மூளையைத் தின்னும் அமீபா எனும் தொற்றால் கேரளத்தில் இந்த மாதத்தில் மட்டும் 3 பேர் இறந்துள்ளனர். நீர்நிலைகளில் இருந்து இந்த தொற்று எப்படி மனித மூளைக்குள் செல்கிறது? தொற்று ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி கேரளத்தில் தாமரச்சேரி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, அரிய வகை தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உடல்நிலை மோசமடைந்ததால் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்தார். பரிசோதனையில் அவருக்கு 'மூளையைத் தின்னும் அமீபா' தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இது நன்னீரில் வாழும் நெய்க்லேரியா ஃபௌலேரி(Naegleria fowleri) எனும் அமீபாவால் ஏற்படக்கூடிய அரிய வகை தொற்று. கடந்த சில ஆண்டுகளாகவே கேரளத்தில் இதன் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.
சிறுமியின் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் இந்த அமீபா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த குடும்பத்தினர் வேறு கிணற்றைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டதுடன் அந்த கிணற்றில் குளித்தவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தாண்டு மட்டும் கேரளத்தில் 19 பேருக்கு பாதிப்பு உறுதி செய்ப்பட்டுள்ளது. ஆகஸ்டில் மட்டும் 3 மாத குழந்தை உள்பட 3 பேர் இறந்துள்ளனர். 8 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்பது ஓர் அரிய மத்திய நரம்பு மண்டல தொற்று. நன்னீர், ஏரிகள், ஆறுகளில் காணப்படும் அமீபாவால் ஏற்படுகிறது. நீர் மாசடைந்த பல நாள்களுக்குப் பிறகு இந்த வகை அமீபா உருவாகிறது. இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓரிரு வாரங்களுக்குள் மரணம் நிகழலாம். வேகமான பாதிப்பு மற்றும் தாமதமாக பாதிப்பைக் கண்டறிவது மரணத்திற்கு காரணமாகிறது.
இந்திய மருத்துவ சங்க ஆராய்ச்சி நிறுவனத்தின் (கேரளம்) ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறுகையில் "அனைத்து அமீபாக்களும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. அதேபோல ஆறு, குளங்களில் குளிக்கும் ஒரு சிலருக்கு மட்டும்தான் பாதிப்பு ஏற்படுகிறது. முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) நம் வாழ்க்கைச் சூழலில் இயற்கையாகவே இருக்கும்.
மாசடைந்த நீர் மற்றும் உணவு மூலமாக பரவக்கூடிய ஹெபடைடிஸ் ஏ மற்றும் டைபாய்டு போன்ற நோய்களுக்கு காரணமான வைரஸ்/பாக்டீரியா நீர்நிலைகளில் நிலைத்திருக்காது. அந்த தொற்றுகளை குணப்படுத்தவும் முடியும். ஆனால் இந்த வகை அமீபா தொற்று ஆபத்தானது" என்றார்.
"உலகம் முழுவதும் பல வகையான அமீபாக்கள் காணப்பட்டாலும் ஒரு சில வகை அமீபாக்கள் மட்டுமே மக்களை தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. முக்கியமாக நெய்க்லேரியா ஃபௌலேரி(மூளையைத் தின்னும் அமீபா), அகந்தமீபா(Acanthamoeba) மற்றும் பாலமுத்தியா(Balamuthia) போன்ற அமீபாக்கள் மனிதர்களிடம் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
கேரளத்தில் சமீபத்தில் உறுதியாகியுள்ள பாதிப்புகள் பெரும்பாலும் நெய்க்லேரியா ஃபௌலேரி அமீபாவால் ஏற்பட்டவை. எனினும் அவற்றில் சில அகந்தமீபாவுடன் தொடர்புடையவை. மற்றவைகளைவிட குறைவான பாதிப்பைத் தரும் வெர்மாமீபா(Vermamoeba)வும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தீங்கு விளைவிக்கும் இந்த அமீபாக்கள் பொதுவாக குளங்கள், ஏரிகள், ஆறுகள், சரியாக பராமரிக்கப்படாத நீச்சல் குளங்கள் ஆகியவற்றில் இருக்கின்றன. சரியாக குளோரினேட் செய்யப்படாவிட்டால் வீட்டில் குழாய் நீர்களில்கூட இருக்கும்.
