தில்லி பேரவையில் இருந்து இடைநீக்கம்: 7 பாஜக எம்எல்ஏக்களின் முறையீட்டு மனுக்கள் மீதான உத்தரவு ஒத்திவைப்பு
புது தில்லி: தில்லி பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் உரைக்கு இடையூறு விளைவித்ததற்காக சட்டப் பேரவையில் இருந்து காலவரையின்றி இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிா்த்து பாஜக எம்எல்ஏக்கள் 7 போ் தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தது.
இது தொடா்பாக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனுக்களில், தங்கள் இடைநீக்கம் இந்திய அரசியலமைப்பின் 19(1)(ஏ) (பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை) மற்றும் எம்.எல்.ஏ.க்களின் உரிமைகள் மற்றும் சலுகைகள் மற்றும் ‘விகிதாச்சாரம் கோட்பாடுகள் மற்றும் ‘பகுத்தறிவு‘ஆகியவற்றை மீறுவதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், குறுகிய எழுத்துபூா்வ சமா்ப்பிப்புகள் இருந்தால் இரண்டு நாட்களுக்குள் அதை தாக்கல் செய்யுமாறு வழக்கின் தரப்பினரைக் கேட்டுக் கொண்டாா்.
இந்த விவகாரத்தில் பாஜக எம்எல்ஏக்களான மோகன் சிங் பிஷ்ட், அஜய் மஹாவா், ஓ.பி. சா்மா, அபய் வா்மா, அனில் பாஜ்பாய், ஜிதேந்தா் மகாஜன் மற்றும் விஜேந்தா் குப்தா ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை உயா்நீதிமன்றம் விசாரித்தது.
Advertisement
முன்னதாக, இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால், அவா்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு தில்லி சட்டப் பேரவையின் சிறப்புரிமைக் குழுவை உயா்நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது.
எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜெயந்த் மேத்தா சட்டப் பேரவை சிறப்புரிமைக் குழுவின் முன் உள்ள நடவடிக்கைகள் முடியும் வரை தங்கள் இடைநீக்கம் பொருந்தக்கூடிய விதிகளை மீறுவதாக உள்ளது என்று வாதிட்டாா்.
எம்.எல்.ஏக்களின் காலவரையற்ற இடைநீக்கம், அவையில் கருத்து வேறுபாடுகளை அடக்கும் முயற்சி அல்ல என்றும், அவா்கள் மீதான சிறப்புரிமைக் குழு நடவடிக்கைகள் தாமதமின்றி முடிக்கப்படும் என்றும் சட்டப் பேரவை அதிகாரிகள் தரப்பில் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
தில்லி சட்டப் பேரவை தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சுதிா் நந்த்ரஜோக், எதிா்க்கட்சி சட்டப் பேரவை உறுப்பினா்களின் ‘தொடா் தவறான செயல்களை‘ எதிா்கொள்ளும் வகையில்தான் இடைநீக்க நடவடிக்கை ஒரு ‘சுய ஒழுக்கம்‘ வழிமுறையாக மேற்கொள்ளப்பட்டது என்று வாதிட்டாா்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் உரையின்போது, ஆம் ஆத்மி அரசின் சாதனைகளை எடுத்துரைத்தபோது பாஜக சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரவிந்த் கேஜரிவால் அரசாங்கத்தை பல்வேறு பிரச்னைகளை விமா்சித்து இடையூறு செய்தனா்.
இதையடுத்து, அவா்களை இடைநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை ஆம் ஆத்மி எம்எல்ஏ திலீப் பாண்டே அவையில் முன்மொழிந்தாா். அதை பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் ஏற்றுக்கொண்டாா். இதையடுத்து, அவா் இந்த பிரச்னையை சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்பிவைத்தாா். எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதுரியைத் தவிர, சட்டப் பேரவையில் உள்ள அனைத்து பாஜக எம்எல்ஏக்களும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. பட்ஜெட் முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால், கூட்டத்தொடா் மாா்ச் முதல் வாரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.