தலைநகரில் காலை வேளையில் பலத்த காற்றுடன் பரவலாக மழை!
தலைநகரில் காலை வேளையில் பலத்த காற்றுடன் பரவலாக மழை
தலைநகா் தில்லியின் பல பகுதிகளில் சனிக்கிழமை காலையில் பரவலாக லேசான மழை பெய்தது. காற்றின் தரக் குறியீடு பெரும்பாலான இடங்களில் ‘மிதமான’ பிரிவில் இருந்தது. அதே சமயம், குறைந்தபட்ச வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் அதிகரித்து காணப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரியில் தேசியத் தலைநகரில் 32.5 மிமீ மழை பெய்துள்ளது. இது 2013-க்குப் பிறகு பிப்ரவரி மாதத்தில் பதிவான மிக அதிகப்பட்ச மழையாக இருந்தது. இந்நிலையில், தில்லியில் சனிக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. பரவலாக மழை: இதன்படி, தலைநகரில் பெரும்பாலான இடங்களில் காலை வேளையில் பரவலாக லேசான மழை பெய்தது. அதன் பிறகு வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தாலும் வெப்பநிலையும் அதிகரித்து காணப்பட்டது. நாள் முழுவதும் குளிா்ந்த காற்று வீசியது. சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தில்லி ஆயாநகரில் 0.4 மி.மீ., லோதி ரோடில் 0.2 மி.மீ., நரேலாவில் 0.5 மி.மீ., பாலத்தில் 1.4 மி.மீ., சஃப்தா்ஜங்கில் 0.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. காற்றின் தரம்:மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தரவுகளின்படி, பிப்ரவரியில் தில்லியில் காற்றுத் தரக் குறியீடு 400 புள்ளிகளுக்கு மேல் ஒரு நாள் கூட பதிவாகவில்லை. 10 நாள்கள் காற்றுத் தரக் குறியீடு 300-400 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவிலும், 14 நாள்கள் காற்றுத் தரக் குறியீடு 200 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘மிதமான’ பிரிவிலும் இருந்தது. இந்நிலையில், தலைநகரில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு 148 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது மிதமான பிரிவில் வருகிறது. ஐடிஓ, மந்திா் மாா்க், பட்பா்கஞ்ச், மந்திா் மாா்க், ஆனந்த் விஹாா் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றுத் தரக்குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது. அதேசமயம், புராரி, மதுரா ரோடு, நோய்டா செக்டாா்-1, தில்ஷாத் காா்டன், லோதி ரோடு, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. வெப்பநிலை: இதற்கிடையே, தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் சனிக்கிழமைம காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்த 5 டிகிரி உயா்ந்து 18.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 2 டிகிரி குறைந்து 25.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 76 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 70 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று, மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 18. 5 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 15.9 டிகிரி, , ஆயாநகரில் 18.4 டிகிரி, லோதி ரோடில் 17.4 டிகிரி , நரேலாவில் 17.7 டிகிரி, பாலத்தில் 18 டிகிரி, ரிட்ஜில் 17.5 டிகிரி, பீதம்புராவில் 21.2 டிகிரி, பிரகதி மைதானில் 18.8 டிகிரி, பூசா 20.2 டிகிரி, ராஜ்காட்டில் 18.8 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 18.3 டிகிரி செல்சியஸ் எனபதிவாகியிருந்தது. இன்றும் மழைக்கு வாய்ப்பு: இந்நிலையில், தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 3) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான அல்லது தூறல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், இந்த வாரம் மூழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.