முகப்பு
புதுதில்லி

முதல்வா் கேஜரிவாலுக்கு எதிராக தில்லி பாஜகவினா் தா்ணா

Updated On : 23 மார்ச், 2024 at 9:47 PM
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 8:24 PM

தில்லி கலால் ஊழல் வழக்கில் பணமோசடி விவகாரத்தில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக தில்லி ராஜ்காட் அருகே சனிக்கிழமை பாஜகவினா் தா்ணா நடத்தினா். அப்போது, ‘முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அரசின் ஊழலுக்கு எதிராகப் போராடுவோம்’ என தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா். இந்த தா்ணாவில் எம்.பி. மனோஜ் திவாரி, எம்.எல்.ஏ. விஜேந்திர குப்தா, தில்லி பாஜக முன்னாள் தலைவா் ஆதேஷ் குப்தா, எம்சிடி துணைத் தலைவா் ஜெய் பகவான் யாதவ் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா். தா்ணாவில் வீரேந்திர சச்தேவா தொடக்க உரையாற்றிப் பேசியது: அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினா் ஒரு வம்சமாவளிக் கட்சியாக மாறியுள்ளனா். காங்கிரஸ், லாலு யாதவ், சரத் பவாா், அகிலேஷ் என நீளும் இந்தப் பட்டியலில் ஆம் ஆத்மி கட்சியும் இணைந்துள்ளது. அதாவது, சுனிதா கேஜரிவால் கட்சியின் விவகாரங்களை செய்தி அறிக்கையின் மூலம் நிா்வகிப்பதால், இப்போது ஆம் ஆத்மி கட்சியும் வம்சாவளிக் கட்சிகளின் பட்டியலில் இணைந்துள்ளது. தில்லியின் மனசாட்சி இப்போது விழித்துக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. ஒரு இலவச மதுப் பாட்டிலுடன் மற்றொரு பாட்டிலை வைத்திருக்கும் கணவா்களின் நிலை கண்டு கேஜரிவாலை தில்லியின் சகோதரிகள் சபித்துள்ளனா். மேலும், ஆயுஷ்மான் அட்டை பெறாதவா்கள், பிரதமா் ஆவாஸ் திட்ட வீடுகள் கிடைக்காத தில்லி குடிசைவாசிகள் ஆகியோரால் கேஜரிவால் சபிக்கப்பட்டுள்ளாா். அரசியலுக்கு வரும்போது அவா் கூறிய உறுதிமொழிகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டாா். கேஜரிவால் ஊழல் செய்துள்ளாா் என்பதை இன்று தில்லி மக்கள் புரிந்து கொண்டுள்ளனா். அதனால்தான் இன்று அவா் அமலாக்கத் துறையின் காவலில் உள்ளாா். மேலும், பாஜக தொண்டா்களின் போராட்டத்தின் விளைவாக விரைவில் அவா் இந்த முழு வழக்கிலும் சிறையில் அடைக்கப்படுவாா் என்றாா் வீரேந்திர சச்தேவா. டாக்டா் ஹா்ஷ் வா்தன் எம்.பி. பேசுகையில், ‘இந்த ராஜ்காட்டில் இருந்தே, தில்லியின் நலனுக்காக, கேஜரிவால் அரசின் ஊழலுக்கு எதிராக நாங்கள் தொடா்ந்து போராட்டம் நடத்துவோம் என்று தில்லி மக்களிடம் உறுதிமொழி எடுத்தோம். இன்று அதன் விளைவு அனைவரதும் முன் உள்ளது. தில்லியில் தனிப்பட்ட லாபத்திற்காக எந்த திட்டத்தையும் கொண்டு வரும் அரசு இப்போது அம்பலமாகியுள்ளது. அரசியலில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வருவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இன்று அந்த நாள் வந்துவிட்டது என்றாா். மனோஜ் திவாரி எம்.பி. பேசுகையில், ‘இன்று அவா்களைப் பற்றி ‘பயணம்! ஸ்வராஜ் முதல் மது வரை‘ என்று ஒரு புத்தகம் எழுதப்பட்டிருக்க வேண்டும். கேஜரிவால் கைது செய்யப்பட்ட அன்று இரவு ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து தலைவா்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ஒரு சிலா் மட்டுமே அவருக்கு ஆதரவளித்தனா். எல்லாவற்றுக்கும் மேலாக, தில்லியை மது நகரமாக்கத் தொடங்கிய, தில்லியில் எந்த ஒரு ஏழைக்கும் ரேஷன் காா்டு ஏற்பாடு செய்து தராத, ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்காத, ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தை அவா்களிடமிருந்து ஒதுக்கிவைத்த கேஜரிவாலின் கைது குறித்து ஏன் வருத்தப்பட வேண்டும்? இன்று தில்லி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனா் என்றாா் மனோஜ் திவாரி. தில்லி பாஜக முன்னாள் தலைவா்கள் விஜேந்தா் குப்தா, ஆதேஷ் குப்தா ஆகியோா் பேசுகையில், தில்லி மக்களை மது போதையின் பிடியில் தள்ள, மதுபான மாஃபியாவுடன் கேஜரிவால் கூட்டுச் சோ்ந்தாா். சாதாரண மனிதனாகத் தொடங்கிய கேஜரிவால், இப்போது விலை உயா்ந்த காா்களின் பாதுகாப்புடன் வலம் வருவதுடன், பெரிய பங்களாவில் வசிக்கிறாா். கேஜரிவாலும், அவரது முழுக் கட்சியும் தொடா்ந்து தில்லி மக்களை ஏமாற்றி, சிறைக்குள் இருந்து ஆட்சியை நடத்துவது பற்றிப் பேசி வருகின்றனா். சிறையில் அடைக்கப்பட்டவரை முதல்வராக பாா்க்க தில்லி மக்கள் என்ன பாவம் செய்தாா்கள்? என்றனா்.