மக்களைவைத் தேர்தல் 2019

கட்சிகளுக்கு கடிவாளம் அவசியம்!: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

இந்திய அரசுப் பணியைத் திறம்பட மேற்கொண்ட அதிகாரிகளில் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடத்தக்கவர்

ஆ. கோபிகிருஷ்ணா


இந்திய அரசுப் பணியைத் திறம்பட மேற்கொண்ட அதிகாரிகளில் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடத்தக்கவர். வருவாய்ப் பணி அதிகாரியாக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய அவர், தேசத்தின் தலையெழுத்தையே ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கும் தலைமைத் தேர்தல் ஆணையர் பொறுப்பை வகித்தவராவார். அவரது தலைமையின் கீழ்தான்  2004 பொதுத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தம் வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் கிருஷ்ணமூர்த்தி, தினமணிக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

நாடு விடுதலையடைந்த பிறகு  நடைபெற்ற தேர்தல்கள் அனைத்தும் மக்களிடையே ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை வேரூன்றச் செய்திருக்கின்றன என்பதை நம்புகிறீர்களா?
சுதந்திரத்துக்குப் பிறகு 1951-இல்தான் முதல் தேர்தல் நடைபெற்றது. அப்போது ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனித்தனி வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். அதன் பிறகு எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டு, தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் பார்க்கும்போது தேர்தல் நடைமுறைகள் மேம்பட்டிருக்கின்றன; வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆனால், இது போதுமா? என்றால் நிச்சயமாக போதாது என்பதுதான் எனது பதிலாக இருக்கும்.
அரசியல் கட்சிகள், வாக்காளர்கள், வேட்பாளர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் இப்போது விமர்சனங்களுக்கு உள்பட்டு இருக்கின்றன. தேர்தலில் பண பலம் கோலோச்சுகிறது. குற்றப் பின்னணி கொண்டவர்கள் வேட்பாளர்களாகக் களமிறங்குவதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இந்த நிலை மாற வேண்டும். இல்லையெனில் இது நல்லதொரு ஜனநாயகமாக இருக்காது. மக்களும் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். எனவே, அதைக் கருத்தில் கொண்டு தேர்தல் நடைமுறைகளில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக பரவலாக குற்றச்சாட்டு எழுகிறதே?
தேர்தல் ஆணையத்தைக் குறை கூறும் வழக்கம் தொன்று தொட்டு இருக்கிறது. சில நேரங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது சில கட்சிகள் அதனால் பாதிக்கப்படலாம்.  ஆனால், அதற்காக தேர்தல் ஆணையத்தின் மீது வேண்டுமென்றே பழி சுமத்துவது ஏற்புடையது அல்ல.
இத்தகைய விமர்சனங்களைத் தவிர்க்க, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரலாம். லோக்பால் தெரிவுக் குழுவைப் போன்று இதற்கும் பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை உள்ளடக்கி ஒரு சிறப்புக் குழுவை கட்டமைக்க வேண்டும்.
பதற்றமும், அச்சமும் நிலவும் காஷ்மீருக்கு 5 கட்டங்களாகத் தேர்தல் நடத்தும்போது, மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்கத்துக்கு மட்டும் ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவித்திருப்பது விமர்சனங்களுக்கு வித்திடாதா?
ஒவ்வொரு மாநிலத்தின் சூழல் மற்றும் சாதக, பாதகங்களை அறிந்த பிறகே அங்கு எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்தலாம் என்பதைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். இம்முறை மேற்கு வங்கத்துக்கு அந்த அடிப்படையில்தான் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் என நம்புகிறேன். எனவே, அரசியல் நோக்கத்துடன் எழுப்பப்படும் விமர்சனங்களுக்குப் பதில் கூற இயலாது.
அதேவேளையில், பல கட்டங்களாக தேர்தல் நடத்தும் முறை குறைக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து. அதிகபட்சம் 3 கட்டங்களில் தேர்தலை நடத்தி முடிக்க முயற்சி செய்ய வேண்டும். அதைச் சாத்தியமாக்கும் தகுதியும், திறனும் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. 
தேர்தல் நன்கொடை பத்திரங்களைக் கடுமையாக விமர்சித்து வருகிறீர்கள்; அப்படியானால், பணப் பட்டுவாடாவைத்  தடுப்பதற்கும், கட்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் என்னதான் வழி?
தலைமைத் தேர்தல் ஆணையராக நான் பொறுப்பு வகித்தபோது, 20-க்கும் மேற்பட்ட சீர்திருத்தங்களை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அவை அனைத்தும் பணப் பட்டுவாடாவைக் கட்டுப்படுத்துவதற்கும், கட்சிகளை ஒழுங்குமுறைப் படுத்துவதற்குமானதுதான்.
தேர்தல் பத்திரங்களால் எந்தப் பயனும் இல்லை. பணம் கொடுப்பவர்களும், வாங்குபவர்களுக்கும் மட்டும்தான் அதுகுறித்த விவரங்கள் தெரியும். மாறாக அதனால் எந்த வெளிப்படைத்தன்மையும் ஏற்படாது. அதற்கு பதிலாக தேசிய தேர்தல் நிதித் திட்டத்தை ஏற்கெனவே நான் முன்மொழிந்துள்ளேன்.
நன்கொடை அளிக்க விரும்புகிறவர்கள், அதனைத் தேர்தல் ஆணையத்திடம்தான் அளிக்க வேண்டும். அதற்கு பூரண வரி விலக்கு அளிக்கலாம். அதனைக் கொண்டு கட்சிகளுக்கான தேர்தல் நிதியை தேர்தல் ஆணையம் பகிர்ந்தளிக்கும். இந்த நடைமுறையின் மூலம் முறைகேடுகளைத் தடுக்க முடியும்.
அதுமட்டுமன்றி தகவல் உரிமைச் சட்ட வரம்புக்குள் அனைத்து அரசியல் கட்சிகளையும் கொண்டு வர வேண்டும். அதற்காக சிறப்புச் சட்டம் ஒன்றை வகுப்பது அவசியம். அரசியல் கட்சிகள், தங்களது தேர்தல் உத்திகளை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டியதில்லை.
அதேவேளையில், நிதிநிலை விவரங்களை மக்களுக்குத் தெரிவிப்பது முக்கியம். அதன் பொருட்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை காலாண்டு நிதிநிலை விவரங்களை அரசியல் கட்சிகள் தாக்கல் செய்ய வேண்டும்.
அடுத்ததாக பணப் பட்டுவாடாவைப் பொருத்தவரை அதை முழுமையாக ஒழிக்க இயலாது. ஆனால், கட்டுப்படுத்த இயலும். அதற்கு மேற்கூறிய கட்டுப்பாடுகளைக் கடுமையாக பின்பற்ற வேண்டும். கட்சிகளுக்குக் கடிவாளமிட வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT