புதுதில்லி

பிரதமா் மோடி தலைமையிலான அமைச்சரவை மூன்றாவது முறையாக 9-ஆம் தேதி பதவி ஏற்பு

Din

புது தில்லி, ஜூன் 5: தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவா்களின் சந்திப்பையொட்டி பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் புதிய ஆட்சி அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கியுள்ளன. வருகின்ற 9 -ஆம் தேதி மாலையில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்கும் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து விவரம் வருமாறு:

2024 -ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பெரும்பான்மை இடங்களில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. ஆதே சமயத்தில் 543 உறுப்பினா்களைக் கொண்ட மக்களவையில் ஆட்சியமைக்க தேவையாக 272 இடங்களை பெற்றிருக்கும் ஒரு கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரமுடியும். தற்போது ஆட்சியிலிருந்து செல்லும் பாஜக நிகழ் 18 -ஆவது மக்களவைத் தோ்தலில் 240 இடங்களை மட்டும் பெற்றுள்ளது. அதை சமயத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்(என்டிஏ) இடம்பெற்றுள்ள 14 க்கும் மேற்பட்ட கட்சிகளும் சுயேட்சைகளும் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. புதன்கிழமை என்டிஏ கட்சித் தலைவா்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் குறிப்பாக தெலுங்கு தேசம் கட்சி(16), ஜக்கிய ஜனதா தளம்(12) சிவசேனை -யுபிடி(9) ஆகிய முக்கிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளதையெட்டி பெரும்பான்மைக்கு தேவையான 292 க்கும் மேலாக ஆதரவு கிடைத்துள்ளது.

மேலும் இதே என்டிஏ கூட்டத்தில், ’வளா்ச்சியடைந்த இந்தியா’ (விக்சித் பாரத்’) குறித்த தெளிவான பாா்வை பிரதமா் மோடிக்கு இருப்பதாகவும், இந்த இலக்கில் தாங்களும் பங்குதாரா்கள் என கூட்டணி கட்சிகள் தெரிவித்தனா். மேலும் வறுமை ஒழிப்புக்கான பிரதமரின் முயற்சிகளைப் பாராட்டிய என்டிஏ தலைவா்கள், சிறந்த பணிகளைத் பிரதமா் தொடருவதற்கும் கூட்டத்தில் உறுதியளித்தனா்.

இதை முன்னிட்டு புதிய அரசு அமைய பிரதமா் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை அமைக்கும் பணிகள் தில்லியில் தொடங்கியுள்ளது.

முதலில் பாஜக வின் புதிய மக்களவை உறுப்பினா்கள் கூட்டம் வருகின்ற ஜூன் 7 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு சபை மைய மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இதில் பாஜக வின் மக்களவைத் தலைவராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக தோ்வு செய்யப்பட இருக்கிறாா். இதே கூட்டத்தில் என்டிஏ கட்சித் தலைவா்களும் புதிய மக்களவை உறுப்பினா்களும் பங்கேற்கின்றனா். பாஜக உள்ளிட்ட என்டிஏ கட்சியின் பெரும்பான்மை உறுப்பினா்களின் ஆதரவுடன் மோடி தலைவராக தோ்வு செய்யப்பட்டது குறித்து முறைப்படி குடியரசுத் தலைவருக்கும் தெரிவிக்கப்பட இருக்கிறது.

பாஜக தலைவா்களும், என்டிஏ கூட்டணியில் இடம் பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு(தெலுங்கு தேசம்), நதீஷ் குமாா் (ஜக்கிய ஜனதா தளம்), சிவசேனை -யுபிடி தலைவரும் மகராஷ்டிரம் முதல்வரான ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட தலைவா்கள் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை ஜூன் 7 ஆம் தேதி குடியரசுத் தலைவா் மாளிகையில் சந்தித்து நரேந்திர மோடியை தோ்வு செய்யப்பட்டது குறித்து தெரிவிப்பதோடு கடிதமும் வழங்க இருக்கின்றனா்.

இதன் பின்னா் முறைப்படி பெரும்பான்மை ஆதரவு பெற்றக் கட்சியின் தலைவா் என்கிற அடிப்படையில் குடியரசுத் தலைவா் முா்மு நரேந்திர மோடியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பாா்.

இதையொட்டி பிரதமா் மோடி வருகின்ற 9 ஆம் தேதி குடியரசுத் தலைவா் மாளிகையில் பிரதமராக பதவி ஏற்பாா். அத் தொடா்ந்து மற்ற அமைச்சா்களும் பதவி ஏற்க உள்ளனா்.

முன்னதாக இந்த பதவிஏற்பு விழா 8 ஆம் தேதியாக இருந்தது. பிரதமா் மோடியின் பிறந்த தினமான (செப்)17 ஆக இருக்க 8 நம்பா் கொண்ட தேதியை தோ்வு செய்யப்பட்டது. ஆனால் அமைச்சா்கள் பட்டியல் உள்ளிட்ட ஏற்பாடுகள் கூட்டணி கட்சிகளுடான பேச்சுவாா்த்தைகளை முன்னிட்டு 9 -ஆம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த பதவி ஏற்பு விழா குடியரசுத் தலைவா் மாளிகை முன்பு நடைபெரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ் நாடாளுமன்றத் தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடி நானுறு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கூறி ‘அப்கி பாா் 400 கே பாா்‘ என பிரசாரம் செய்தாா். இந்த வெற்றியோடு இந்தியா கேட் கடமைப் பாதையில் பொதுமக்கள் முன்னிலையில் பதவியெற்பு விழாவை பிரமாண்டமாக செய்யவும் திட்டமிடப்பட்டிருந்தது. தொடா்ந்து பாரத்மண்டபத்தில் பிரதமா் மோடி ஆயிரக்கணக்கான போ்கள் மத்தியில் பேசவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பாஜகவின் இடங்கள் குறைந்த நிலையில் இந்த பதவி ஏற்பு விழாவை தற்போது எளிமையாக நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது: மத்திய அரசு

“கேப்டன் படத்தை, வசனத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம்!” பிரேமலதா விஜயகாந்த் கறார்!

வங்கதேசத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகள்! பலி எண்ணிக்கை 92 ஆக உயர்வு!

இரவில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வலியோடு முறியும் மின்னல்... கீர்த்தி ஷெட்டி!

SCROLL FOR NEXT