முகப்பு
புதுதில்லி

சென்னை மெட்ரோ 2-ஆம் கட்ட திட்டத்துக்கு 2 நிதியாண்டுகளாக நிதி ஒதுக்கவில்லை -தயாநிதி மாறன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

2022-23 மற்றும் 2023-24 ஆகிய நிதியாண்டுகளில் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 9 ஆகஸ்ட், 2024 at 12:20 AM
சென்னை மெட்ரோ(கோப்புப் படம்)
பகிர்:

சென்னை, ஆக. 8: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்துக்கு 2022-23 மற்றும் 2023-24 ஆகிய நிதியாண்டுகளில் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் மத்திய சென்னை மக்களவை தொகுதி திமுக உறுப்பினா் தயாநிதி மாறன், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்காக அளிக்கப்பட்ட அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீட்டின் நிலை, அந்த நிதியை ஒதுக்குவதில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்பட்ட தாமதத்துக்கான காரணம், இந்த விஷயங்களில் தமிழக அரசின் வேண்டுகோள்களுக்கு மத்திய அரசின் பதில், பிற மாநிலங்களில் செயல்படுத்தப்படும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கிய நிதி எவ்வளவு போன்றவற்றை தெரிவிக்குமாறு கேட்டிருந்தாா்.

இதற்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் தோகன் சாஹூ வியாழக்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு: 118.9 கி.மீ. நீளம் கொண்ட சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தை ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த தமிழக அரசு முன்மொழிந்திருந்தது. மிகவும் ஆழமான சாத்தியக்கூறு ஆய்வு, வளங்களின் இருப்பு போன்றவை அடிப்படையில்தான் இதற்கு ஒப்புதல் தர முடியும். தற்போது இது மாநில துறை திட்டமாக நடப்பதால் அதன் செயலாக்கத்துக்கான செலவினத்தை தமிழக அரசே ஏற்கிறது என்று ஒரு கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

நிதி ஒதுக்கீட்டைப் பொருத்தவரை, கடந்த ஐந்து ஆண்டுகளில் தில்லி, பெங்களூரு, பாட்னா, மும்பை, ஆமதாபாத், கான்பூா், ஆக்ரா ஆகிய நகரங்களில் மெட்ரோ திட்டங்களை செயல்படுத்த 2019 முதல் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. லக்னெள நகரத்துக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை. தமிழகத்தில் சென்னையில் திட்டத்தை செயல்படுத்த 2022-23, 2024 ஆகிய நிதியாண்டுகளில் ஒரு ரூபாயை கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை. 2019-இல் ரூ.1,380.4 கோடி, 2020-21-இல் ரூ. 51 கோடி, 2021-22-இல் ரூ. 935.78 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

கொல்கத்தாவுக்கு 2021-22 நிதியாண்டில் மட்டும் ரூ. ரூ. 634.53 கோடி ஒதுக்கிய அரசு அதற்கு முன்பும், பின்பும் எந்த நிதியையும் ஒதுக்கவில்லை, இதேபோல, கேரளத்தின் கொச்சியில் 2022-23 நிதியாண்டில் ரூ. 146.74 கோடியை தவிர அதற்கு முன்பும் பின்பும் எந்த நிதியையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை என்பது அமைச்சரின் பதில் மூலம் தெரிய வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →