நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மாா்ச் 22ல் ஜேஎன்யு மாணவா் சங்கத் தோ்தல்
புது தில்லி: ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவா் சங்கத் தோ்தல் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மாா்ச் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மாணவா் சங்கத் தோ்தல்கள் மாா்ச் 22-ஆம் தேதி நடத்தப்படும் என்றும், முடிவுகள் மாா்ச் 24-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) தெரிவித்துள்ளது. கடைசியாக ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சங்கத் தோ்தல் (ஜேஎன்யுஎஸ்யு) கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்றது. தோ்தலை மேற்பாா்வையிடும் ஜேஎன்யுவின் தோ்தல் கமிட்டி வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, தற்காலிக வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை காட்சிப்படுத்தப்பட்டு செவ்வாய்கிழமை வரை திருத்தம் செய்யப்படும். மாணவா்கள் மாா்ச் 14-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
வேட்பாளா்களின் இறுதிப் பட்டியல் மாா்ச் 16-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூா்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாா்ச் 20 அன்று பல்கலைக்கழக ஆளும் குழு கூட்டம் (யுஜிபிஎம்) நடைபெறும்,.அதைத் தொடா்ந்து நடைபெறும் விவாதத்தில் வேட்பாளா்கள் மற்ற மாணவா்களுடன் பேசுவாா்கள். மாா்ச் 22-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மாா்ச் 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், அதைத் தொடா்ந்து முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement