மாம்பழத்துக்குப் பெயர்போன சேலத்தில் உள்ள போஸ் மைதானத்தில் பெரியார் தலைமையிலான நீதிக் கட்சியில் இருந்து, 1944-இல் தோன்றியது திராவிடர் கழகம். அந்த வகையில், திராவிட அரசியலுக்கு வித்திட்ட இடமாக சேலம் விளங்கி வருகிறது.
ராஜாஜி-பெரியார், மு.கருணாநிதி-எம்ஜிஆர் சந்திப்புக்கு முக்கியக் களமாக சேலம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தனிக் குடிநீர்த் திட்டத்தையும், மதுவிலக்கு அமல்படுத்தியதும் சேலம் நகராட்சிதான் என்பது சிறப்பு. மாங்கனி மட்டுமின்றி, மரவள்ளிக் கிழங்கு, வெள்ளி கொலுசுப் பட்டறைகள், இரும்பாலை, ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, வெல்லம் ஆகியவையும் சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஈரோடுக்கு அடுத்து சேலம் மஞ்சள் மார்க்கெட் பிரபலமானது. இங்குள்ள செவ்வாய்ப்பேட்டை லீ பஜார் சந்தையில் மஞ்சள், கடலை, தேங்காய், அரிசிக்குப் பெயர் பெற்றது.
சேலம் மக்களவைத் தொகுதியில் பெரும்பான்மையாக வன்னியர்களும், குறிப்பிடத்தக்க அளவில் வெள்ளாளக் கவுண்டர்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரும், முதலியார், செட்டியார், சௌராஷ்டிர சமூகத்தினரும் உள்ளனர். நாடார், ரெட்டியார்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களும் கணிசமாக உள்ளனர்.
சேலம் மாவட்டம் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டது. சேலம் மக்களவைத் தொகுதியில் சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, வீரபாண்டி, ஓமலூர், எடப்பாடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
இதில் மூன்று தொகுதிகள் மாநகரப் பகுதியிலும், மீதமுள்ள 3 தொகுதிகள் புறநகர்ப் பகுதியிலும் இடம் பெறுகின்றன.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் மேட்டூர் பேரவைத் தொகுதியும், நாமக்கல் மக்களவைத் தொகுதியில் சங்ககிரியும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுமாக மாவட்டத்தில் 11 பேரவைத் தொகுதிகள் இடம் பெறுகின்றன.
வெற்றி விவரம்: 1952 தேர்தல் முதல் 2014 வரையிலான தேர்தல்களில் சேலம் மக்களவைத் தொகுதியில் தனித்தும், கூட்டணி வைத்தும் 7 முறை வெற்றி பெற்ற கட்சியாக காங்கிரஸ் உள்ளது.
திமுக 3 முறையும், அதிமுக 4 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி (ஆர்.தேவதாஸ்) ஒருமுறையும், தமிழக ராஜீவ் காங்கிரஸின் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி சுயேச்சையாகவும் வெற்றி பெற்றுள்ளனர்.
சேலம் தொகுதியில் வென்றவர்கள் விவரம்: சேலம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றவர்களில் எஸ்.வி. ராமசாமி, நேரு அமைச்சரவையில் மத்திய ரயில்வே இணையமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தொடர்ந்து (1952-1962) மூன்று முறை எம்.பி.யாக வெற்றி பெற்றவர். அடுத்து 1984 முதல் 1991 வரை மூன்று முறை எம்.பி.யாக இருந்தவர் ரங்கராஜன் குமாரமங்கலம்.
இவர் நரசிம்மராவ் தலைமையிலான அமைச்சரவையில் சட்டம் நீதி மற்றும் நிறுவன விவகாரத் துறையின் மத்திய இணையமைச்சராகப் பதவி வகித்தார். (ரங்கராஜன் குமாரமங்கலம் காங்கிரஸில் இருந்து விலகி 1998 மற்றும் 1999 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் பாஜக சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய எரிசக்தி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது). அதேபோல, வாழப்பாடி ராமமூர்த்தி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.
மூன்று முதல்வர்களை வழங்கிய கொங்கு மண்டலம்: அப்போதைய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருந்த திருச்செங்கோட்டைச் சேர்ந்த ப.சுப்பராயன் 1927 சென்னை ராஜதானி முதல்வராகப் பொறுப்பு வகித்த முதல் தமிழர் என்ற பெருமையைக் கொண்டவர்.
சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்த கிருஷ்ணகிரி ஒசூர் தொரப்பள்ளியைச் சேர்ந்த சி.ராஜகோபாலாச்சாரி சென்னை மாகாண முதல்வராகவும், சென்னை மாநில முதல்வராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சேர்ந்த எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 2017 முதல் தமிழக முதல்வராகப் பொறுப்பு வகித்து வருவது சேலம் மாவட்டத்தின் கூடுதல் சிறப்பாகும்.
முதல்வரின் சொந்தத் தொகுதி: மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளும் கட்சியான அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறது.
இதில் பாமகவுக்குக் கணிசமான வாக்கு வங்கி உள்ள மாவட்டமாக சேலம் உள்ளது. அக் கட்சி கூட்டணிக் கட்சிகளுக்கு இத் தொகுதியை விட்டுக் கொடுத்து வருகிறது.
