கோப்புப் படம் AP
ஸ்பெஷல்

நடங்கள், நடந்துகொண்டே இருங்கள்... 2026-ல் உடல்நலம் காக்க வேறென்ன செய்ய வேண்டும்?

புத்தாண்டில் எல்லாவற்றுக்கும் மேலாக உடல் மற்றும் மன நலனில் கவனம் செலுத்த வேண்டியது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

நடக்க வேண்டும், நடந்துகொண்டே இருக்க வேண்டும்... 2026-ல் வேறு என்னென்ன செய்ய வேண்டும்?

2025 முடிந்து 2026 ஆம் ஆண்டு தொடங்கவுள்ள இந்த நேரத்தில், புத்தாண்டில் நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று தீர்மானங்கள் (Resolutions) எடுத்திருப்போம். இவற்றில் முக்கியமாக இருக்க வேண்டிய ஒன்று உடல்நலத்தில் கவனம் செலுத்துவது.

மாறிவரும் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப மனிதனுக்கு நோய்களும் அதிகரித்து வருகின்றன. அதிலும் கரோனாவுக்குப் பிறகு வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பலவித உடல் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர். குழந்தைகளுக்கு உடல் பருமன், இளைஞர்களுக்கு மாரடைப்பு, நீரிழிவு, முதியோருக்கு மறதி, புற்றுநோய் என பாதிப்புகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

எனவே, வரும் ஆண்டில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய தீர்மானம் நம்முடைய உடல்நலத்தைப் பேணுவதாகும். சமீபகாலமாக மருத்துவர்களும் இதையே தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனை புத்தாண்டில் இருந்து தொடங்கினால் உடல்நலம் மேம்படுவதுடன் ஒருவித தன்னம்பிக்கையையும் கொடுக்கும்.

சத்தான உணவு

அந்த வகையில் முதலில் நல்ல சத்தான உணவுகளை உண்ண வேண்டும். தினமும் உணவில் புரதம், நார்ச்சத்து இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்குச் செயற்கையாக தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களை நாடாமல் பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், முழு தானியங்கள் என சத்துகள் முழுமையாகக் கிடைக்கக் கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

சத்தான உணவுகளைச் சாப்பிடுவது மட்டுமின்றி, அவசர அவசரமாக அள்ளிக் கொட்டாமல், மெதுவாக மென்று நிதானமாகச் சாப்பிட வேண்டும். இதுவே செரிமானத்திற்கும் தேவையான பல சுரப்புகள் உருவாகவும் மிகவும் உதவும்.

சருமப் பராமரிப்பு

அதேபோன்று அழகு சாதனப் பொருள்களுக்கு அதிகம் செலவழிக்காமல் சாதாரணமாக சருமத்தைப் பாதுகாக்கும் ஒரு சன்-ஸ்க்ரீன் போதுமானது. நீங்கள் கருப்பாக இருந்தாலும்கூட ஒரு சாதாரண சன்-ஸ்க்ரீன் போதுமானது. விலை அதிகமுள்ள செயற்கைத் தயாரிப்புகளைத் தவிர்த்துவிடுங்கள். இது உங்கள் சருமத்திற்கும் நல்லது, செலவும் குறையும். சத்தான உணவுகளைச் சாப்பிடும்போது சருமமும் பொலிவு பெறும்.

கோப்புப்படம்

உடற்பயிற்சி

பல்வேறு உடல் கோளாறுகளைத் தவிர்க்க உடற்பயிற்சி அவசியம். இதற்காக நீங்கள் ஜிம்முக்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. சாதாரணமாக வீட்டிலேயே உடற்பயிற்சிகளைச் செய்யலாம். டம்பிள்ஸ் போன்ற உபகரணங்களை வைத்து வீட்டிலேயே செய்யலாம். தேவைப்படின் ஆன்லைன் மூலமாக ஓர் உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையைப் பெறலாம்.

இதுவும் செய்ய முடியாதவர்கள் தினமும் நடக்கலாம். கிராமத்தில் இருந்தாலும் சரி, நகரத்தில் இருந்தாலும் சரி, தினமும் குறைந்தது ஒரு 15 - 20 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இது உடல், மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என ஆய்வுகள் கூறுகின்றன. வரும் காலத்தில் உடல்நலப் பிரச்னைகளைக் குறைக்க நடைப் பயிற்சி அவசியம் என்று மருத்துவர்களும் அறிவுறுத்துகின்றனர்.

