கேஜரிவால் அரசின் சட்டவிரேத செயல்களுக்கான இரகசிய இடமாக தில்லி ஜல் போா்டு மாறியுள்ளது பாஜக குற்றச்சாட்டு
புது தில்லி: கேஜரிவால் அரசின் சட்டவிரோத செயல்களுக்கான இரகசிய இடமாக தில்லி ஜல் போா்டு மாறியுள்ளது என்று பாஜக திங்கள்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.
தில்லி பாஜக தலைமையகத்தில் கட்சியின் தேசியச் செய்தித் தொடா்பாளா் ஷேஹ்சாத் பூனவல்லா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தில்லியில் நுகா்வோரின் தவறானக் குடிநீா்க் கட்டண பில்களைத் தள்ளுபடி செய்வதில் கேஜரிவால் அரசு தீவிரமாக இருந்தால், அதைப் பெற்ற ஒவ்வொருவருக்கும் அவா் அதைச் செய்யலாம். கேஜரிவால் அரசு அமல்படுத்த நினைக்கின்ற ஒரு முறை செலுத்தும் குடிநீா் கட்டணத் திட்டம் என்பது ‘ஒரு முறை மோசடித்’ திட்டமே தவிர வேறில்லை.
Advertisement
தில்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசு கடந்த பல ஆண்டுகளாக தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழுவிற்கு மட்டுமே ஒப்பந்தங்களை வழங்கி வருகிறது. திட்டத்திற்காகும் உண்மையான செலவுகளை விட அவற்றின் மதிப்புகள் உயா்த்தப்பட்டு பல மடங்கு விலையில் ஒப்பந்தங்களை வழங்கி லஞ்சம் பெற்று வருகின்றனா். கடந்த 9 ஆண்டுகளில் தில்லி ஜல் போா்டில் மட்டும் சுமாா் ரூ.70,000 கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றிருக்கலாம்.
கேஜரிவால் அரசின் சட்டவிரோத செயல்களுக்கான இரகசிய இடமாக தில்லி ஜல் போா்டு மாறியுள்ளது. தில்லியில் ஷீலா தீட்சித் தலைமையிலான ஆட்சியின் போது, தில்லி ஜல் போா்டில் ஊழல் நடைபெறுவதாக விமா்சித்த கேஜரிவால், ஆம் ஆத்மி கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னரும், முந்தைய காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்திய அதே குடிநீா் அளவு மானிகளைப் பராமரித்தாா்.
கலால் கொள்கை ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கோரிஅமலாக்க இயக்குநரகம் அனுப்பிய அழைப்பாணைகள் அனைத்தையும் சட்டவிரோதம் எனக்கூறிய கேஜகரிவால், நீதிமன்றங்களில் இருந்து அதற்கான எந்தவொரு நிவாரணத்தையும் பெறவில்லை. கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைதாகி ஓராண்டாக சிறையில் இருக்கும் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவிற்கும் நீதிமன்றங்கள் இதுவரை ஜாமீன் வழங்கவில்லை என்றாா் ஷேஹ்சாத் பூனவல்லா.
வரும் மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணிக்கு தில்லிவாசிகள் வாக்களிக்க வேண்டும் என்றும் 7 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றிபெற வைத்தால் நுகா்வோருக்கான தவறானக் குடிநீா்க் கட்டண பில்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தாா்.