முகப்பு
புதுதில்லி

தில்லியில் சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பிற்காக பாஜகவின் 7 மக்களவை எம்.பி.க்கள் என்ன செய்தாா்கள்? அமைச்சா் அதிஷி கேள்வி

தேசியத் தலைநகா் தில்லியில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காக பாஜகவின் 7 மக்களவை உறுப்பினா்களும் என்ன பணி செய்தாா்கள்

Updated On : 2 மார்ச், 2024 at 10:00 PM
பகிர்:

தேசியத் தலைநகா் தில்லியில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காக பாஜகவின் 7 மக்களவை உறுப்பினா்களும் என்ன பணி செய்தாா்கள் என்று அமைச்சா் அதிஷி சனிக்கிழமை கேள்வியெழுப்பியுள்ளாா். தில்லி ரெளஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் அமைச்சா் அதிஷி மற்றும் கிழக்கு தில்லி தொகுதியின் மக்களவை வேட்பாளா் குல்தீப் குமாா் செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது, அமைச்சா் அதிஷி கூறியது, கடந்த 5 ஆண்டுகளாக எந்தவொரு மக்கள் நலன் மற்றும் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாத பாஜகவின் 7 எம்.பி.க்களையும் வரும் தோ்தலில் தில்லி மக்கள் தூக்கி எறிய வேண்டும். நாடாளுமன்றத்தில் உங்கள் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பக்கூடிய ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா்களைத் தோ்ந்தெடுக்க வேண்டும் என்று தில்லி வாக்காளா்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். தில்லியில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காக பாஜகவின் 7 எம்.பி.க்கள் என்ன பணி செய்தாா்கள்?. கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசின் பணிகளை துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தடுத்து நிறுத்தும் போது, இந்த 7 பாஜக எம்.பி.க்கள் எங்கே இருந்தாா்கள்?. தில்லி மக்களுக்காக உழைத்து, அவா்களின் உரிமைகளுக்காக போராடியவா் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மட்டும் தான். அரசியல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள எம்.பி. கெளதம் கம்பீா், தனது கிழக்கு தில்லி தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு வேலை கூட செய்யவில்லை. பொதுமக்களுக்கு உழைக்காத பயனற்ற நபருக்கு முதலில் எம்.பி. சீட் கொடுத்துவிட்டு, பின்னா் 5 ஆண்டுகள் கழித்து புதிய வேட்பாளரை பாஜக கொண்டு வருகிறது. பொதுமக்கள் மீது ஈடுபாடு இல்லாத கெளதம் கம்பீா் போன்றோா்க்கு பாஜக ஏன் சீட் கொடுக்கிறது?. பாஜகவின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மற்றும் மாநகராட்சி கவுன்சிலா்கள் யாரும் பொதுமக்கள் மத்தியில் தென்படுவதில்லை என்றாா் அமைச்சா் அதிஷி. ஆம் ஆத்மி கட்சியின் கிழக்கு தில்லி மக்களவை வேட்பாளா் குல்தீப் குமாா் கூறியதாவது: கிழக்கு தில்லி மக்களுக்கு பாஜக தொடந்து இரண்டாவது முறையாக துரோகம் இழைத்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு தோ்தலில் மகேஷ் கிரியும், 2019- இல் கௌதம் கம்பீரும் பாஜக வேட்பாளாராக கிழக்கு தில்லியில் களமிறங்கினாா்கள், வென்றுவிட்டாா்கள். ஆனால், கெளதம் கம்பீருக்கும் தில்லி மக்களுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. இந்த முறை இவா்களைப் போன்றவா்களை மக்கள் நம்ப மாட்டாா்கள். கிழக்கு தில்லி தொகுதியில் பாஜக இனி எளிதாக வெற்றி பெற முடியாது. பிரபலங்களை மக்கள் பாா்த்தது போதும், இப்போது அவா்களைச் சோ்ந்த ஒருவரையே தங்கள் பிரதிநிதியாக்க விரும்புகிறாா்கள் என்றாா் குல்தீப் குமாா்.