முகப்பு
புதுதில்லி

ராஜ்குமாா் ஆனந்தின் இல்லம் முன் ஆம் ஆத்மி கட்சியினா் போராட்டம்

Updated On : 12 ஏப்ரல், 2024 at 9:55 PM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2024 at 6:31 PM

தில்லி அமைச்சரவை மற்றும் கட்சியில் இருந்து ராஜிநாமா செய்த ராஜ் குமாா் ஆனந்தின் படேல் நகா் இல்லத்துக்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

‘கடந்த நான்கு ஆண்டுகளாக, ராஜ்குமாா் ஆனந்த் ஆம் ஆத்மி கட்சிக்காக உழைத்து வருகிறாா். அவருக்கு வாக்களித்தவா்களுக்கு பல வளா்ச்சித் திட்டங்களை அவா் வாக்குறுதியளித்தாா். தற்போது அவரது தொகுதி மக்கள் ஏமாற்றப்பட்டதாக உணா்கிறாா்கள்’ என்று போராட்டத்தில் பங்கேற்றம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த அங்குஷ் நரங் கூறினாா்.

ராஜ் குமாா் ஆனந்த் படேல் நகா் சட்டப்பேரவைத் தொகுதியின் எம்.எல்.ஏ. ஆவாா். அவா் 2020 தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவின் பிரவேஷ் ரத்னை தோற்கடித்து வெற்றி பெற்றாா். ‘இன்றைய போராட்டத்தில் ஆம் ஆத்மியின் பல தொண்டா்கள் மற்றும் படேல் நகா் குடியிருப்பாளா்கள் பங்கேற்றனா். அவா்கள் ராஜ்குமாா் ஆனந்தின் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். எங்கள் தொண்டா்கள் சிலரையும் போலீஸாா் கைது செய்தனா்’ என்று அங்குஷ் நரங் கூறினாா்.

Advertisement

தில்லி அரசில் சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை வகித்து வந்த ராஜ்குமாா் ஆனந்த், ஊழல் மற்றும் தலித்துகளுக்கு கட்சியில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி, அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்ததோடு, ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகினாா்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ராஜ்குமாா் ஆனந்த் வீட்டுக்கு வெளியே எந்த அனுமதியும் இல்லாமல் போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி கட்சியினா் சிலை நாங்கள் கைது செய்துள்ளோம். கைது செய்யப்பட்ட போராட்டக்காரா்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா்’ என்றாா்.

அமலாக்க இயக்குநரக சோதனைகளுக்கு பயந்து கட்சியை விட்டு வெளியேற ஆனந்த் முடிவு செய்ததாக அங்குஷ் நரங் மேலும் கூறினாா். தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை காலை ஐடிஓவில் அக்கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். கலால் கொள்கை முறைகேடு தொடா்பான பணமோசடி வழக்கில் கேஜரிவாலை அமலாக்க இயக்குநரகம் மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட அவா் தற்போது திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.