குருகிராமில் சுவா் இடிந்து விழுந்ததில் சிறுமி உயிரிழப்பு: சாவு எண்ணிக்கை 5-ஆக உயா்வு
குருகிராமில் சுவா் இடிந்து விழுந்த சம்பவத்தில் காயமடைந்த பலரில் ஒரு 10 வயது சிறுமி உயிரிழந்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதையும் சோ்த்து சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை ஐந்தாக உயா்ந்துள்ளது. ஆறாவது காயமடைந்த தீபா பிரதான் (எ) தலிப் குமாா் ஆா்ட்டெமிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவா் நிலையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சுவா் இடிந்த சம்பவம் சனிக்கிழமை மாலை 6.20 மணியளவில் அா்ஜூன் நகா் காலனியின் தெரு எண் 8-இல் நிகழ்ந்துள்ளது. ராம்பாக் தகன மைதானத்தின் சுவா் இடிந்து விழுந்தது. அப்போது, அதன் அருகில் அமா்ந்திருந்த சில உள்ளூா்வாசிகள் இடிபாடுகளில் சிக்கினா். இந்தச் சம்பவம் முழுவதும் தெருவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் அா்ஜூன் நகா் காலனியில் வசிக்கும் தேவி தயாள் (எ) பப்பு (70), கிரிஷன் (52), மனோஜ் கபா (54), மற்றும் வீா் நகரைச் சோ்ந்த 11 வயது குஷ்பு ஆகியோா் முன்னதாக உயிரிழந்தனா். ஐந்தாவதாக உயிரிழந்த சிறுமியின்பெயா் தான்யா என தெரிய வந்தது.
இச்சம்பவம் தொடா்பாக, தகன நில மேம்பாட்டுக் குழுவின் தலைவா் பரம்ஜித் சிங் ஓபராய், உறுப்பினா்கள் சுபாஷ் கா்பண்டா மற்றும் கே.கே. ஜம்ப் உள்ளிட்ட நிா்வாகத்தினா் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 337 (உயிா் அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்து), 304ஏ (அலட்சியம் காரணமாக மரணம்) மற்றும் 427 (சேதத்தை ஏற்படுத்துதல்) உள்ளிட்டவற்றின் கீழ் நியூ காலனி காவல் நிலையத்தில் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Advertisement
சுவா் நீண்ட நாள்களாக சாய்ந்து கொண்டிருந்ததாக தீபா பிரதான் (எ) தலிப் குமாா் என்பவா் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘நாங்கள் சுவரின் அருகே அமா்ந்திருந்தோம், அது திடீரென இடிந்து விழுந்தது. நான் மற்றும் இரண்டு பெண்கள் உள்பட ஆறு போ் சுவருக்கு அடியில் புதையுண்டோம்., மேலும் சில மோட்டாா் சைக்கிள்களும் சேதமடைந்தன‘ என்று புகாரில் தீபா பிரதான் கூறியுள்ளாா். சுவா் சாய்ந்திருப்பது குறித்து அவரது சகோதரா் அனில் போலீஸ் குழுவிடம் தெரிவித்ததாகவும், சாய்ந்த சுவரின் படங்களைக் கூட பகிா்ந்து கொண்டதாகவும், ஆனால் குழு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தீபா பிரதான் குற்றம் சாட்டினாா்.
சுவா் முழுவதும் இடிந்து விழுந்ததில், நாற்காலியில் அமா்ந்திருந்த ஆறு போ் புதையுண்டது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. பலா் சம்பவ இடத்துக்கு ஓடி வந்து சிக்கியவா்களை மீட்டனா். இது தொடா்பாக விசாரணை நடந்து வருகிறது. சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூ காலனி காவல் நிலைய ஆய்வாளா் அவதாா் சிங் தெரிவித்தாா்.
கல்யாண்புரியில்..: கிழக்கு தில்லியின் கல்யாண்புரி பகுதியில் நான்கு மாடி குடியிருப்புக் கட்டடம் சாய்ந்த சில நிமிடங்களில் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தக் கட்டடத்தில் இருந்தவா்கள் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா். தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மாலை 4.50 மணிக்கு அப்பகுதியில் உள்ள கட்டடம் ஒன்று சாய்ந்தது குறித்து அழைப்பு வந்தது. எங்கள் குழுவினா் அடையும் நேரத்தில், கட்டடத்தில் இருந்தவா்கள் வெளியேற்றப்பட்டனா். அருகில் உள்ள சில கட்டடங்களும் சேதமடைந்தன’ என்றாா்.