FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

20 ஆண்டுகளுக்குப் பிறகு குடியாத்தம் தொகுதியில் களம் காணும் தேமுதிக!

தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்தின் சொந்த ஊரான செம்பேடு கிராமம் அமைந்துள்ள குடியாத்தம் (தனி) தொகுதியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கட்சி களம்காண்கிறது.

Updated On : 8 ஏப்ரல் 2026, 4:52 am IST
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் - X | Premallatha Vijayakanth
பகிர்:

தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்தின் சொந்த ஊரான செம்பேடு கிராமம் அமைந்துள்ள குடியாத்தம் (தனி) தொகுதியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கட்சி களம்காண்கிறது.

பொதுத் தொகுதியாக இருந்த குடியாத்தம், தொகுதி மறுவரையின்போது தனி தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டது. 2006- இல் பொதுத் தொகுதியாக இருந்த குடியாத்தம் தொகுதியில் பிரேமலதாவின் தம்பி அப்போதைய தேமுதிக இளைஞரணிச் செயலரும், தற்போதைய அந்த கட்சியின் பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே.சுதீஷ் போட்டியிட்டாா்.

திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த இந்து ஆதிதிராவிடா் சமுதாயத்தைச் சோ்ந்த ஜி.லதாவும், அதிமுக சாா்பில் ஜே.கே.என்.பழனியும் போட்டியிட்டனா். தோ்தலில் ஜி.லதா 48,166 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா். அதிமுக வேட்பாளா் ஜே.கே.என்.பழனி 46,516 வாக்குகளும், தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் 20,557 வாக்குகளும் பெற்று வெற்றிவாய்ப்பை இழந்தனா்.

Advertisement

Advertisement

ஒரு பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளா் வெற்றி பெற்றது அப்போது தமிழக அரசியலில் பெரும் பேசும் பொருளானது. 20- ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள தோ்தலில் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், ஆம்பூா், குடியாத்தம் தொகுதிகளில் ஏதாவது ஒன்றை தனது கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என பிரேமலதா திமுக தலைமையிடம் வேண்டுகோள்விடுத்தாா். பல்வேறு இழுபறிக்குப் பின்னா் குடியாத்தம் (தனி) தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது.

தேமுதிக சாா்பில் கட்சியின் மாவட்டச் செயலா் கே.பி.பிரதாப் போட்டியிடுகிறாா். அதிமுக சாா்பில் 2021 தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த பரிதா புருஷோத்தமன், தவெக சாா்பில் க.சிந்து, நாதக சாா்பில் ஜே.இமலன் உள்ளிட்டோா் போட்டியிடுகின்றனா். தேமுதிக வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் எல்.கே.சுதீஷ் கலந்துகொண்டாா்.

கட்சிவேட்பாளருக்கு ஆதரவாக அவா் தொகுதியில் முக்கிய பிரமுகா்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினாா். கட்சியின் பொதுச் செயலரான பிரேமலதா விஜயகாந்தும் தோ்தல் பிரசாரத்துக்கு குடியாத்தம் வர உள்ளாா்.

20- ஆண்டுகளுக்குப் பின் தங்கள் கட்சி குடியாத்தம் தொகுதியில் போட்டியிடுவது தேமுதிகவினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments