நேரம் எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஆனாலும் அதை சரியாகப் பயன்படுத்துகிறோமா என்பதுதான் எப்போதும் ஒரு கேள்வியாக இருக்கிறது.
அதிலும் வேலைக்குச் செல்வோர் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். வார நாள்கள் முழுவதும் அலுவலகத்துக்கு. வார இறுதி நாள்களில் வீட்டில் வேலை செய்கிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு ஓய்வு என்பதே இருப்பதில்லை.
வார இறுதி நாள்களில்தான் துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, அந்த வாரம் முழுவதும் நிலுவையில் வைத்திருக்கும் வேலைகளை எல்லாம் முடிப்பது என கடுமையாக வேலை செய்கிறார்கள்.
ஒவ்வொருவரும் தங்களுக்கென்று நேரம் ஒதுக்கினால்தானே சற்று ஆறுதலாக மகிழ்ச்சியாக இருக்க முடியும். அதற்கு நேர மேலாண்மை மிகவும் முக்கியம். அதற்கு என்னவெல்லாம் செய்யலாம்? பார்க்கலாம்.
திட்டமிடல்
வார நாள்களின் இறுதியிலேயே அதாவது வெள்ளிக்கிழமையோ அல்லது சனிக்கிழமை காலையோ அந்த 2 நாள்களுக்கு என்ன வேலை இருக்கிறது என ஒரு பட்டியல் போட்டுக்கொள்ளுங்கள். இதற்கு அதிகபட்சம் ஒரு 10 நிமிடம் போதும். குடும்பத்தினரையும் ஒத்துழைக்கக் கூறி, அந்த வேலைகளை எல்லாம் விரைவாக முடித்துவிட்டு உங்களுக்கான நேரத்தைச் செலவிடுங்கள்.
முன்கூட்டியே செய்வது
வார நாள்களில் அலுவலக வேலையை மட்டுமே கவனத்தில் வைத்திருக்கிறோம். அலுவலக வேலை நேரம் முடிந்து, வீட்டில் உள்ள வேலைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக முடித்து வைக்கலாம். இது சற்று கடினமாக இருக்கலாம். ஆனால் வார இறுதி நாளில் லேசாக இருக்கும். குறைந்தபட்சம் சனிக்கிழமையாவது வேலைகளை முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை உங்களுக்கு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.
அப்போது குடும்பத்தினருடன் வெளியே செல்வது, பிடித்த விஷயங்களைச் செய்வது என நேரம் செலவழிக்கலாம். இந்த வாரம் எங்கு செல்லலாம் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
போன் வேண்டாம்
இப்போது ஸ்மார்ட்போன் பயன்பாடு அனைத்து வயதினரிடமுமே அதிகரித்துள்ள சூழலில், ஒரு உண்மை என்னவென்றால் ஒருவருடைய நேரத்தை அதிகமாக சுரண்டுவதே இந்த மொபைல்போன்கள்தான். அதனால் உங்கள் மொபைல் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுங்கள். அலுவலக அவசியம் தவிர்த்து மற்ற நேரங்களில் பயன்படுத்துவதைக் குறைக்கலாம். 'சில மணி நேரங்கள் போன் பயன்படுத்துவதில்லை' என்ற விதியைக் கடைப்பிடிக்கலாம். இதனால் உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கலாம்.
பொழுதுபோக்குடன் வேலை செய்வது
வீட்டில் வேலை செய்யும்போது அதன் கடினம் தெரியாமல் இருக்க அதை ஜாலியாக செய்ய முயற்சிக்கலாம். குறிப்பாக கடுப்பான வேலைகளை, உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டுக்கொண்டே செய்யலாம். உங்கள் துணையுடன் சேர்ந்து அந்த வேலையைச் செய்யலாம். இது உங்களுக்கான நேரத்தையும் கொடுக்கும், வேலையையும் முடிக்கலாம்.
இறுதி நேர அவசரம் வேண்டாம்
கடைசி நிமிடத்தில் எல்லா வேலைகளையும் சேர்த்து செய்வதற்கு பதிலாக சீக்கிரமாக வேலையை முடித்துவிட்டு ஓய்வெடுங்கள். அடுத்த நாள் வேலைக்குச் செல்வதற்கோ அல்லது உங்கள் கணவர், குழந்தைகளுக்குத் தேவையானவற்றை முன்கூட்டியே எடுத்துவைத்துவிட்டு அன்று ரிலாக்ஸாக தூங்கச் செல்லுங்கள்.
வாழ்க்கையில் நம்முடைய மகிழ்ச்சிக்காகவே நாம் வேலை செய்கிறோம். அந்த வேலையே நம் மகிழ்ச்சியை பறித்துக்கொண்டு விடக்கூடாது. அதனால் பல வேலைகளுக்கு நடுவிலும் உங்களுடைய மகிழ்ச்சிக்கான நேரத்தை ஒதுக்கி நினைவுகளை உருவாக்குங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.