மக்களைவைத் தேர்தல் 2019

வர்த்தகத் தலைநகரில் வாகை சூடுவது யார்?

இராம. பாரதி


மும்பை மாநகரத்தில் உள்ள 6 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 29-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் 4 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தல் அன்றுடன் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் வர்த்தகத் தலைநகராகக் கருதப்படும் மும்பை மாநகரத்தில் மொத்தம் 6 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. நாட்டிலேயே மிக அதிகமான மக்கள் தொகையை கொண்ட மாநகரங்களில் மும்பை முதலிடத்தில் இருக்கிறது. அதுமட்டுமல்ல, மிக அதிகமான கோடீஸ்வரர்கள், லட்சாதிபதிகளைக் கொண்டிருப்பதும் மும்பைதான்.

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பை மாநகரமானது, மும்பை மாநகர் மாவட்டம், மும்பை புறநகர் மாவட்டம் என இரண்டு வருவாய் பிரிவுகளை உடையது. இந்த மாநிலத்தின் கிராமப்புற பகுதிகள் வேளாண் தொழில் சார்ந்த இடர்களால் மிகவும் பின்தங்கியிருப்பவை.

ஆனால், அரபிக் கடலோரத்தில் பரந்து விரிந்து நிற்கும் மும்பை மாநகரத்தில் செல்வச் செழிப்புகளுக்கு குறைவில்லை. அந்தக் கடலே துயில் கொண்டாலும்கூட, மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவிக் கிடக்கும் தொழிற்சாலைகளும், நிதி சார்ந்த தொழில்களும் ஒருபோதும் ஓய்வறியாது.

மும்பை தெற்கு, மும்பை மத்திய தெற்கு,  மும்பை மத்திய வடக்கு, மும்பை வடமேற்கு, மும்பை வடக்கு, மும்பை வடகிழக்கு ஆகிய 6 மக்களவைத் தொகுதிகள் மும்பையில் உள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலில் இந்த ஆறு தொகுதிகளிலுமே பாஜக - சிவேசேனை கூட்டணி வெற்றி பெற்றது. குறிப்பாக மும்பை வடக்கில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கோபால் சின்னையா ஷெட்டி 70.1 சதவீத வாக்குகளையும், மும்பை வடகிழக்கில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கிரீட் சோமையா 61 சதவீத வாக்குகளையும் பெற்று வானளாவிய வெற்றியை உறுதி செய்தனர்.

மும்பை மாநகரத்தில் உள்ள 6 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 29-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் 4 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதியுடன் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.

மும்பை தெற்கு

மொத்தம் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது மும்பை தெற்கு மக்களவைத் தொகுதி. இத்தொகுதியில் 1951-இல் இருந்து நடைபெற்ற 16 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 9 முறை வாகை சூடியுள்ளது. பாஜக இருமுறையும், சிவசேனை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. மற்ற தேர்தல்களில் பிற கட்சிகள் வெற்றி அடைந்துள்ளன. 

கடந்த தேர்தலில் சிவசேனை வேட்பாளர் அரவிந்த் கணபத் சாவந்த் 3.74 லட்சம் வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மிலிந்த் தேவ்ராவை தோற்கடித்தார். மிலிந்த் தேவ்ரா பெற்ற வாக்குகள் 2.46 லட்சம் ஆகும். தற்போதைய தேர்தலிலும் அரவிந்த் சாவந்த் - மிலிந்த் தேவ்ரா இடையேதான் போட்டி நடைபெறுகிறது. 

மும்பை மத்திய தெற்கு 

கடந்த 1991-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தொடங்கி 2009 தேர்தலை தவிர்த்து இத்தொகுதி சிவேசனை கட்சியின் கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது. கடந்த மக்களைத் தேர்தலில் சிவசேனை வேட்பாளர் ராகுல் ரமேஷ் ஷிவாலே 3.81 லட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட  காங்கிரஸ் வேட்பாளர் ஏக்நாத் மஹதேவ் கெய்க்வாட் 2.42 லட்சம் வாக்குகளைப் பெற்றார். 

இந்த முறையும் இந்த இருவரையே வேட்பாளர்களாக சிவசேனை கட்சியும், காங்கிரஸூம் களமிறக்கியுள்ளன.

மும்பை மத்திய வடக்கு

மும்பை மத்திய வடக்கு தொகுதிக்கு, தமிழகத்தின் விருதுநகர் தொகுதியைப் போலவே என்றும் அழியா அவப்பெயர் உண்டு. 

பெரும் தலைவர்களை, உத்தமர்களை தேர்தல் அரசியலில் மக்கள் பெரும்பாலும் புறக்கணிப்பார்கள் என்பதற்கு விருதுநகருக்கு முன்னதாகவே எடுத்துக்காட்டாக அமைந்தது இந்தத் தொகுதி. 1952-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் சட்டமேதை அம்பேத்கர் தோல்வியுற்றார். 

இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய மாமேதையை, மக்களவைக்கு செல்ல விடாமல் தடுத்து வைத்த இத்தொகுதியின் மக்கள், காங்கிரஸ் வேட்பாளர் நாராயண சதோப கஜ்ரோல்கரை வெற்றி பெறச் செய்தனர். 

கடந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் பிரியாசுனில் தத்தை வீழ்த்தி, பாஜக வேட்பாளர் பூனம் மகாஜன் வெற்றி பெற்றார். 

