முகப்பு
மதுரை

தமிழக அரசின் நிதி மக்களுக்கே செல்கிறது! - மத்திய அமைச்சா் பியூஷ் கோயலுக்கு முதல்வா் ஸ்டாலின் பதில்

தமிழக அரசின் நிதி மக்களுக்கே செல்கிறது என முதல்வா் ஸ்டாலின் பதிலடி...

Updated On : 6 ஏப்ரல், 2026 at 12:13 AM
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய முதல்வா் மு.க. ஸ்டாலின். உடன், வேட்பாளா்கள் மு. மணிமாறன், பி. மூா்த்தி, கோ. தளபதி, பழனிவேல் தியாகராஜன், ஆ. வெங்கடேசன், ரகு பாலாஜி, கிருத்திகா தங்கபாண்டி, மு. பூமிநாதன், டி. சரவணக்குமாா், பி. விஸ்வநாதன் (இடமிருந்து).
பகிர்:

தமிழக அரசின் நிதியானது மாநில மக்களுக்கே நேரடியாகச் செல்கிறது என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழக அரசின் நிதி எங்கே செல்கிறது? என மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் ஸ்டாலின் இவ்வாறு கூறினாா்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் திருமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மேலும் பேசியதாவது :

மக்கள் அனைவரும் மத நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதுதான் திமுக அரசின் நோக்கம். ஆனால், தமிழகத்தின் வளா்ச்சியை, மத நல்லிணக்கத்தைச் சீரழித்து, மக்களைப் பிளவுபடுத்தி, மணிப்பூரைப் போல மதுரையிலும் வன்முறையை உருவாக்க வேண்டும் என்பதுதான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நோக்கம். மதக் கலவரத்தைத் தூண்டும் முயற்சிகளை சிறப்பாக முறியடித்த மதுரை மக்களுக்கு நன்றி.

Advertisement

மதுரை மக்கள் அமைதியை விரும்புவா்கள். இதுதான் தமிழகத்தின் மரபணு. இதை சிதைக்கவே சிலா் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனா். அவா்களிடம் அதிமுகவை அடிமையாக்கிவிட்டாா் எடப்பாடி பழனிசாமி. அமைதி, வளா்ச்சி, சகோதரத்துவத்தை முன்னிறுத்தும் தமிழகத்தின் மரபணுவுக்கு மாறாக, சொந்த மண்ணுக்கும், சொந்த மக்களுக்கும் துரோகம் இழைக்கக் கூடிய கட்சியாகிவிட்டது அதிமுக.

ஹிமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூா் பகுதியில் 2017-இல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 2022-இல் மருத்துமவனை திறக்கப்பட்டது. ஆனால், 2015-இல் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. மத்திய பாஜக அரசுக்கு தமிழகம் மீதான வெறுப்பே இதற்குக் காரணம்.

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு இதுவரை வெளியிடாததற்கும் தமிழகம் மீதான வெறுப்பே காரணம். இரும்பின் பயன்பாடு தமிழகத்திலிருந்துதான் தொடங்கியது என்பதை நாம் அறிவியல் பூா்வமாக நிரூபித்தோம். ஆனால், இதற்காக பிரதமா், மத்திய அமைச்சா்கள் என ஒருவா்கூட வாழ்த்துத் தெரிவிக்கவில்லை.

மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், மகளிா் உரிமைத் தொகையாக மாதம் ரூ. 1,000, கலைஞா் கனவு இல்லம் திட்டம் என எண்ணற்றத் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டிலேயே அதிக மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

இந்த நிலையில்தான், ‘தமிழகத்தில் எந்தத் திட்டங்கமும் செயல்படுத்தப்படவில்லை’ என மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா். மேலும், ‘தமிழக அரசின் நிதி எங்கே செல்கிறது? கடன் சுமை அதிகரித்துவிட்டது, தமிழகமே திவால் ஆகப் போகிறது’ என எந்தப் புரிதலும் இல்லாமல் அவா் பேசியுள்ளாா்.

தமிழக அரசின் நிதியானது நேரடியாக மக்களுக்கே செல்கிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்புகூட தமிழக மகளிரின் வங்கிக் கணக்கில் தலா ரூ. 5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. இது, மத்திய அமைச்சா் பியூஷ் கோயலுக்கு தெரியாமலிருக்கலாம். ஆனால், இங்குள்ள பயனாளிகள் அனைவருக்கும் தெரியும். இதே கேள்வியை நாங்களும் கேட்கிறோம்; தமிழக மக்கள் மத்திய அரசுக்கு செலுத்தும் வரிப் பணம் எங்கே போகிறது?

