மாற்றத்துக்கு அச்சாரமிடுமா மநீம?
தமிழகத்தில் அரை நூற்றாண்டாக ஆதிக்கம் செலுத்தி வரும் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்று சக்தி உருவெடுக்குமா என்ற கேள்வி ஒவ்வொரு தேர்தலின் போதும் முன்வைக்கப்படுகின்றது.
தமிழகத்தில் அரை நூற்றாண்டாக ஆதிக்கம் செலுத்தி வரும் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்று சக்தி உருவெடுக்குமா என்ற கேள்வி ஒவ்வொரு தேர்தலின் போதும் முன்வைக்கப்படுகின்றது.
சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டுமின்றி, மக்களவைத் தேர்தலிலும் இந்த முன்னெடுப்புகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. ஆனால், தேர்தலுக்குப் பின்னர், தங்களுடைய சக்தியை அறிந்துகொண்டு, அடுத்த தேர்தலில் திமுக அல்லது அதிமுக கூட்டணியில் மாற்று அணி கட்சிகள் இணைந்துவிடுவது தொடர்கதையாகிவிட்டது.
திராவிடக் கட்சிகளின் எழுச்சி:
1967 சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து இதே நிலைதான் தமிழகத்தில் நீடித்து வருகிறது.அதுவரை காங்கிரஸ் கட்சியே தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.1967 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்ததும், காங்கிரஸின் வெற்றிப் பயணம் தடைபட்டது. 1969 இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என பிளவுபட்டது.
அதனைத் தொடர்ந்து வந்த 1971 மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்தது. இந்தக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றன. இந்தக் கூட்டணி 38 இடங்களில் வெற்றிபெற்றது. ஸ்தாபன காங்கிரஸ், சுதந்திரா கட்சியுடன் கூட்டணி அமைத்து ஓர் இடத்தில் வெற்றி பெற்றது. தனித்து நின்ற மார்க்சிஸ்ட் கட்சி ஓர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.
1972 இல் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., அதிமுக-வைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 1977 மக்களவைத் தேர்தலில் அதிமுக-வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்தது. இந்தக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இடம்பெற்றது. இந்தக் கூட்டணி 34 இடங்களில் வெற்றிபெற்றது. ஸ்தாபன காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி வைத்து 5 இடங்களில் வெற்றிபெற்றது.
இதுபோல, 1991 மக்களவைத் தேர்தல் வரை திமுக அல்லது அதிமுக உடனான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் இடம்பெற்று தேர்தலைச் சந்தித்து வந்தன.
வெற்றிபெறாத மூன்றாவது அணி: 1996 இல் திமுக, தமாகா, இந்திய கம்யூனிஸ்ட் ஓரணியில் போட்டியிட்டு மொத்தமுள்ள 39 இடங்களிலும் வெற்றிபெற்றன. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்த அதிமுக ஓர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. இந்தத் தேர்தலில் மதிமுக தலைமையில் மார்க்சிஸ்ட், ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணியும் ஓர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. திவாரி காங்கிரஸ், பாமக அணியும் ஓர் இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.
1998 -இல் அதிமுக கூட்டணி 30 இடங்களிலும், திமுக தலைமையிலான கூட்டணி 9 இடங்களிலும் வெற்றிபெற்றன. காங்கிரஸ் தலைமையில் எம்.ஜி.ஆர். அதிமுக, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை அடங்கிய மூன்றாவது அணி ஓர் இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.
1999 தேர்தலில் திமுக கூட்டணி 26 இடங்களிலும், அதிமுக கூட்டணி 13 இடங்களிலும் வெற்றிபெற்றன. தமாகா, விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெற்ற மூன்றாவது அணி ஓர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.
2004 தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 39 இடங்களிலும் வெற்றிபெற்றது. அதிமுக, பாஜக கூட்டணியும், மதிமுக தலைமையில் அமைந்த மூன்றாவது அணியும் ஓர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.
2009 தேர்தலில் அதிமுக, திமுக இரு கட்சித் தலைமையிலேயே கூட்டணிகள் அமைந்தன.
2014 தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றிபெற்றது. திமுக தலைமையிலான கூட்டணி ஓர் இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. தேமுதிக, பாமக, பாஜக, மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகியவை இணைந்து உருவாக்கிய மூன்றாவது அணி 2 இடங்களில் வெற்றிபெற்றன.