பிரியா தத்தைவிட பாஜகவின் பூனம் மகாஜன் 1.87 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றார். இரண்டு கட்சிகளுமே தற்போதைய தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் எந்தவித மாற்றங்களையும் செய்யவில்லை. ஆகவே, அவர்களே இம்முறையும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

மும்பை வடமேற்கு

மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக - சிவசேனை கூட்டணி எம்எல்ஏ-க்களே உள்ளனர்.  இங்கு காங்கிரஸூம், சிவசேனை கட்சியும் மாறி, மாறி வெற்றிக்கொடி நாட்டி வருகின்றன.

 கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் குருதாஸ் வசந்த் காமத் 2.81 லட்சம் வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிவசேனை வேட்பாளர் கஜானன் சந்திரகாந்த் கிரீட்கர் 4.64 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தற்போதைய தேர்தலில் சிவசேனை, அக்கட்சி எம்.பி.க்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளரை மாற்றியுள்ளது. இம்முறை அக்கட்சி சார்பில் சஞ்சய் கிஷோர்லால் நிருபம் போட்டியிடுகிறார்.

மும்பை வடக்கு

கடந்த மக்களவைத் தேர்தலில், மும்பை வடக்கு தொகுதி பாஜகவுக்கு இமாலய வெற்றியைத் தந்தது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட கோபால் சின்னையா ஷெட்டி சுமார் 6.64 லட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூடினார். 

இது மொத்தம் பதிவான 

வாக்குகளில் 70.1 சதவீதமாகும். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சஞ்சய் நிருபம் 2.17 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 4.47 லட்சம் ஆகும்.

இந்த முறையும் கோபால் ஷெட்டியை பாஜக களமிறக்கியுள்ளது. அவரை எதிர்த்து பலமான வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் காங்கிரஸ் கட்சி இருந்தது. 

இந்நிலையில், காங்கிரஸில் தேர்தலுக்கு முன்னதாக இணைந்த பிரபல நடிகை ஊர்மிளா மடோண்கரை வேட்பாளராக களமிறக்கியுள்ளது.

ஊர்மிளா மடோண்கரை இஸ்லாமியரை திருமணம் செய்தவர். இதனால், அவர் மதம் மாறிவிட்டதாக எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவற்றையெல்லாம் திட்டவட்டமாக மறுத்தார் ஊர்மிளா.

மும்பை வடகிழக்கு

மும்பை வடகிழக்கு தொகுதியில் கடந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கிரீட் சோமையா. அவர் கடந்த 1999-ஆம் ஆண்டில் தொடங்கி, 2014 வரையில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டவர். வெற்றி, தோல்வி என இரண்டும் கலந்த பாதையில் கடந்த அவரது அரசியல் பயணத்துக்கு இந்த முறை பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்தமுறை மனோஜ் கோடக் என்ற அறிமுக வேட்பாளரை அக்கட்சி களமிறக்கியுள்ளது. இவர் மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர் என்ற போதிலும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது இது முதல்முறையாகும்.

மும்பை மாநகருக்கு உள்பட்ட மக்களவைத் தொகுதிகளில் இந்த ஒரு தொகுதியை மட்டுமே காங்கிரஸ் கட்சி, அதன் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸூக்கு ஒதுக்கியுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டில் மும்பை வடகிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற சஞ்சய் தினா பாட்டீல், அதற்கடுத்த 2014 தேர்தலில் தோல்வியுற்றார். இருப்பினும் அவரையே மீண்டும் வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது.

மும்பையிலும் ஒரு கேப்டன்!

தமிழ்ச்செல்வன்! பெயருக்கு ஏற்ப இவர் தமிழர்தான். ஆனால், "கேப்டன் தமிழ்ச்செல்வன்' என்று சொன்னால்தான் அவரை "கோலிவாடா' சட்டப்பேரவைத் தொகுதி மக்களுக்கு தெரியும். இது மும்பை மத்திய தெற்கு மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் பிலாவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன், வெளிநாடு செல்லும் ஏற்பாடுகளுடன் மும்பை சென்ற தமிழ்ச்செல்வனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பின்னர் பிழைப்புக்காக அங்கேயே வாழத் தொடங்கியதில், காலப்போக்கில் அதுவே சொந்த ஊராகிப் போனது. 

துறைமுகம், ரயில்நிலையம் ஆகியவற்றில் கூலித் தொழிலாளி, கூலித் தொழிலுக்கான மேற்பார்வையாளர் என வாழ்வின் விழிம்பு நிலை மனிதனாக பயணத்தை தொடங்கி, பின்னர் ஒப்பந்ததாரர், சமூக அமைப்புகளில் பங்களிப்பு என படிப்படியாக முன்னேறிய தமிழ்ச்செல்வன் இன்றைக்கு கோலிவாடா தொகுதியின் எம்எல்ஏ-வாக 5 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளார்.

மாநகராட்சி கவுன்சிலர், அடுத்தது எம்எல்ஏ என்று தமிழ்ச்செல்வனை உயரச் செய்த பாஜக, மீண்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்குமா என்பது இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பின்போது தெரியவரும். தமிழ் சங்கம், பொங்கல் விழா ஒருங்கிணைப்பு என தமிழனாக தன்னை பெருமையோடு அடையாளப்படுத்திக் கொள்கிறார் தமிழ்ச்செல்வன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துர்ஸ்தானம் எனும் 8ம் வீட்டின் அதிபதி தரும் பலன்கள்!

லக்னௌவில் பெண் கைதிகளுடன் சென்ற வேனில் பற்றிய தீ

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

SCROLL FOR NEXT