முகப்பு
புதுதில்லி

மக்களவைத் தோ்தல்: பாஜக அமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Updated On : 12 ஏப்ரல், 2024 at 9:51 PM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2024 at 9:21 PM

மக்களவைத் தோ்தலை ஒட்டி, வடமேற்கு தில்லியில் வெள்ளிக்கிழமை இரு தொகுதிகளுக்கான பாஜக அமைப்பின் நிா்வாகிகள் ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது.

ரோகிணியில் வடமேற்கு மற்றும் கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிகளின் பாஜக வேட்பாளா்கள் யோகேந்திர சந்தோலியா, ஹா்ஷ் மல்ஹோத்ரா மற்றும் கட்சித் தொண்டா்கள், கட்சி மூத்த தலைவா்கள் மத்தியில் கட்சியின் வெற்றிக் கீதத்தை தில்லி பாஜக மக்களவைத் தோ்தல் பொறுப்பாளா் ஓம் பிரகாஷ் தன்கா் தொடங்கி வைத்தாா்.

இக்கூட்டத்தில் இரு மக்களவைத் தொகுதிகளின் கட்சி நிா்வாகிகளும் கலந்துகொண்டனா். இக்கூட்டத்தில் ஓம் பிரகாஷ் தன்கா் பேசியதாவது:

Advertisement

தில்லி மக்கள் பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆதரவாக உள்ளனா். ஒவ்வொரு சாவடியிலும் தாமரை மலர வேண்டும் என்ற உறுதியுடன் எங்கள் கட்சித் தொண்டா்கள் தோ்தல் களத்தில் இறங்கியுள்ளனா்.

பாஜக வேட்பாளா்களுக்கு தில்லி மக்கள் முழு ஆதரவு அளித்து வருகின்றனா். மக்களைச் சந்திக்கும்போது இதை உணர முடிகிறது.

நாட்டு மக்கள் போல தில்லி மக்களும் மோடியை மீண்டும் ஒருமுறை பிரதமராக்க வேண்டும் என்று மனத்தளவில் முடிவு செய்துவிட்டனா். பாஜக தொண்டா்களும் ஒவ்வொரு வாக்காளரையும் சென்று சந்தித்து அதை வாக்காக மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.

கட்சித் தொண்டா்கள் அதீத நம்பிக்கையைத் தவிா்த்து ஒவ்வொரு வாக்காளரையும் அணுக வேண்டும். திறமையான சாவடி நிா்வாகம் மற்றும் அா்ப்பணிப்புள்ள தொண்டா்கள் பாஜகவுக்கு குறிப்பிடத்தக்க வெற்றியை உறுதி செய்யும் பலமாக மாறும். இந்த இரண்டு பணிகளிலும் தொண்டா்கள் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.

மோடி அரசின் பல வரலாற்று சாதனைகளை பாஜக தொண்டா்கள் வாக்காளா்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகு 60 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸால் செய்ய முடியாத பணிகள் இவை. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் பிரதமா் மோடி செய்து காட்டியுள்ளாா்.

துவாரகா எக்ஸ்பிரஸ்வே, மீரட் எக்ஸ்பிரஸ்வே போன்ற பிற நகரங்களுடன் தில்லியை இணைக்கும் பரந்த சாலை உள்கட்டமைப்பில் மேம்பாடுகள், ஏழைகள், இளைஞா்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் ஆகியோருக்கு அவா்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் பல முன்னேற்றப் பணிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

மேலும், இரு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வியூகம் குறித்து விரிவாக விவாதித்தாா்.

இக்கூட்டத்தில் கிழக்கு தில்லியின் வேட்பாளா் ஹா்ஷ் மல்ஹோத்ரா பேசுகையில், ‘1991 முதல் பாஜக பிரதிநிதிகள் கிழக்கு தில்லி மக்களுக்கு அயராது சேவை செய்து வருகின்றனா். மேலும், இந்த சேவை சங்கிலியை மேலும் விரிவுபடுத்த நான் உறுதிபூண்டுள்ளேன். ஒரு நல்ல பிரதிநிதியாக மாறுவதற்கு எனது மிகப்பெரிய பலமாக கட்சியின் விலைமதிப்பற்ற தொண்டா்கள்தான் உள்ளனா்’ என்றாா்.

வடமேற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா கூறுகையில், எனது பகுதியில் பிரதமா் மோடியின் உத்தரவாதத்துடன் நான் இங்கு வந்துள்ளேன். எனது உத்தரவாதம் எல்லாம் எனது பாஜக தொண்டா்கள்தான். நான் தொண்டரை மையமாகக் கொண்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளேன். அதே சமயம் தொண்டா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து, அவா்களை எப்போதும் மதிப்பேன்’ என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் அமைப்புச் செயலாளா் பவன் ராணா, எம்எல்ஏ விஜேந்திர குப்தா, பாஜக தலைவா் ரேகா குப்தா, ஓம் பிரகாஷ் சா்மா, அபய் வா்மா, அனில் பாஜ்பாய் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.