வாங்குவது தவறு அல்ல, அவசரத்திற்கு வெளியில் செல்ல முடியாத நிலையில் ஆன்லைனில் வாங்கலாம், ஆனால் முடிந்தவரை நேரில் சென்று வாங்க முயற்சி செய்யுங்கள். கடைகள் அருகில் இருந்தால் நடந்து சென்று வாங்கலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.
இன்றைய சூழ்நிலையில் பல்வேறு நோய்களில் இருந்து தப்பிக்க கண்டிப்பாக உடல் இயக்கம் தேவை.
அடுத்து அவசியம் தேவைப்படும் பொருள்களை மட்டும் வாங்கும்போது செலவு குறையும். முடிந்தால் பட்ஜெட் போட்டுக்கொள்ளலாம்.
நீங்கள் விரும்பும் பொருள்களை பட்டியலில் வைத்துக்கொள்ளுங்கள்('add to card') பின்னர் சில நாள்கள் கழித்து அது அவசியம் தேவைதானா என்பதை ஒருமுறை சரிபார்த்து, தேவைப்பட்டால் வாங்குங்கள். இந்த காலத்தில் நீங்கள் அந்த பொருள்களை வாங்க விரும்பாமல்கூட போகலாம்.
சமூக ஊடங்களின் பயன்பாட்டுக்கும் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஏன் பொருள்களை வாங்கத் தூண்டுவதே சமூக ஊடகங்கள்தான். அதனால் அவற்றில் இருந்து தள்ளியே இருங்கள். இல்லையெனில் மனதைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளப் பழகுங்கள்.
குறிப்பாக உணவுப் பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வதைத் தவிருங்கள்.
எனவே செலவையும் குறைக்கவும் உடல்நலத்தைப் பேணவும் ஆன்லைன் ஷாப்பிங்கை குறைக்க முயற்சி செய்யுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.