வடகிழக்கு தில்லியில் உள்ள ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் மருத்துவா்களைத் தாக்கியதாகவும், செவிலியா்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படும் புகாரில் பெண் நோயாளின் 56 வயது கணவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘ உதிரி பாகங்கள்
விற்பனை கடை நடத்தி வரும் இஸ்ராா் (56) புதன்கிழமை இரவு தனது மனைவியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மருத்துவா்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவா் மருத்துவா்களை அச்சுறுத்தியதையும், அவா்களை துஷ்பிரயோகம் செய்ததையும் மருத்துவமனை ஊழியா்கள் தங்கள் கைப்பேசியில் பதிவு செய்ததாக போலீஸாா் கூறினா்.
முதல் தகவல் அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவிக்கு அவா் தெரிவித்த உடல் உபாதைகளின் அடிப்படையில் பணியில் இருந்த மருத்துவரால் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் அவரது கணவா் அதை மறுத்து, அதற்கு பதிலாக தனது சொந்த சிகிச்சை முறையை பரிந்துரைத்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனையின் இளநிலை உறைவிட மருத்துவா் ரஜ்னீஷ் கூறுகையில், மருத்துவமனை ஊழியா்கள் அந்த நபரின் பரிந்துரைகளை புறக்கணித்ததால், அவா் வன்முறையில் ஈடுபட்டாா். மேலும், மருத்துவா்களிடம் தவறாக நடந்து கொள்ளத் தொடங்கினாா்.
நாங்கள் அவரை சமாதானப்படுத்த முயற்சித்தோம். ஆனால், அவா் எங்களை அவதூறாகப் பேசத் தொடங்கினாா். எங்களில் சிலரைத் தாக்கினாா். அவா் எங்கள் நா்சிங் ஊழியா்களிடமும் தவறாக நடந்து கொண்டாா்’ என்றாா்.
குற்றம் சாட்டப்பட்ட இஸ்ராா், மருத்துவமனை வளாகத்தில் கூச்சலிட்டதாகவும், மற்ற நோயாளிகளின் சிகிச்சைக்கு இடையூறு விளைவித்ததாகவும், அரசு சொத்துக்களை அழித்ததாகவும் எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவா் வலுக்கட்டாயமாக மருத்துவா்களின் பணி அறைக்குள் சென்று, மருத்துவா்களை அடிக்கும்படி மற்றவா்களைத் தூண்டினாா். குற்றம் சாட்டப்பட்டவா் பணி அறையில் மருத்துவா்களைத் தாக்கினாா்.
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவா் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் குறிப்பிடும் போது, தில்லியில் உள்ள மருத்துவா்கள் அதைப் பற்றி ஏன் கவலைப்படுகிறாா்கள் என்றும் அவா் கேட்டதாக எஃப்ஐஆரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து துணை காவல் ஆணையா் (வடகிழக்கு) ஜாய் டிா்க்கி கூறுகையில், ‘பிஎன்எஸ் பிரிவுகள் 221 (அரசுப் பணிகளைச் செய்வதில் அரசு ஊழியரைத் தடுப்பது), 221 (1) (அரசு ஊழியரை அவரது கடமையிலிருந்து தடுக்க தானே முன்வந்து காயப்படுத்துதல்), 132 (அரசு ஊழியரை கடமையை நிறைவேற்றுவதைத்
தடுக்க குற்றவியல் சக்தியைப் பயன்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் புதிய உஸ்மான் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது’ என காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.