1980-க்குப் பிறகு திமுக சேலம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெறவில்லை. 2019 மக்களவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக திமுகவே நேரடியாக அதிமுகவை களம் காண போட்டியிடுகிறது. கால் நூற்றாண்டுக்கு மேலாக திமுக-வில் இருந்து சேலம் மக்களவைத் தொகுதிக்கு யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
தொகுதியின் பிரச்னைகள்: மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் இருந்தாலும், அதன் நீரை விவசாயத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இப்போதைக்கு குடிநீர்த் தேவைக்கு மட்டுமே தனிக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, அணையின் உபரி நீரை பாசனத்துக்காக சேலம் மாவட்டத்துக்குள் திருப்பி விட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. மரவள்ளிக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும், மலர்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுவதால், வாசனைத் திரவிய தொழிற்சாலை மற்றும் குளிர்பதனக் கிடங்கு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய ஜவுளிப் பூங்கா, தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
ஒன்றரை லட்சம் பேர் வரை பணிபுரியும் வெள்ளித் தொழில் மீதான ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு, நெசவுத் தொழிலுக்கு வரி விலக்கு இங்குள்ளவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. வெள்ளி தொழிலுக்கு வெள்ளிச் சந்தை ஏற்படுத்தவும் வலியுறுத்தி வருகின்றனர். சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டம், விமான நிலைய விரிவாக்கத் திட்டங்களுக்கு நில எடுப்பு அரசுக்கு பெரிய எதிர்ப்பாக இருந்து வருகிறது. நகரப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கு முக்கியத்துவம் வழங்கி குப்பை பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதேபோல, சேலம் உருக்காலையில் ராணுவத் தளவாட உற்பத்தி மையம் அமைத்து வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும்.
பனமரத்துப்பட்டி ஏரியைத் தூர்வாரி சுற்றுலாத் தலமாக மாற்றவும், நீர் தேக்கி வைத்து குடிநீர், பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகியவை முக்கிய பிரச்னைகளாக உள்ளன.
தொகுதி நிலவரம்: அதிமுக 2011, 2016 என அடுத்தடுத்து பேரவைத் தேர்தல் மற்றும் 2009, 2014 மக்களவைத் தேர்தல்களில் சேலத்தை தன் வசம் வைத்துள்ளது. அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன், மாநகர மக்களுக்கு ஏற்கெனவே வார்டு கவுன்சிலராக அறிமுகமானவர்.
மேலும், 2016 பேரவைத் தேர்தலில் சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு, திமுக வேட்பாளர் வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அதிமுக கடந்த முறை 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 தொகுதிகளில் 5,27,428 வாக்குகள் பெற்றது. அத் தேர்தலில் தனித்து நின்ற பாமக 6 தொகுதிகளில் சுமார் 1,63,932 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது. சேலம் தொகுதியில் தேமுதிகவுக்கும் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. கடந்த 2014-இல் எல்.கே.சுதீஷ் போட்டியிட்டு 2,01,268 லட்சம் வாக்குகளைப் பெற்றர். 2009-இல் தனித்துப் போட்டியிட்ட தேமுதிகவில் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் போட்டியிட்டு சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகளை பெற்றார். இப்போது அதிமுக அணியில் தேமுதிக இடம் பெற்றிருப்பதால், அந்த வாக்குகளும் அதிமுகவிற்கு முக்கியமானதாக உள்ளது.
திமுகவில் களமிறங்கும் வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், கட்சிக்குப் புதுமுகம். அவர் ஏற்கெனவே வீரவன்னியர் பேரவை மற்றும் தேமுதிகவில் பணியாற்றி அங்கிருந்து விலகி திமுகவிற்கு வந்தவர். மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் கோட்டையாக சேலம் கருதப்பட்டு வந்தாலும், இத் தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சியினர் வாக்குகள் எப்படி வெற்றி வாய்ப்பைத் தரும் என்பது தேர்தல் முடிவில் தெரியும்.
அமமுக கட்சியில் புறநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.கே.செல்வம் போட்டியிடுகிறார். இவர் அதிமுகவில் இருமுறை புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்தவர். இரண்டு முறை எம்எல்ஏ-வாகவும் இருந்துள்ளார். மறைந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர் ஆவார். மக்களுக்கு பரிச்சயமான எஸ்.கே.செல்வம், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான எதிர்ப்பு அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.
எஸ்.கே.செல்வத்துக்கு கட்சியைத் தாண்டி தனி வாக்கு வங்கி இருப்பதால், கணிசமான வாக்குகளைப் பிரிப்பார் எனக் கணிக்கப்படுகிறது. அதிமுக, திமுக, அமமுக என முக்கிய கட்சிகள் தீவிரமாக களத்தில் உள்ளதால், சேலம் மக்களவைத் தொகுதி மும்முனைப் போட்டியைச் சந்திக்கிறது. நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் இளம் தொழில்முனைவோரும், கல்வி ஆலோசகருமான எம்.பிரபு மணிகண்டன் போட்டியிடுகிறார். கமலின் ரசிகர்கள், புதிய வாக்காளர்கள், இளைஞர்கள் வாக்களிக்கலாம் என நம்பி களத்தில் இறங்கி உள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் அ.ராசா போட்டியிடுகிறார். இவரும் கணிசமான வாக்குகள் பெறுவார் எனக் கூறப்படுகிறது. சேலம் மக்களவைத் தொகுதியில் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாக்காளர்கள் விவரம்
ஆண்கள் 8,09,760
பெண்கள் 8,02,132
மூன்றாம் பாலினம் 90
மொத்தம் 16,11,982
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.