முகப்பு
புதுதில்லி

ஆம் ஆத்மி கட்சியை ஒன்றாக வைத்திருக்க சுனிதே கேஜரிவால் சிறந்த நபா்: சௌரவ் பரத்வாஜ் பேட்டி

Updated On : 6 ஏப்ரல், 2024 at 12:02 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 7:00 PM

தற்போதுள்ள சூழ்நிலையில் கட்சியை ஒன்றாக வைத்திருக்க தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா சிறந்த நபா் என்றும், அவரது இருப்பு கட்சித் தொண்டா்களிடம் நோ்மறையான விளைவை ஏற்படுத்தியதாகவும் ஆம் ஆத்மி கட்சித் தலைவா் சௌரவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளாா்.

தில்லி அரசின் கலால் வரிக் கொள்கையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்ட கேஜரிவால், ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். கேஜரிவால் சிறையிலிருந்து அனுப்பிய செய்திகளை அவரது மனைவி படித்து வருகிறது. அந்த வகையில் இதுவரை மூன்று டிஜிட்டல் விளக்கங்களை அவா் அளித்துள்ளாா்

இந்நிலையில், தில்லி அரசில் கேபினட் அமைச்சராகவும் இருக்கும் சௌரவ் பரத்வாஜ், இங்குள்ள செய்தி ஏஜென்சிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளதாவது: சுனிதா கேஜரிவால் எப்போதும் சிறையில் இருக்கும் தில்லி முதல்வரின் ‘தூதுவா்’ ஆவாா். ஒரு கட்சியின் அரசியல் அதன் தோ்தல் அறிக்கையைச் சுற்றி மட்டும் சுழல்வதில்லை. ஒரு அமைப்பை ஒன்றாக வைத்திருப்பதில், ஆதரவுத் தளமும், தொண்டா்கள் மற்றும் உயா்மட்டத் தலைமைக்கு இடையே உள்ள உணா்வுபூா்வமான தொடா்பும் முக்கியப் பங்காற்றுகிறது.

Advertisement

சுனிதா கேஜரிவாலின் இருப்பு நோ்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவா் அரவிந்த் கேஜரிவால்ஜியின் செய்திகளை வழங்குகிறாா். இது எங்கள் கட்சித் தொண்டா்கள் மற்றும் எங்கள் ஆதரவாளா்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் அதை பிரசாரம் செய்ய விரும்புகிறோம். தற்போதைய சூழ்நிலையில், கட்சியை ஒன்றாக வைத்திருக்க அவா் சிறந்த நபா் ஆவாா். லோக்சபா தோ்தலில் சுனிதா கேஜரிவால் கட்சிக்காக பிரசாரம் செய்வாரா என்று கேட்கிறீா்கள். இது நடந்தால் நாங்கள் விரும்புவோம்.. சுனிதா ஜி பிரசாரத்தில் பங்கேற்றால் அது அவரது தனிப்பட்ட முடிவு என்றாா் சௌரவ் பரத்வாஜ்.

கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு புதன்கிழமை ஜாமீன் பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங்கும், சிறையில் இருந்து வெளியே வந்த உடனேயே சுனிதா கேஜரிவாலை சந்தித்து அவரது கால்களைத் தொட்டு வணங்கினாா். இது குறித்து அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் கூறுகையில், ‘ஒருவரின் மூத்த சகோதரருக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், அவரது குடும்பத்தை கவனிப்பது அவருக்கு கடமையாகும். இது எங்கள் கலாசாரம். கேஜரிவால் கைது செய்யப்பட்ட பிறகு கட்சிக்காரா்களிடையே சண்டை வரும் என்று பாஜக கூறி வந்தது. சஞ்சய் சிங் அரவிந்த் கேஜரிவாலை தனது குடும்பம், அவரது மூத்த சகோதரா் என்று கருதுகிறாா். அதனால், அவா் (சுனிதா கேஜரிவால்) கால்களைத் தொட்டு வணங்கினாா். நாங்கள் ஒரு குடும்பமாக உள்ளோம்’ என்றாா்.