கரூர் மாவட்டம் வெள்ளியணையில் 1935, அக். 15-இல் பிறந்தவர் வெள்ளியணை ராமநாதன். விவசாயக் குடும்பத்தில் பிறந்தாலும் கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு கல்வி பயிலும்போதே பெரியார், அண்ணா, கருணாநிதியின் பேச்சாற்றலால் கவரப்பட்டு அரசியலுக்கு வர ஆசைப்பட்டவர். இதற்காகவே அக்காலத்தில் பிளஸ்-2 வுக்கு இணையாகக் கருதப்படும் இன்டர்மீடியேட் படிப்பை கலைப்பிரிவு எடுத்துப் படித்தவர். பெரியார், அண்ணா போன்றோரின் திராவிடக் கொள்கையால் ஈர்க்கப்பட்டாலும், காமராஜரின் அப்பழுக்கற்ற அரசியல் தூய்மை கண்டு காங்கிரஸில் இணைந்து, அரசியலில் கருணாநிதியை அடையாளம் காட்டிய கரூர் மாவட்டத்தின் குளித்தலை தொகுதியில் கருணாநிதிக்கு அடுத்தபடியாக அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்று இளம் தலைமுறையினரிடம் அரசியலில் ஈடுபடும் ஆர்வத்தைத் தூண்டியவர் வெள்ளியணை ராமநாதன்.
தனது அரசியல் வாழ்க்கை குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
சுதந்திரத்திற்கு பின்னர் நம் நாடு முதன்முதலாக 1952-இல் பொதுத் தேர்தலை சந்தித்தது. அப்போது பெரும்பாலான இடங்களில் காங்கிரசுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மட்டும்தான் போட்டி இருந்தது. பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பேரறிஞர் அண்ணா 1949-செப்.17-இல் சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் கரூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள பெத்தாம்பாளையத்தைச் சேர்ந்த பழனிசாமிகவுண்டர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்தான் திமுக உருவானது. அதன்பின்னர் 1957-இல் முதன்முதலாக திமுக பொதுத்தேர்தலில் களம் கண்டது.
அண்ணாவின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட நான் 1957-இல் இன்டர்மீடியேட் படிப்பு முடித்தவுடன் முழு நேர அரசியலில் இறங்கினேன். அப்போதுதான் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை தொகுதியில்தான் முதல் தேர்தலை சந்தித்தார். அந்தத் தேர்தலின்போது குளித்தலை தொகுதியானது குளித்தலை, மாயனூர், வெள்ளியணை என மூன்று பிர்காக்களாக பிரிக்கப்பட்டிருந்தது. வெள்ளியணை தேர்தல் பொறுப்பாளராக நான் செயல்பட்டேன். அந்தக் காலத்தில் இப்போது போல தேர்தல் செலவுக்கு பல கோடி யாரும் செலவு செய்யமாட்டார்கள். ஏனென்றால் திராவிடக்கொள்கை மக்களிடம் பரவிக்
கிடந்த காலம். மக்களுக்கு கொள்கை மட்டும்தான் பிடிப்பாக இருக்கும். பண ஆசையெல்லாம் யாருக்கும் இருக்காது. தன் கைக்காசை போட்டுத்தான் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட வேலை செய்தார்கள்.
கருணாநிதி வெள்ளியணையில் உள்ள எங்கள் வீட்டில்தான் தங்கியிருந்து பிரசாரத்திற்கு செல்வார். அவருடன் நானும் செல்வேன். இரவு பிரசாரம் முடிய அதிகாலை 4 மணியாகிவிடும். பெரும்பாலும் எங்களது உறக்கம் வில்வண்டி, காரில்தான் இருக்கும். அப்போதெல்லாம் கருணாநிதியின் பேச்சை கேட்க மக்கள் விடிய, விடிய காத்திருப்பார்கள். சொல்லப்போனால் குளித்தலை தொகுதிக்கு மொத்த தேர்தல் செலவு வெறும் ரூ.27,500 மட்டும்தான் ஆனது. கருணாநிதியும் வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார். அப்போதுதான் எங்கள் ஊருக்கு கர்ம
வீரர் காமராஜர் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அப்போது அவரது கம்பீரப் பேச்சு என்னை வியப்பில் ஆழ்த்தியது. சொன்ன சொல்லில் நேர்மை, என்னங்கறேன், எனக் கூறியவாறு என்னால் எதைச் செய்ய முடியுமோ அதைக் கண்டிப்பாக செய்வேன் என்னங்கறேன் என அவர் பேசியதெல்லாம் இன்னும் மறக்க இயலாது. இதனால்தான் காங்கிரஸில் 1962-இல் இணைந்தேன்.
அதே ஆண்டில் வந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் திமுக வேட்பாளர் ரத்தினத்தை எதிர்த்து தமிழகத்திலேயே அந்தக் காலத்தில் அதிகமாக 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன். அப்போது எனக்கு வயது 26. இதனால் குறைந்த வயதில் எம்எல்ஏவாகவும் தேர்வு செய்யப்பட்டது, 22,000 வாக்குகள் பெற்றது அப்போதைய சாதனையாக இருந்தது. ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் குளித்தலை தொகுதி இருந்தது.
1967-க்குப் பிறகு குளித்தலை தொகுதியில் இருந்து கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதி உருவானது. நான் இருக்கும் தொகுதி தனித்தொகுதியாக மாறிவிட்டதால் அதற்கு பின்னர் கட்சி சார்பில் போட்டியிடவில்லை.
பெரியார் திண்ணைப் பிரசாரம் செய்தபோது எங்கள் வீட்டுக்கு வந்துள்ளார். குளித்தலை தொகுதியில் கருணாநிதி வேட்பாளராக நின்றபோது அவருக்கு ஆதரவாக எம்ஜிஆர் பிரசாரம் செய்தார். அவரும் வீட்டுக்கு வந்துள்ளார். அரசியல் தலைவர்களான என்எஸ்கே, பக்தவச்சலம், சி.சுப்ரமணியம், கக்கன் போன்றோரும் எங்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். நான் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டபோது காங்கிரசுக்கு காளை மாட்டுச் சின்னம்தான் கொடுத்திருந்தார்கள். தேர்தலைப் பொறுத்தவரை இப்போது பெரும்பாலான வாக்காளர்கள் பணத்துக்கு அடிமையாகிவிட்டார்கள். தேர்தல் நேரத்தில் கொடுக்கும் சொற்ப தொகைக்கு ஆசைப்பட்டு, தேர்தலுக்கு பின்னர் 5 ஆண்டுகள் படாதபாடு படுகிறார்கள். 1980-ல் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைந்தபோது திருச்சியில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்திற்கு தலைமை வகித்தேன். அந்தக் கூட்டத்திற்கு மறைந்த பிரதமர் இந்திராகாந்தி, கருணாநிதி ஆகியோர் வந்திருந்தனர். ஏற்பாடுகளை கண்டு வியந்த கருணாநிதி என்னை அழைத்துப் பாராட்டினார். நாங்கள் இருவேறு கட்சி, மாற்றுக்கொள்கை கொண்டவர்களாக இருந்தாலும், எங்களது நட்பு அவர் சாகும்வரை நீடித்தது.
காங்கிரஸில் மாவட்ட துணைத் தலைவராகவும், விவசாய அணிச் செயலாளராகவும் இருந்துள்ளேன். விவசாயிகள் போராட்டத்தில் நான்குமுறையும், கட்சி அறிவித்த போராட்டங்களிலும் 4 முறை சிறைவாசம் அனுபவித்துள்ளேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.