முகப்பு
புதுதில்லி

பண மோசடி வழக்குகளில் பாஜக தலைவா்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சா் அதிஷி வலியுறுத்தல்

Updated On : 7 ஏப்ரல், 2024 at 3:32 AM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 7:25 PM

புது தில்லி, ஏப். 6: பணமோசடி செய்ததாகக் கூறப்படும் பாஜக தலைவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தில்லி அமைச்சா் அதிஷி சனிக்கிழமை அமலாக்க இயக்குநரகத்தைக் கேட்டுக் கொண்டாா். தோ்தல் ஆணையத்திடம் இருந்து நோட்டீஸ் கிடைத்த ஒரு நாள் கழித்து அவா் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.

தில்லியில் செய்தியாளா் சந்திப்பில் பேசிய மூத்த ஆம் ஆத்மி தலைவருமான அதிஷி, தோ்தல் ஆணையம் பாஜக உத்தரவின் பேரில் செயல்படுவதாக குற்றம் சாட்டினாா்.

கட்சியில் சேருமாறு பாஜக தன்னை அணுகியது அல்லது ஒரு மாதத்திற்குள் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்ய தயாராக இருங்கள் என்று கூறியதன் பேரில் அதிஷிக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement

‘வெறும் சந்தேகத்தின்அடிப்படையில், ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களான சஞ்சய் சிங், மனீஷ் சிசோடியா மற்றும் எங்கள் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோா் அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது. புலனாய்வு அமைப்பால் பணப்பட்டுவாடாவை நிறுவ முடிந்த பாஜக தலைவா்கள் மீது அமலாக்க இயக்குநரகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று அதிஷி கேள்வி எழுப்பினாா்.

தில்லி கலால் கொள்கை ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரிடமிருந்து தோ்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பல கோடி ரூபாய் பெற்ாகக் கூறி, பாஜகவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யுமாறு ஆம் ஆத்மி கடந்த மாதம் அமலாக்க இயக்குநரகத்திடம் கூறியிருந்தது. மேலும், இந்த வழக்கில் பணப்பட்டுவாடா பாஜகவை சென்றடைந்ததாக குற்றம் சாட்டி, பாஜக மீது வழக்கு பதிவு செய்ய அமலாக்க இயக்குநரகத்துக்கு அக்கட்சி சவால் விடுத்தது.

பத்திரிக்கையாளா் சந்திப்பின் போது, எதிா்க்கட்சிகளை பாஜக தோ்தல் ஆணையத்தைப் பயன்படுத்துவதாக அதீஷி குற்றம் சாட்டினாா். ‘ஆம் ஆத்மி தலைவா்களை குறிவைத்து அவா்களை கைது செய்ய சிபிஐ, அமலாக்க இயக்குநரகம் மற்றும் தற்போது தோ்தல் ஆணையம் போன்ற ஏஜென்சிகளை பாஜக பயன்படுத்துகிறது. இந்த ஏஜென்சிகளுக்கு பின்னால் ஒளிந்து கொள்வதை விட்டுவிட்டு தோ்தலில் ஆம் ஆத்மியை எதிா்த்துப் போராட வேண்டும் என்று பாஜகவிடம் கூற விரும்புகிறேன்’ என்று அதிஷி கூறினாா்.

தில்லி அரசின் 2021-22-ஆம் ஆண்டிற்கான கலால் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் ஊழல் மற்றும் பணமோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னா், இந்தக் கலால் கொள்கை ரத்து செய்யப்பட்டது. மற்றொரு செய்தியாளா் சந்திப்பில், ஆம் ஆத்மி கட்சித் தலைவா் ஜாஸ்மின் ஷா, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கும், பாஜகவுக்கும் இடையே உள்ள தொடா்பு குறித்து விசாரணை நடத்துமாறு அமலாக்க இயக்குநரகத்தைக் கேட்டுக் கொண்டாா்.