நடைபெற்றுள்ள 16 மக்களவைத் தேர்தல்களிலும், 1991 தேர்தலுக்குப் பிறகு மூன்றாவது அணி உருவாவதும், தேர்தலுக்குப் பின்னர், அடுத்து வரும் தேர்தல்களில் அதிமுக அல்லது திமுக அணியில் சேர்ந்துவிடுவதுமாகவே கட்சிகள் இருந்து வந்துள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலிலும்... தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதே நிலைதான். 1977 சட்டப்பேரவைத் தேர்தல் முதல் மூன்றாவது அணி களம் கண்டு வருகிறது. திமுக தனியாகவும், அதிமுக கூட்டணியாகவும், காங்கிரஸ் தனி கூட்டணியாகவும் தேர்தலைச் சந்தித்தன. இதுபோல ஒவ்வொரு தேர்தலிலும் மூன்றாவது அணி அல்லது நான்கு அணிகள் களம் கண்டன. அண்மையில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்த மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் நிலையும் அனைவரும் அறிந்ததே.
இவ்வாறு தமிழகத்தில் மாற்று அணி வெற்றிபெறாமல் போவதற்கு, தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தங்களின் நிலைப்பாட்டில் மாற்று அணியினர் நிலைத்து நிற்காமல் போவதே மக்கள் நம்பிக்கையை பெறமுடியாததற்கு முக்கியக் காரணம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
மக்கள் நம்பிக்கையைப் பெறுமா மநீம? இந்தச் சூழலில், 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக என பலமான கூட்டணி அமைந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. புதிதாக உருவாகியுள்ள நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சி, டிடிவி தினகரனின் அமமுக ஆகிய கட்சிகள் தனித்து களம் காண்கின்றன. இந்தத் தேர்தலில் அதிமுக-வின் ஓட்டைப் பிரிப்பதே அமமுக-வின் பங்காக இருக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தாங்கள்தான் மூன்றாவது அணி என மநீம இந்தமுறை குரல் கொடுத்து வருகிறது. சிறந்த நடிகர் என்ற பரிச்சயம், கட்சி ஆரம்பித்தது முதல் கிராமம் கிராமமாகச் சென்று மக்களை நேரடியாகச் சந்தித்து கிராம சபைக் கூட்டங்களை நடத்தியது, கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு மிகப் பெரிய ஆளுமைகள் இல்லாமல் நடைபெறும் தேர்தல் போன்றவை மநீம கட்சிக்கு சாதகமான அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.
ஒருவேளை மக்களவைத் தேர்தலில் மநீம குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெறமுடியாமல் போனாலும், தனது நிலைப்பாட்டில் நீடித்து நின்று, திமுக அல்லது அதிமுக கூட்டணிக்குச் செல்லாமல் அடுத்தவரும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்து மக்கள் நம்பிக்கையை மநீம பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறைத் தலைவர் பேராசிரியர் ராமு மணிவண்ணன் கூறியது:
தமிழகத்தைப் பொருத்தவரை, தேவைப்படும்போது அதிமுக, திமுக கூட்டணி, தேவைப்படாதபோது மூன்றாவது அணி என்ற நிலைப்பாட்டைத்தான் கட்சிகள் எடுத்து வருகின்றன.
நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியும், பெரிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய பிறகுதான், மூன்றாவது அணி என்ற அறிவித்து தேர்தலில் களம் இறங்கியுள்ளது. இது நேர்மையான அணுகுமுறை அல்ல.
மூன்றாவது அணிக்கு கொள்கை சார்ந்த, அடிப்படையான மாற்று கருத்துகள் இருக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் சக்தியாக அவர்கள் செயல்பட வேணடும் என்பதோடு, அதையே கட்சி அரசியலுக்கான கருவியாகப் பயன்படுத்தி செயல்படவேண்டும். ஆனால், அவ்வாறு யாரும் செயல்படுவதில்லை.
தமிழ் தேசியம் பேசும் கட்சிகளுக்கு இது சாத்தியம். ஆனால், அதிமுக அல்லது திமுக கூட்டணியில் இடம்பெற்றால்தான், தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் என அந்த அமைப்புகள் நினைக்கின்றன. இதனால்தான், தமிழகத்தில் இரு திராவிட கட்சிகளுக்கு எதிரான மாற்று அணி வெற்றிபெறாமல் போகின்றது என்றார்.