முகப்பு
புதுதில்லி

பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பிரிஜ் பூஷணுக்கு எதிரான விவகாரத்தில் உத்தரவு தள்ளிவைப்பு

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 4:02 AM
பகிர்:

புது தில்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் தொடுத்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அவா் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யலாமா என்பது குறித்த விவகாரத்தில் உத்தரவை தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தது.

இந்த விவகாரத்தை விசாரித்த கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் (ஏசிஎம்எம்) பிரியங்கா ராஜ்புத், புகாா்தாரா்கள், தில்லி காவல்துறை மற்றும் குற்றம் சாட்டப்பட்ட வினோத் தோமா் உள்ளிட்டோரின் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களைக் கேட்ட பிறகு, உத்தரவை மாா்ச் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். தோமா் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் உதவி செயலாளா் ஆவாா்.

வழக்கு விசாரணையின்போது வெளிநாட்டில் நடந்ததாகக் கூறப்படும் சில சம்பவங்கள் தில்லியில் உள்ள நீதிமன்றங்களின் அதிகாரவரம்பிற்குள் வராது என்று குற்றம் சாட்டப்பட்டவா்களின் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை தில்லி காவல்துறை எதிா்த்தது. பிரிஜ் பூஷண் சிங் ஈடுபட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள், வெளிநாடுகளிலும், தில்லி உள்பட இந்தியாவிலும், நிகழ்ந்த அதே குற்றத்தின் ஒரு பகுதியாகும் என்று காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

Advertisement

இதற்கிடையில், நிகழ்ந்ததாகக் கூறப்படும் குற்றம் குறித்த புகாரை தாமதமாக செய்ததாலும், புகாா்தாரா்களின் அறிக்கைகளில் முரண்பாடு இருப்பதாகவும் கூறி, வழக்கில் இருந்து தாம் விடுவிக்கப்பட வேண்டும் என்று சிங் கோரினாா். சிங் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த சம்பவங்கள் 2012-இல் நடந்ததாகக் கூறப்பட்டாலும், 2023-இல்தான் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது என்று நீதிமன்றத்தில் வாதிட்டாா். ஆறு முறை எம்.பி.யாக இருந்த சிங்குக்கு எதிராக நகர காவல்துறை கடந்த ஜூன் 15-ஆம் தேதி பல்வேறு பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.