முகப்பு
மக்களைவைத் தேர்தல் 2019

இந்த பாணி புதுசுதான்!

அதிகாலையில் நடைப் பயணம், பகலில் வேனில் நின்றபடி பிரசாரம், பிற்பகலில் மீண்டும் நடைப் பிரசாரம், மாலையில் பொதுக்கூட்ட மேடையில்

Updated On : 6 ஏப்ரல், 2019 at 2:32 AM
பகிர்:


அதிகாலையில் நடைப் பயணம், பகலில் வேனில் நின்றபடி பிரசாரம், பிற்பகலில் மீண்டும் நடைப் பிரசாரம், மாலையில் பொதுக்கூட்ட மேடையில் பிரசார உரை என தேர்தல் பிரசார களத்தில் வித்தியாசம் காட்டுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதைத் தாண்டி, அதிமுக-வுக்கு ஜெயலலிதா என்ற மிகப் பெரிய ஆளுமை இல்லை என்ற வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். 
2019 மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 11 நாள்கள் மட்டுமே உள்ளதால், அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் திறந்த வேனில் நின்றபடியும்,  நகரின் ஏதாவது ஒரு பகுதியில் அமைக்கப்படும் பொதுக் கூட்ட மேடையில் நின்றபடி பிரசார உரையாற்றியும் வாக்காளர்களைக் கவர்ந்து வருகின்றனர். 
இந்த வழக்கமான பிரசார நடைமுறையையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, பாஜக தலைவர்கள் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பின்பற்றி வருகின்றனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தனக்கே உரிய பாணியில், மேடையில் தலைமை ஆசிரியருக்கான இருக்கையைப் போட்டு அமர்ந்தபடி மைக்கைப் பிடித்து பிரசாரம் செய்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எப்போதும்போல் நரம்புகள் புடைக்க உணர்ச்சிகரமான உரையை ஆற்றி வருகிறார்.
ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ, இவர்களிடமிருந்து சற்று மாறுபட்டு வித்தியாசமான அணுகுமுறையைக் கையாண்டு வருகிறார்.
2016 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை மேற்கொண்டதுபோல, இம்முறை தான் பிரசாரத்துக்குச் செல்லும் ஊர்களில் எல்லாம் நடைப் பயணம் மேற்கொண்டு, சாலையில் செல்லும் பொதுமக்களிடம் கை குலுக்கியும் பிரசாரம் செய்தும் வருகிறார்.
ஒவ்வொரு ஊரிலும், தான் தங்கியிருக்கும் ஓட்டலில் இருந்து அதிகாலையில் பனியன், பேன்ட் உடையில் கிளம்பும் ஸ்டாலின், சந்தைப் பகுதிகளில் நடைப்பயணம் செய்தும், பிரசாரம் முடித்து அடுத்த ஊருக்குச் செல்லும்போது வேனிலிருந்து கீழே இறங்கி நடந்து சென்றும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டபோதும், வேனிலிருந்து இறங்கி ஒரு கிலோ மீட்டருக்கும் மேல் நடந்து சென்று, சாலையில் செல்லும் பொதுமக்களுடன் கை குலுக்கி பிரசாரத்தில்  ஸ்டாலின் ஈடுபட்டார். வேட்பாளர் ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோர் அவருக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவருடன் நடந்து சென்றனர்.
முன்னதாக, ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், கமல்ஹாசன் பாணியில் மேடையிலிருந்து 200 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டிருந்த மேடையுடன் கூடிய  பாதையில் நடந்து சென்று  பொதுமக்களைச் சந்தித்து அவர்களுடன் உற்சாகமாக கை குலுக்கினார். 
ஸ்டாலினின் இந்த புதிய அணுகுமுறை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது, வரவேற்பும் பெற்றிருக்கிறது என்றபோதும், அவர் இவ்வாறு நடைப் பிராசரம் செய்யும் இடங்களில் எல்லாம் பொதுமக்களுடன் தானாக முன்வந்து செல்ஃபி எடுத்துக் கொள்வதுதான் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதன் மூலம் மக்களால் எளிதில் அணுக முடியும் தலைவராக தன்னை காட்டிக் கொள்ள ஸ்டாலின் முயலுகிறார் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதையும் மறுப்பதற்கில்லை.
எது, எப்படியாயினும் மாறுபட்ட பிரசார நடவடிக்கைகள் மூலம் வாக்காளர்களை வசப்படுத்த முடியும் என்று நம்புகிறார் ஸ்டாலின். ஸ்டாலினின் அணுகுமுறையில் கொஞ்சம் ஜெயலலிதா, நிறையவே ராகுல்காந்தியின் பாதிப்பு இருக்கிறது என்று தோன்றினாலும், திமுகவைப் பொருத்தவரை இது புதிய பாணி... ஸ்டாலின் பாணி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.