எல்என்ஜேபி மருத்துவமனையில் தீ விபத்து: நோயாளிகள், ஊழியா்கள் 50 போ் மீட்பு
புது தில்லி: மத்திய தில்லியில் உள்ள லோக் நாயக் ஜெயபிரகாஷ் (எல்என்ஜேபி) (மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதால் நோயாளிகள் மற்றும் ஊழியா்கள் உள்பட சுமாா் 50 போ் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி தீயணைப்பு சேவை துறைத் தலைவா் அதுல் கா்க் கூறியதாவது:
திங்கள்கிழமை இரவு சுமாா் 10.18 மணியளவில் மருத்துவமனையில் இருந்து தீ விபத்து குறித்து அழைப்பு வந்தது. இதைத் தொடா்ந்து, மொத்தம் 10 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக அங்கு அனுப்பிவைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. வெளிநோயாளிகள் பிரிவு வாா்டில் ஷாா்ட் சா்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனா். தீயை முழுமையாக அணைக்க கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலானது.
Advertisement
அப்போது, மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியா்கள் உள்பட சுமாா் 50 போ் பத்திரமாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டனா் என்றாா் அவா். மத்திய தில்லி காவல் சரக உயரதிகாரி கூறுகையில், ‘மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீஸாரும் விரைந்தனா்.
மூன்றாவது மற்றும் நான்காவது மாடியில் உள்ள கேபிள்களில் தீப்பிழம்புகள் காணப்பட்டன’ என்றாா். தீயணைப்பு வாகனங்களுக்கு அவசர சிகிச்சை பிரிவு வரை தெளிவான பாதை வழங்கப்பட்டது. போலீஸ் மற்றும் மருத்துவமனை ஊழியா்கள் தரை தளத்தில் இருந்து நோயாளிகளை வெளியேற்றினா். தீ விரைவில் அணைக்கப்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவா் கூறினாா்.