மேலும் இந்த வகை அமீபா, மூக்கு வழியாக மட்டுமே நுழைகிறது. பின்னர் அது மூளைக்குள் நுழையும்போது தொற்று ஏற்பட்டு மூளையில் உள்ள திசுக்களை அளிக்கிறது. அசுத்தமான நீரில் நீந்தும்போது, டைவிங் செய்யும்போது அல்லது குளிக்கும்போது இதன் பாதிப்பு ஏற்படலாம். மாசடைந்த நீரை முகம் கழுவும்போது அதாவது அந்த தண்ணீர் மூக்கில் படும்போதும் பாதிப்பு ஏற்படலாம்" என்று கொச்சி அமிர்தா மருத்துவமனையின் குழந்தை தொற்று நோய்ப் பிரிவின் இணைப் பேராசிரியர் டாக்டர் பிரவீணா கூறினார்.
இந்த அமீபாக்கள் சுதந்திரமாக இயற்கையுடன் ஒன்றி காணப்படுவதால் அவற்றை நம் சூழலில் இருந்து அகற்றுவது சாத்தியமற்றது, நடைமுறைக்கு மாறானது என்று கூறுகிறார் டாக்டர் ராஜீவ்.
"மூக்கிற்குள் நீர் செல்வதைத் தவிர்க்க வேண்டும், மூக்கை அடிக்கடி கழுவுவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக மாசடைந்த நீர் நிலைகளில் குளிக்கக்கூடாது. குறிப்பாக நீச்சல் வீரர்கள், இந்த தொற்று அபாயத்தைக் குறைக்க தங்கள் மூக்கில் தண்ணீர் செல்லாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சில நேரங்களில் மூளையில் தொற்று இருப்பது தெளிவாகத் தெரிந்தாலும் எதனால் அந்த தொற்று ஏற்பட்டது என்று கண்டறிய முடிவதில்லை. இது மூளையைத் தின்னும் அமீபா தொற்று என்று யூகித்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். சரியான சோதனைகளின் மூலமாகவே தொற்று குறித்து கண்டறிய முடியும். சோதனை இல்லை என்றால் அது கண்டறியப்படாமல் போகலாம். அதுவே தற்போது சவாலாக இருக்கிறது" என்று டாக்டர் ராஜீவ் கூறினார்.
முன்பெல்லாம் இந்த பாதிப்பு தாமதமாக கண்டறியப்பட்டதால் உயிரிழப்பு அதிகம் இருந்தது. ஆனால் தற்போது தொற்று பாதிப்பு விரைவாக கண்டறியப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்படுவதால் உயிரிழப்பு குறைந்துள்ளதாக டாக்டர் ரவீணா தெரிவித்தார்.
அறிகுறிகள்
காய்ச்சல், தலைவலி, வாந்தி, மூக்கிலிருந்து சளி வெளியேறுதல், கழுத்தை திருப்பும்போது வலி அல்லது கழுத்தைத் திருப்ப முடியாதது,
குழப்பமான நிலை, வலிப்பு, மயக்கம், வெளிச்சத்தை ஏற்க முடியாமை உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும்.
தடுப்பு நடவடிக்கைகள்
குளங்கள், ஏரிகள், ஆறுகளில் குதிப்பதைத் தவிர்க்கவும். ஒருவேளை குதிக்க நினைத்தால் மூக்கில் தண்ணீர் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
கைகளை மூக்கிற்குள் நுழைப்பதைத் தவிர்க்கவும்.
மூக்கைக் கழுவுவதற்கு குழாய் நீரைப் பயன்படுத்த வேண்டாம். குழாய் நீரைப் பயன்படுத்த வேண்டியிருந்தால் நீரை கொதிக்க வைத்து ஆறவைத்து பயன்படுத்தவும்.
வீடுகளில் உள்ள தண்ணீர், நீச்சல் குளங்கள் ஆகியவற்றில் தண்ணீரை போதுமான அளவு குளோரினேஷன் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
இதையும் படிக்க | மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.