உடல்நல பிரச்னைகள்

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல் கோளாறுகள் இருந்தால் அதனை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். பலருக்கு இந்த கோளாறுகள் இருப்பதே தெரிவதில்லை. அதனால் அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்ளுங்கள். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நீரிழிவு, ரத்த அழுத்த பரிசோதனை அவ்வப்போது அவசியம். இது பிற்காலத்தில் வரும் பிரச்னைகளை முன்னதாகவே சரிசெய்ய உதவும்.

தூக்கம்

தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். வேலை மற்றும் இதர பிரச்னைகள் காரணமாக பலரும் சரியாகத் தூங்குவதில்லை. நாள் ஒன்றுக்கு 7-8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். தூங்குவதற்கு முன்னதாக சில மணி நேரங்களுக்கு டிவி, ஸ்மார்ட்போன் பயன்பாடுகளைத் தவிர்க்க வேண்டும்.

sleep

மன அழுத்தம்

மன அழுத்தத்தினால்தான் தற்போது பல்வேறு உடல்ரீதியான பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, இந்த காலகட்டத்தில் மன நலனுக்கும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தொழில்நுட்பப் பயன்பாடு, ஸ்மார்ட்போன், டிவி போன்றவற்றின் பயன்பாடுகளுக்கு ஒரு வரையறை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் மீது அன்பு செலுத்துங்கள். அவர்களிடம் மனம்விட்டு பேசுங்கள். எந்த பிரச்னைகளையும் கடினமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒருவரிடம் மனம்விட்டுப் பேசும்போது பிரச்னைகளுக்கான தீர்வுகள் கிடைக்கும்.

மருத்துவர் ஆலோசனை

இந்த காலத்தில் உடல்நலப் பிரச்னைகளுக்கு சமூக ஊடகங்கள் பலவும் தீர்வு தருகின்றன. அதாவது உடல், மனநல பிரச்னைகள் குறித்து தங்களுடைய அனுபவங்களை பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஒருசிலர் எதற்கெடுத்தாலும் கூகுளை நாடுகின்றனர். இவற்றையெல்லாம் வெறும் பரிந்துரைகளாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

நல்ல முடிவுகளுக்கு மருத்துவரையே நாட வேண்டும். உங்களுக்கு இருக்கும் உடல் கோளாறுகளுக்கு ஏற்ப தகுதியான மருத்துவரை நாடி சிகிச்சை பெறுவதுடன் அவர் கூறும் அறிவுரைகளைக் கேளுங்கள். பலரும் விளம்பரத்திற்காகவே சமூக ஊடகங்களில் மக்களைக் கவரும் விதமாகப் பதிவிடுகிறார்கள். அதுகுறித்த விழிப்புணர்வு தேவை.

இப்படியான வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் அது உங்களை நன்றாக உணர வைக்கும். அதுமட்டுமின்றி ரத்த அழுத்தம், நீரிழிவு, மறதி (டிமென்ஷியா) உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்னைகளின் அபாயத்தைக் குறைக்கும், மன நலனையும் மேம்படுத்தும். எதிர்காலத்தில் வரும் உடல்நலப் பிரச்னைகளையும் தடுக்க முடியும். இறுதியாக வாழ்க்கை மீதான ஒரு நம்பிக்கையையும் கொடுக்கும். நம்முடைய உடல், நம்முடைய நலன், நம்முடைய பராமரிப்பு!

To avoid stress and diseases, what should we do in 2026?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் ஜெய்சங்கர் பங்கேற்பு! மோடியின் கடிதம் மகனிடம் ஒப்படைப்பு!

”பொய் சொல்வதற்கும் அளவு வேண்டும்!”அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு பதிலளித்த ஜெயக்குமார்! | ADMK | DMK

பாலிவுட் நடிகைக்குத் தொல்லை? சர்ச்சையில் இந்திய கேப்டன்!

ஜன நாயகன், பராசக்தி டிரைலர் தேதிகள்!

ரூ. 1 லட்சத்துக்கு கீழ் குறைந்த தங்கம்! வெள்ளி விலையிலும் மாற்றம்!

SCROLL FOR NEXT