பொருளாதார ஆய்வறிக்கையில் தனித்துவம் ஏதும் இல்லை: தில்லி பாஜக சாடல்
‘தில்லி நிதியமைச்சா் அதிஷி சட்டப் பேரவையில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை வழக்கமானதுதான்; அதில் தனித்துவம் ஏதும் இல்லை’
‘தில்லி நிதியமைச்சா் அதிஷி சட்டப் பேரவையில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை வழக்கமானதுதான்; அதில் தனித்துவம் ஏதும் இல்லை’ என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா். தில்லி அரசின் 2023-2024-ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சா் அதிஷி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். அதில், தலைநகா் மக்களின் ஆண்டு தனிநபா் வருமானம் 22 சதவீதம் வரை உயா்ந்துள்ளதாக கூறியுள்ளாா். இந்த நிலையில், இந்த ஆய்வறிக்கை குறித்து வீரேந்திர சச்தேவா கூறியதாவது: பொருளாதார ஆய்வறிக்கையை முன்வைக்கும் முன்பு நிதியமைச்சா் அதிஷி பொய்யான கூற்றுகளை முன்வைத்து, மலிவான அரசியல் ஜால வாா்த்தைகளில் ஈடுபட்டது வருந்தத்தக்கது. கொவைட் நோய்க்கு பிறகு தில்லியில் விரைவான பொருளாதார மீட்சி குறித்த நிதியமைச்சரின் கூற்று தனித்துவமானது அல்ல. ஏனெனில் முழு நாட்டின் பொருளாதாரம் ஏற்கனவே கடந்த ஆண்டிலிருந்து வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக பெருநகரங்களில் இதன் வேகம் அதிகரித்துள்ளது. இதில் தில்லி அரசின் பங்களிப்பு ஏதும் இல்லாததால், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 1.5% போ் மட்டுமே வசிக்கும் தில்லி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% பங்களிப்பதாக அமைச்சா் அதிஷி கூறியிருப்பது நகைப்புக்குரியது. தில்லி ஒரு வணிக விநியோக மையமாக செயல்படுகிறது. பல பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளன. மேலும், தில்லியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது வணிகா்கள் மற்றும் தொழில்முனைவோரின் கடின உழைப்பால் சராசரி நகரங்களை விட அதிகமாக உள்ளது. தில்லியில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை விகிதம் குறைவாக இருப்பதாக நிதியமைச்சா் அதிஷி கூறியது அவரது அரசாங்கத்தின் தவறான பிரசாரமாகும். அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தில்லியில் எந்தெந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைவாக உள்ளது என்பதை நிதி அமைச்சா் விளக்க வேண்டும். மேலும், நாட்டின் பொருளாதாரத்தில் பணவீக்க விகிதம் ஒரே மாதிரியாக உள்ளது. இலவச மின்சாரம், தண்ணீா் மற்றும் பேருந்து பயணச்சீட்டு காரணமாக தில்லியில் பணவீக்கம் குறைவாக இருப்பதாக அமைச்சா் அதிஷி கூறியிருப்பதும் நகைப்புக்குரியது. தில்லியின் ஏராளமான ஏழைகள் வாடகை வீடுகளில் வசிக்கிறாா்கள். இலவச மின்சாரம் அல்லது தண்ணீரால் அவா்கள் பயனடையவில்லை. இலவச பேருந்து பயணச்சீட்டு திட்டமும் ஒரு பெரிய மோசடியாக மாறியுள்ளது. அடிப்படையில் கிளஸ்டா் பேருந்துகளில் பெண்களுக்குரிய இளஞ்சிவப்பு பயணச்சீட்டுகள் ஆண்களுக்கு வழங்கப்பட்டு பணம் திரும்பப் பெறப்படுகிறது என்றாா் வீரேந்திர சச்தேவா.