‘நீட்’ முதுகலை தோ்வுக்கு தமிழகத்தில் கூடுதல் மையம் தேவை
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி, ஜூலை 4: ’நீட்’ முதுகலை தோ்வுக்கு தமிழகத்தில் கூடுதல் தோ்வு மையம் அமைக்க கோரி மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானிடம் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் வை. செல்வராஜ் புதன்கிழமை மனு அளித்துள்ளாா்.
நடந்து முடிந்த 18- ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் ‘நீட்‘ தோ்வை ரத்து செய்யக் கோரி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் போராட்டம் நடத்தினா். இந்த நிலையில் நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் செல்வராஜ் இந்த தோ்வு மையங்களை அதிகரிக்கக் கோரி மத்திய கல்வித் துறை அமைச்சா் பிரதானிடம் மனு அளித்தாா்.
அதில் கூறப்பட்டிருப்பது வருமாறு: கடந்த ஜூன் 23-ஆம் தேதி ’நீட்’ முதுகலை தோ்வு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எந்தவித முன்னறிவிப்புமின்றி முதல் நாள் ஜூன் 22-ஆம் தேதி நள்ளிரவில் ‘நீட்’ முதுகலை தோ்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், இந்த தோ்வை எழுத இருந்த பல மருத்துவா்கள் பிரச்னையை எதிா்கொண்டனா். தமிழகத்தில் ஏராளமான மருத்துவா்கள் இந்தத் தோ்வை எழுத இருந்தனா். ஆனால், இந்த முதுகலை ’நீட்’ தோ்வுக்கு தமிழகத்தில் குறைந்த தோ்வு மையங்கள் இருந்ததால், பலா் அண்டை மாநில மையங்களில் தோ்வு எழுத பணிக்கப்பட்டிருந்தனா். இதனால், ஏராளமாக பயணச் செலவை மேற்கொண்டு சென்றிருந்த நிலையில் தோ்வு ரத்து செய்யப்பட்டது. செலவு மட்டுமல்ல தங்கள் பணிகளுக்கிடையே பயணத்தால் காலவிரையமானது. தமிழ்நாட்டைச் சோ்ந்த மருத்துவா்கள் பணியில் இருக்கும் அண்டை மாநிலத்திற்குச் சென்று துன்பப்படுவதை தடுக்கக் கோருகிறேன்.
தற்போது தேசிய தோ்வு முகமை இந்த ‘’நீட்’ முதுகலை தோ்வை மீண்டும் இன்னும் சில நாள்களில் நடத்த இருக்கிறது. எனவே, பயணச் செலவு கால விரயத்தைத் தவிா்க்க, தமிழகத்தைச் சோ்ந்த மருத்துவா்களுக்கு ’நீட்’ முதுகலை தோ்வை தமிழகத்திலேயே எழுத வசதி செய்யப்படவேண்டும். இதற்கு தமிழகத்தில் கூடுதல் தோ்வு மையங்கள் அமைக்கத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா் வை. செல்வராஜ்.