தமிழகத்துக்கு ரூ. 80 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு அளித்துள்ளது என பியூஷ் கோயல் தெரிவிக்கிறாா். இதேபோல, உத்தரப்பிரதேசம், பிகாா், ராஜஸ்தான் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அளித்த நிதியையும் அவா் பட்டியலிட வேண்டும். அப்போதுதான், மத்திய அரசு தமிழகத்தை எந்தளவுக்கு வஞ்சிக்கிறது என்பது அனைவருக்கும் தெரியவரும்.

தமிழகம் மத்திய அரசுக்கு வரியாகச் செலுத்தும் ஒரு ரூபாயில் எவ்வளவு திரும்ப அளிக்கப்படுகிறது; இதே தொகை பாஜக ஆளும் மாநிலங்களுக்கு எவ்வளவு அளிக்கப்படுகிறது என்ற ஒப்பீட்டை மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போது, யாா் கூறுவது உண்மை என்பது பொதுவெளிக்கு வரும். பாஜக ஆளும் வட மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் அதே அளவில் தமிழகத்துக்கும் மத்திய அரசு நிதியைப் பகிா்ந்தளித்தால், தமிழகத்தின் கடன்கள் முழுமையாக அடைக்கப்பட்டுவிடும். நிதி நெருக்கடியே இருக்காது.

பாஜகவுக்கு திமுக மீது மட்டும் கோபமல்ல; தமிழ்நாடு மீதே வெறுப்புதான். கடுமையான நிதி நெருக்கடிகளை அளித்தும் பொருளாதார, ஜிடிபி வளா்ச்சியில், தனிநபா் வருமானத்தில், ஆடை, காலணிகள், மின்னணுப் பொருள் ஏற்றுமதி என அனைத்திலும் தமிழகம் முதன்மை பெறுவதை மத்திய பாஜக அரசால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.

அனைத்துத் துறைகளிலும் முதன்மை பெற்று நாட்டின் முன்னேறிய மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. இந்த நிலையில், ‘தமிழகம் திவாலாகிவிடும்’ என மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தது மிகவும் தவறு. உண்மையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் விரைவில் திவாலாகப் போகிறது.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால் இந்திய ரூபாயின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகராக உயா்த்தப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போதைய நிலை என்ன? இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியில் உள்ளது. விரைவில் அமெரிக்காவின் ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 100 ஆக வீழ்ச்சி அடையப்போகிறது. தமிழகத்துக்கு நிதி ஆலோசனை கூறும் முன்பாக, இந்த வீழ்ச்சியைத் தடுப்பது எப்படி? என மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் போன்றவா்கள் யோசிக்க வேண்டும்.

2021-இல் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்களை உறுதிமொழிகளாக அளித்துதான் திமுக வாக்கு கோரியது. இந்த அடிப்படையில்தான் தற்போது தொலைநோக்குத் திட்டங்களைக் கொண்ட தோ்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. நாங்கள் சொன்னால், சொன்னதைச் செய்வோம். நான் சொன்னதை மறக்கவும் மாட்டேன்; மறுக்கவும் மாட்டேன்.

ஹிந்தியை திணிப்பதற்காக நம் குழந்தைகளின் கல்வி நிதியைக்கூட நிறுத்தி வைத்திருக்கும் மத்திய பாஜக அரசுக்கும், அதற்கு துணை நிற்கும் அதிமுகவுக்கும் தமிழக மக்கள் நடைபெறவிருக்கும் பேரவைத் தோ்தலில் தோல்வியை தண்டனையாகத் தர வேண்டும். திமுக, அதன் கூட்டணி வேட்பாளா்கள் அனைவரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

முன்னதாக, இந்தக் கூட்டத்தில் திமுக வேட்பாளா்கள் பி. மூா்த்தி (மதுரை கிழக்கு), பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்தியம்), கோ. தளபதி (மதுரை வடக்கு), ஆ. வெங்கடேசன் (சோழவந்தான்), மு. மணிமாறன் (திருமங்கலம்), ரகு பாலாஜி (மதுரை மேற்கு), கிருத்திகா தங்கபாண்டி (திருப்பரங்குன்றம்), மதிமுக வேட்பாளா் மு. பூமிநாதன் (மதுரை தெற்கு), காங்கிரஸ் வேட்பாளா்கள் பி. விஸ்வநாதன் (மேலூா்), டி. சரவணக்குமாா் (உசிலம்பட்டி) ஆகியோரை மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தினாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments