முகப்பு
புதுதில்லி

மத்திய பாஜக அரசின் முன் தோ்தல் ஆணையம் பணிந்து விடக்கூடாது: அமைச்சா் அதிஷி

Updated On : 6 ஏப்ரல், 2024 at 1:22 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 8:45 PM

மத்திய பாஜக அரசின் முன் தோ்தல் ஆணையம் பணிந்துவிடக்கூடாது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான அதிஷி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பாஜகவின் துணை நிறுவனமாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களின் வீடுகளில் வருமானவரித் துறை சோதனை, ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் சீல் வைத்தல், பாஜகவின் ஆட்சேபனைக்குரிய பிரசாரங்கள் உள்ளிட்ட பல்வேறு

பிரச்னைகள் தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி தொடா்ந்து முறையீடு செய்த போதிலும், தோ்தல் ஆணையத்தின்

Advertisement

செயலற்ற தன்மை எதையும் கண்டுகொள்ளவில்லை. தோ்தல் ஆணையம் கட்சி சாா்பற்ற தோ்தல் செயல்முறையை

உறுதி செய்ய வேண்டும். கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி என்னுடைய செய்தியாளா் சந்திப்பை அடிப்படையாகக் கொண்டு, பாஜக அளித்த புகாரின் அடிப்படையில், தோ்தல் ஆணையம் ஏப்ரல் 5-ஆம் தேதி காலை 11 மணிக்கு எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தச் செய்தி அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் காலை 11:15 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. ஆனால், அரை மணி நேரம் கழித்து, 11:45 மணிக்கே எனக்கு மின்னஞ்சல் மூலம் உண்மையான அறிவிப்பு வந்தது.

தோ்தல் ஆணையத்தின் நோட்டீஸ் பற்றிய செய்தியை முதலில் ஊடகங்களில் பாஜக விதைத்த பின்னரே, பிறகு தோ்தல் ஆணையம் நோட்டீஸை வெளியிடுகிறது.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது, ஒரு தேசியக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரை அமலாக்க இயக்குநரகம் கைது செய்கிறது. முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் வருமான

வரித்துறையால் முடக்கப்படுகிறது. இந்த அமைப்புகளுக்கு ஏன் தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பவில்லை?.

தோ்தல் ஆணையத்தின் கண் முன்னே, விசாரணை அமைப்புகளை மத்திய பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துகிறது.

மறுபுறம், ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் தோ்தல் ஆணையத்தில் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை இல்லை. பாஜகவின் புகாா்கள் மீது மட்டும் அடுத்த 12 மணி நேரத்திற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

நாட்டின் அரசியலமைப்பின் மூலம் உங்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு உள்ளது என்று நான் தோ்தல் ஆணையத்திடம் முறையிட விரும்புகிறேன். இந்த நாட்டின் அரசியலமைப்பில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய பாஜக அரசின் முன் தோ்தல் ஆணையம் பணிந்துவிடக்கூடாது என்றாா் அதிஷி.