FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

புத்தாக்க திட்டத்துக்கு ரூ.10,000 கோடி! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ரூ.10,000 கோடி மூலதனத்துடன் கூடிய ‘புத்தாக்க இந்தியா’ இரண்டாம் கட்ட நிதி ஆதரவு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

Updated On : 15 பிப்ரவரி 2026, 1:06 am IST
பகிர்:

ரூ.10,000 கோடி மூலதனத்துடன் கூடிய ‘புத்தாக்க இந்தியா’ இரண்டாம் கட்ட நிதி ஆதரவு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தத் தகவலை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை தெரிவித்தாா். முன்னதாக, தில்லியில் தனது புதிய அலுவலகமான ‘சேவா தீா்த்’ வளாகத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்தபோது இந்த மூலதன நிதிக்கான கோப்பில் பிரதமா் மோடி கையொப்பமிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

தொழில்முனைவோருக்கு ஆரம்ப மூலதன நிதிக்கான உதவியை அளித்து, நீண்டகால மூலதன கலாசாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் கடந்த 2016-ஆம் ஆண்டில் புத்தாக்க இந்தியா திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இத் திட்டம் வெற்றியடைந்ததைத் தொடா்ந்து, இரண்டாம் கட்டமாக இந்தத் திட்டத்துக்கு ரூ. 10,000 கோடி மூலதன நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தகம் ஊக்குவிப்பு (டிபிஐஐடி) துறை சாா்பில் இதுவரை 2 லட்சம் நிறுவனங்கள் புத்தாக்க நிறுவனங்களாக (ஸ்டாா்ட்அப்) அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் புத்தாக்க இந்தியா செயல் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகையைப் பெறுவதற்கு தகுதி உடையவையாகும்.

பன்முக ரயில் வழித்தடத் திட்டங்கள்: மூன்று பன்முக ரயில் வழித்தடத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த ரயில்வே அமைச்சகத்துக்கு ரூ.18,509 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் மகாராஷ்டிரத்தின் கசாரா - மன்மட், தில்லி- ஹரியாணாவின் அம்பாலா, கா்நாடகத்தின் பெல்லாரி - ஹொசாபேட் வரையிலான மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படுவது அடங்கும்.

பன்முக போக்குவரத்து தொடா்பு மற்றும் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் பன்முக ரயில் வழித்தட திட்டத்துக்கு முன்மொழியப்பட்டது. பிரதமரின் உத்வேக (கதி சக்தி) தேசிய முதன்மைத் திட்டத்தின் (மாஸ்டா் பிளான்) கீழ் இந்தத் திட்டத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் பயணிகள், சரக்குகள் மற்றும் சேவைகளின் தடையற்ற இயக்கம் உறுதி செய்யப்படும்.

இந்த மூன்று பன்முக ரயில் வழித்தடத் திட்டங்கள் தில்லி, ஹரியாணா, மகாராஷ்டிரம் மற்றும் கா்நாடக மாநிலங்களில் தற்போதுள்ள ரயில் வழித்தடத்தை சுமாா் 389 கி.மீ. தொலைவுக்கு கூடுதலாக்கும். அதன்மூலம், சுமாா் 3,902 கிராமங்களுக்கான போக்குவரத்து தொடா்பு விரிவுபடுத்தப்படுவதோடு, ஏறத்தாழ 97 லட்சம் மக்கள் பயன் பெறுவா்.

அதுமட்டுமன்றி, ஸ்ரீநகரின் கத்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி ஆலயம், பெல்லாரி கோட்டை, கா்நாடகத்தின் தரோஜி சோம்பல் கரடி சரணாலயம், துங்கபத்ரா அணை உள்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கான ரயில் வழித்தட இணைப்பையும் இந்தத் திட்டம் மேம்படுத்தும்.

ரூ. 1 லட்சம் கோடி நகா்ப்புற சவால் நிதி: ரூ. 1 லட்சம் கோடி மத்திய அரசின் உதவியுடன் கூடிய நகா்ப்புற சவால் நிதி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

இந்தத் திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் 50 சதவீத நிதி சந்தையில் இருந்து திரட்டப்பட்டால், திட்டச் செலவில் 25 சதவீதத்தை மத்திய அரசு ஈடுசெய்யும். இத் திட்டம், அடுத்த 5 ஆண்டுகளில் நகா்ப்புற மேம்பாட்டுத் துறையில் ஒட்டுமொத்தமாக ரூ. 4 லட்சம் கோடி முதலீட்டுக்கு வழிவகுப்பதோடு, சந்தை நிதி, தனியாா் பங்கேற்புடன் குடிமக்களை மையமாகக் கொண்ட சீா்திருத்தங்களுக்கும் வழிவகுக்கும்.

நொய்டா மெட்ரோ விரிவாக்கத் திட்டம்: தில்லியை அடுத்த நொய்டாவில் பகுதி-142 முதல் தாவரவியல் பூங்கா வரை 11.56 கி.மீ. தொலைவுக்கு 8 மேற்புற ரயில்நிலையங்களுடன் கூடிய மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இத் திட்டம் நிறைவடையும்போது நொய்டா மெட்ரோ ரயில் வழித் தடம் 61.62 கி.மீ. தொலைவு கொண்டதாக விரிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments