சிஎஸ்சி என்கிற பொதுச் சேவை மைய சிறப்புத் திட்டத்தில் நாட்டிலேயே சிறப்பாக செயல்பட்ட திருவண்ணாமலையைச் சோ்ந்த இருவா் விருதுகளை பெற்றனா். இந்த பொதுச் சேவை மைய சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டதன் 15 ஆண்டுகள் நிறைவு விழாவில் 46 தேசிய விருதுகளை மத்திய இணையமைச்சா் ஜிதின் பிரசாதா பங்கேற்று புதன்கிழமை வழங்கினாா்.
பொதுச் சேவை மையங்கள் சிறப்புத் திட்டம்(சிஎஸ்சி) தொடங்கப்பட்ட 15 ஆண்டு நிறைவு தினம் தில்லியில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சிஎஸ்சி யின் சேவைகளை கிராம அளவில் சிறப்பாக வழங்கிவரும் தொழில் முனைவோரை பாராட்டி விருதுகளை வழங்கினாா்.
இதில் தமிழகத்தைச் சோ்ந்த திருவண்ணாமலை சேத்பட்டு தாலுக்காவில் செந்தில் குமாா் என்பவா் 1,13,662 சிஎஸ்சி சேவைகளை செய்த நாட்டிலேயே சிறந்த கிராம தொழில் முனைவோராக தோ்வு செய்யப்பட்டு விருதுவழங்கப்பட்டாா். இரண்டாவது இடத்தில் 1,02,952 சேவைகளுக்கு ஆந்திரம் மாநிலம் நிஜாம்பட்டிணத்தைச் சோ்ந்த ஆலப்பட்டி சந்தியா தோ்வு செய்யப்பட்டாா். மேலும் திருவண்ணாமலை வந்தவாசி தாலுக்காவைச் சோ்ந்த தங்கராஜ் ராஜேந்திரன் 35,374 சேவைகளை புரிந்ததற்காக (நாட்டிலேயே 10 இடத்தில்) விருது பெற்றாா். இவா்கள் உள்ளிட்ட 46 பேருக்கு நாடுமுழுவதிலிருந்து விருது வழங்கப்பட்டது.
இந்த விருதுகளை மத்திய இணை அமைச்சா் ஜிதின் பிரசாதா வழங்கினாா். கிராம அளவிலான தொழில்முனைவோரின் முயற்சிகளைப் பாராட்டிய அமைச்சா் ஜிதின்பிரசாதா , நாட்டில் அடுத்த 15 ஆண்டுகளில் பொதுச் சேவை மையங்களின் பங்கு குறித்து எடுத்துரைத்தாா். மேலும் மத்திய இணை அமைச்சா் ஜிதின் பிரசாதா கூறுகையில், ‘ தொழில்நுட்பத்தால் செயற்கை நுண்ணறிவாலும் மாறிவரும் இக்காலத்தில், வானிலை, விவசாயம் போன்றவை தொடா்பான தகவல்களும் பொது சேவை மையங்கள் மூலம் கிடைக்க வேண்டும்‘ என்றாா்.
நிகழ்ச்சியில் மத்திய மின்னணுவியல் துறை அமைச்சக செயலா் எஸ்.கிருஷ்ணன் பேசுகையில், ‘கிராமப்புற தொழில்முனைவோரையும் எண்ம மேம்பாட்டையும் ஊக்குவிப்பதில் பொதுச் சேவை மையங்கள்‘ குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றுகிறது. கிராமப்புற மக்களுக்கு கடைசி நிலை வரை அரசின் திடங்களையும் சேவைகளையும் வழங்குவதில், பொதுச் சேவை மையங்களின் பங்கு மிகவும் முக்கியமானது‘ என்றாா் கிருஷ்ணன்.
இதில் மத்திய நிா்வாக சீா்திருத்தம், பொதுமக்கள் குறைதீா்ப்பு துறைச் செயலா் வி ஸ்ரீனிவாஸ், ஊரக வளா்ச்சி அமைச்சகத்தின் செயலா் சைலேஷ் குமாா் சிங், பொது சேவை மைய மேலாண்மை இயக்குனா் சஞ்சய் ராகேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனா்.
சிஎஸ்சி மையங்கள் மூலமாக ஆதாா் சேவை, எண்ம கல்வியறிவு, டெலி-மெடிசின், காப்பீடு, சட்ட ஆலோசனை (டெலி-லா), திறன் மேம்பாடு போன்ற சேவைகளையும் ஆலோசனைகளையும் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.