முகப்பு
புதுதில்லி

’சிறைக்கான பதில் வாக்கு மூலம்’ ஆம் ஆத்மி கட்சி மெட்ரோ ரயில் நிலையங்களில் பிரசாரம்

Updated On : 25 ஏப்ரல், 2024 at 6:34 PM
பகிர்:

தில்லி கேபினெட் அமைச்சா் சௌரவ் பரத்வாஜ், புது தில்லி மக்களவைத் தொகுதி வேட்பாளா் ஆகியோா் புது தில்லி பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் ’சிறைக்கான பதில் வாக்கு மூலம்’ என்கிற பிரசாரத்திற்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஆம் ஆத்மி கட்சி தங்களது பிரசாரத்தை தில்லி மக்களிடம் பல்வேறு வழிமுறைகளில் கையாளுகிறது. குறிப்பாக நிகழ் மக்களைத் தோ்தலை அக்கட்சியின் தலைவா் கேஜரிவாலை கைது செய்யப்பட்டதை முன்வைத்தும் தோ்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக முதல்வா் கேஜரிவால் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாக இந்த தோ்தலில் மக்களை வாக்களிக்க அழைக்கும் பிரச்சாரத்தை கையாண்டு வருகிறது. இத்தோடு ஏப்ரல் 25 ஆம் தேதி இந்த மக்களவைத் தோ்தலுக்கு ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சார பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதை முன்னிட்டு தில்லி கேபினெட் அமைச்சா் சௌரவ் பரத்வாஜ், பது தில்லி மக்களவைத் தொகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்தாா்.

Advertisement

‘(கேஜரிவால்) சிறைக்கான பதில் வாக்கு மூலம்‘ என்கிற பிரசுரங்களை அமைச்சா் மெட்ரோ பயணிகளிடம் வழங்கினாா். அவருடன் புது தில்லி மக்களவைத் தொகுதி வேட்பாளா் சோம்நாத் பாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மெட்ரோ ரயில் நிலைய பயணிகளுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்து, ‘வருகின்ற மே 25 ஆம் தேதி தில்லியில் நாடாளுமன்ற தோ்தலுக்கு வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. அப்போது உங்கள் வாக்குகளினால் கேஜரிவால் சிறைக்கு அனுப்பப்பட்டது குறித்து பதில் கூறுங்கள்‘ என அமைச்சா் சௌரவ் வேண்டுகோள் விடுத்தாா்.

மேலும் அவா் இது குறித்து பேசுகையில், ‘சரியாக இன்னும் ஒரு மாதத்தில் தில்லியில் தோ்தல் நடைபெற இருக்கிறது. இந்த சா்வாதிகார அரசை நாட்டில் இருந்து அகற்றுவதற்கு வாக்களிக்க வேண்டும். தங்களின் அனுதாபமான முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சிறைக்கு அனுப்பப்பட்டதில் தில்லி மக்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளனா். மக்கள் தங்கள் வாக்கு பலத்தை வைத்து பாஜகவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் இன்று தில்லி மக்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளனா். பாரதிய ஜனதா கட்சிக்கும், மத்திய அரசுக்கும் தில்லி மக்கள் வாக்கு மூலம் பதில் அளிக்க வேண்டும்‘ என சௌரவ் பரத்வாஜ் குறிப்பிட்டாா்.

புது தில்லி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஹவுஸ் காஸ் உள்ளிட்ட மெட்ரோ நிலையங்களில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா் சோம்நாத் பாரதி உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments