ஏடிஎச்டி(ADHD) என்பது அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைபர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் (Attention Deficit Hyperactivity Disorder). இது கவனக்குறைவு / மிகையியக்கக் குறைபாடு என்று கூறலாம். இது குழந்தைகள் அதிகமாக இதனால் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் சிலருக்கு வளரும்போது இது சரியாகிவிடலாம், சிலருக்கு கடைசிவரை பாதிப்பு இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
பள்ளி வயது குழந்தைகளிடையே அதிகம் காணப்படும் இந்த கோளாறு, தோராயமாக 7% குழந்தைகளைப் பாதிக்கிறது. பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளிடம் 3 மடங்கு அதிகம் காணப்படுகிறது.
பிரபலங்களான நடிகை ஆலியா பட், நடிகர்கள் ஃபஹத் ஃபாசில், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் ஏடிஎச்டி கோளாறால் தாங்கள் பாதிக்கப்பட்டது பற்றி பேசியுள்ளனர்.
திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியின் மனநலப் பேராசிரியர் டாக்டர் அருண் பி நாயர் இதுபற்றி கூறுகையில், "ஏடிஎச்டி என்பது டோபமைன் குறைபாட்டால் ஏற்படும் ஒரு நரம்பியல் கோளாறு. மூளை செயல்பாடுகளில் முக்கியமான இந்த டோபமைனின் முக்கிய வேலை கவனம். டோபமைன் அளவு குறையும்போது மூளையில் உணர்வில் மாற்றம் ஏற்பட்டு கவனக்குறைவு ஏற்படுகிறது. அதனால் அனைத்து தூண்டுதலுக்கும் குழந்தை ஒரேமாதிரியாக தீவிரம் காட்டும்.
வகுப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றால் மூளையில் போதுமான அளவு டோபமைன் இருக்க வேண்டும். இல்லையெனில் கவனச்சிதறல் ஏற்படலாம். பெரும்பாலான குழந்தைகளுக்கு 7 வயதிற்கு முன்பே ஏடிஎச்டி அறிகுறிகள் வெளிப்படுகிறது. ஆனால் சிலருக்கு இது 12 வயதில்தான் தெரிகிறது.
தற்போது இணைய பயன்பாடு எளிதாக இருப்பதால் பலரும் ஆன்லைன் மூலமாக இதுபற்றிய தகவல்களைப் பெறுகிறார்கள். அந்த அறிகுறிகளை வைத்து தங்களுடைய குழந்தைகளுக்கும் ஏடிஎச்டி இருப்பதாக நினைக்கின்றனர். அறிகுறிகள் தொடர்ந்து 6 மாதங்கள் நீடித்தால் மட்டுமே பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது. சில நேரங்களில் பாதிப்பு இருக்கும் குழந்தைகளில் அறிகுறிகளை வைத்து கண்டறிய முடியாது. ஏடிஎச்டி பற்றிய ஆன்லைன் தகவல்கள் ஆபத்தை ஏற்படுத்தும்" என்று எச்சரிக்கிறார்.
கொச்சியைச் சேர்ந்த டாக்டர் ஜோசப் சன்னி குன்னச்சேரி, ஆன்லைன் மூலமாக பாதிப்புகளை ஓரளவு தெரிந்துகொள்ள முடியுமே தவிர நோய் இருக்கிறதா என உறுதி செய்ய கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும் என்று கூறுகிறார்.
மேலும் கூறிய அவர், 'ஏடிஎச்டி உள்ளவர்களுக்கு சுமார் 18 மாதங்கள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். தொடக்க நிலையிலே பாதிப்பைக் கண்டறிந்து பின்னர் சரியான சிகிச்சையை எடுத்துக்கொண்டால் மட்டுமே அதனை சரிசெய்ய முடியும்.
அதற்கு பெற்றோர்கள் முதலில் குழந்தைகளின் நடத்தையைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியும்போது பாராட்டுவதும் சொல்வதைக் கேட்காதபோது திட்டாமல் இருப்பதும் அவசியம். குழந்தைகள் சரியாக நடந்துகொள்ளும்போது பெற்றோர்கள் நல்ல விதத்தில் அணுகுகிறார்கள் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அவர்களை பழக்கப்படுத்த வேண்டும்.
கரோனா ஊரடங்கின்போது, உடல் செயல்பாடு குறைந்து அதிக நேர மொபைல் பயன்பாட்டினால் குழந்தைகள் அதிகமாக ஏடிஎச்டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். இதுவே தொடரும்போது இதன் பாதிப்பு அதிகமாகும் என்று எச்சரிக்கின்றனர். அதனால் முழுவதுமாக மின்னணு சாதனங்களைத் தவிர்த்து குழந்தைகளின் உடல் செயல்பாடுகளை ஊக்குவிக்கும்போது இதன் பாதிப்புகள் படிப்படியாக குறையும் என்று அறிவுறுத்துகின்றனர்.
"இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர்களிடம் இந்த பாதிப்பு இருக்கும்போது அமைதியாக இருப்பதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு மருத்துவர் உதவியுடன் முறையான சிகிச்சை முறைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வது, வீடு மற்றும் அலுவலகச் சூழல், நண்பர்கள் ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலமாக பாதிப்பை குறைக்க முடியும்" என்கிறார் ஜோசப்.
ஏடிஎச்டி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் அவர்கள் டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாகும் சூழ்நிலை வரலாம். இளம்வயதில் போதைப்பொருள் பழக்கம்கூட ஏற்படலாம். அதனால் ஏடிஎச்டி அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம் என்று டாக்டர் அருண் அறிவுறுத்துகிறார்.
கவனமின்மை அல்லது கவனக்குறைவு: குழந்தைகளுக்கு வகுப்பில் எளிதில் கவனம் சிதறுவது மற்றும் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாதது, பெரியவர்களுக்கு செய்ய வேண்டிய வேலையை மறந்துவிடுவது, பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் போவது.
அதிவேக செயல்பாடு: குழந்தை எப்போதும் ஒரு மோட்டார் மூலம் இயக்கப்படுவதுபோல் இயக்கத்திலே இருக்கும்
கட்டுப்பாடு இல்லாமை: விளைவுகளை பற்றி யோசிக்காமல் செயல்படுவது.
ஒருங்கிணைந்த அல்லது கலப்பு ஏடிஎச்டி (Combined ADHD) - இது மேற்குறிப்பிட்ட 3 அறிகுறிகளையும் கொண்டிருக்கும்.
கவனமின்மை ஏடிஎச்டி(Inattentive ADHD) - சிலருக்கு கவனக்குறைவு மட்டுமே இருக்கும். அதிவேக செயல்பாடு இருக்காது
ஹைப்பர் ஆக்டிவ் இன்பல்ஸிவ் ஏடிஎச்டி (Hyperactive-Impulsive ADHD) - குழந்தைகளுக்கு கவனம் இருக்கும், ஆனால் நடத்தை மிகவும் மோசமாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.