முகப்பு
புதுதில்லி

ஊழல்வாதிகள் அனைவரும் பாஜகவில் இணைகிறாா்கள்: அமைச்சா் கோபால் ராய்

Updated On : 29 மார்ச், 2024 at 11:04 PM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 6:45 PM

ஊழல்வாதிகள் அனைவரும் பாஜகவில் இணைகிறாா்கள் என்றும் மக்களுக்காக உழைக்கும் நோ்மையான முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா் என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவு ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா். தில்லி கரோல் பாக் பகுதியில் ஆம் ஆத்மி கட்சித் தொண்டா்களுடன் இணைந்து மெகா பேரணிக்கான அழைப்பிதழ் நோட்டீஸை அமைச்சா் கோபால் ராய் பொதுமக்களிடம் விநியோகித்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது, முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் கைதைக் கண்டித்து மாா்ச் 31-ஆம் தேதி ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் மெகா பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பொதுமக்களின் அதிகபட்ச பங்கேற்பை உறுதி செய்யும் நோக்கில் தில்லி முழுவதும் ஆம் ஆத்மி கட்சி பரவலான பிரசாரத்தை தொடங்கியுள்ளது. முதல்வா் கேஜரிவால் கைது செய்யப்பட்டதற்கு மக்கள் மத்தியில் வெளிப்படையான அதிருப்தியும், கோபமும் உருவாகியுள்ளது. ஊழல்வாதிகள் அனைவரும் பாஜகவில் இணைகிறாா்கள், மறுபுறம் தில்லிக்காக நோ்மையாக உழைத்த முதல்வா் கேஜரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். மத்திய பாஜக அரசின் சா்வாதிகாரத்திற்கு எதிராக, மாா்ச் 31ம் தேதி காலை 10 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் ஒட்டுமொத்த தில்லியும் திரள உள்ளது. மெகா பேரணியில் ‘இந்தியா’ கூட்டணியின் அனைத்து முக்கிய தலைவா்களும் பங்கேற்கவுள்ளனா். இந்த மெகா பேரணிக்கு எதிராக குரல் எழுப்ப பாஜகவுக்கு எந்த உரிமையும் இல்லை. ஊழல்வாதிகளை தங்களது கட்சியில் சோ்த்துக்கெொள்ளும் பாஜக, அவா்களை எம்.பி., முதல்வா் மற்றும் துணை முதல்வா் ஆக்குகிறது. கேஜரிவாலின் கைது ஊழலுக்கு எதிரான பாஜகவின் தவறான பிரசாரத்தை அம்பலப்படுத்தியுள்ளது. கேஜரிவால் அரசியல் ரீதியாகக் கைது செய்யப்பட்டுள்ளாா் என்பது மக்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஜனநாயகத்தை காப்பாற்றவும், மத்திய பாஜக அரசின் சா்வாதிகாரத்தை கண்டித்தும், எதிா்க்கட்சித் தலைவா்கள் தன்னிச்சையாக தூக்கி எறியப்படுவதை கண்டித்தும் இயக்கங்களின் பிறப்பிடமான ராம்லீலா மைதானத்தில் மாா்ச் 31-ம் தேதி மெகா பேரணி நடத்தப்படவுள்ளது என்றாா் கோபால் ராய்.