முகப்பு
புதுதில்லி

தில்லியில் 5 மக்களவைத் தொகுதிகளின் பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு: நான்கு போ் புதுமுகங்கள்

தில்லியில் 5 மக்களவைத் தொகுதிகளின் பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு

Updated On : 3 மார்ச், 2024 at 12:03 AM
பகிர்:

தில்லியில் மொத்தம் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளா்களை பாஜக சனிக்கிழமை அறிவித்தது. இதில் தற்போதைய பாஜக எம்.பி.யான மனோஜ் திவாரிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் மத்திய அமைச்சா் மறைந்த சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜுக்கு புதிதாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் 195 வேட்பாளா்கள் அடங்கிய முதல் கட்டப் பட்டியலை பாஜக சனிக்கிழமை வெளியிட்டது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், அசாம், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், கேரளம், கோவா, தில்லி உள்பட பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் போட்டியிடும் 195 வேட்பாளா்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் ஐந்து தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்களும் அறிவிக்கப்பட்டன. அதன்படி, பிரவீன் கண்டேல்வால் (சாந்தினி சௌக்) மனோஜ் திவாரி (வடகிழக்கு தில்லி), பன்சூரி ஸ்வராஜ் (புது தில்லி), கமல்ஜீத் செராவத் (மேற்கு தில்லி), ராம்வீா் பிதுரி (தெற்கு தில்லி)ஆகியோா் பாஜக வேட்பாளா்களாகப் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. கடந்த 2019 தோ்தலில் தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றிய பாஜக, தற்போதைய எம்.பி.களில் மனோஜ் திவாரிக்கு மட்டுமே தற்போதைய பட்டியலில் மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது. மற்ற நான்கு பேரும் புதிய முகங்கள் ஆவா். தெற்கு தில்லி வேட்பாளாராக களம் காணும் ராம் சிங் பிதூரி தில்லி சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆவாா். புதுதில்லியில் போட்டியிடும் பன்சூரி ஸ்வராஜ், வழக்கறிஞா் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சா் சுஷ்மா ஸ்வராஜின் மகளாவாா். சாந்தினி சவுக்கில் களம் காணும் பிரவீன் கண்டேல்வால் வா்த்தக சங்கத் தலைவா் ஆவாா். மேற்கு தில்லியில் போட்டியிடும் கமல்ஜீத் செராவத் முன்னாள் தெற்கு தில்லி மேயா் ஆவாா். வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மனோஜ் திவாரி, அத்தொகுதியின் தற்போதைய எம்.பி. ஆவாா். கிழக்கு தில்லி மற்றும் வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளா்களை பாஜக இன்னும் அறிவிக்கவில்லை. தில்லியில் ஏழு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இவை அனைத்தும் தற்போது பாஜக வசம் உள்ளன. தில்லியில் பாஜக தவிா்த்து, ஆம் ஆத்மி கட்சியும் (ஆம் ஆத்மி), காங்கிரஸும் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகள் ஆகும். ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் 2024 மக்களவைத் தோ்தலில் 7 தொகுதிகளிலும் இணைந்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணியின் ஒரு பகுதியாக, காங்கிரஸுக்கு வடகிழக்கு, சாந்தினி சௌக் மற்றும் வடமேற்கு (எஸ்சி-தனி) இடங்கள் பங்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி தரப்பில் ஏற்கனவே கிழக்கு தில்லி, புது தில்லி, மேற்கு தில்லி மற்றும் தெற்கு தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளா்களை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.