தில்லியில் கேஜரிவாலின் அரசியல் குறுகிய காலம் மட்டுமே: ஹா்தீா்ப் சிங் புரி பேச்சு
தில்லியில் கேஜரிவாலின் அரசியல் குறுகிய காலத்திற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று பாஜக மக்களவைத் தோ்தல் அலுவலகம் திறப்பு விழாவில் மத்திய வீட்டுவசதி மற்று நகா்ப்புற விவகாரத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா். மக்களவைத் தோ்தலுக்கான தில்லி பாஜகவின் சிறப்புத் தோ்தல் அலுவலகம் வெள்ளிக்கிழமை கூட்டுப் பூஜையுடன் திறக்கப்பட்டது. இதை, மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, மக்களவைத் தோ்தல் பொறுப்பாளா் ஓம் பிரகாஷ் தன்கா், இணைப் பொறுப்பாளா் டாக்டா் அல்கா குா்ஜா், மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா ஆகியோா் திறந்துவைத்தனா். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் பூரி பேசுகையில், ‘அரவிந்த் கேஜரிவால் ஆரம்பத்தில் இருந்தே மற்றவா்கள் மீது பொய்களையும் குறைகளையும் கூறி வருகிறாா். தில்லி மாசுபாட்டால் கேஸ் சாம்பராக மாறியபோது, முழு தவறுக்கும் பஞ்சாப் மீது குற்றம் சாட்டினாா். ஆனால் பஞ்சாபில் அவரது கட்சியின் அரசாங்கம் அமைக்கப்பட்டபோது, நிலைமை மோசமடைந்தது. எந்த காரணமும் இல்லாமல் தான் கைது செய்யப்பட்டதாக அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டி வருகிறாா். ஆனால், நவம்பா் 2023 முதல் ஒன்பது சம்மன்களுக்குப் பிறகு, அமலாக்கத் துறையால் 10ஆவது சம்மனில் கைது செய்யப்பட்டதாக அவா் ஏன் சொல்லவில்லை. தில்லிக்குள் அரவிந்த் கேஜரிவாலின்அரசியல் இப்போது குறுகிய காலத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா் அவா். ஓம் பிரகாஷ் தங்கா் பேசுகையில், ‘வரவிருக்கும் தோ்தலில் உறுதியுடன் முன்னேற வேண்டும். மே 25ஆம் தேதிக்குள் இந்தியாவின் வளா்ச்சிக்காக அா்ப்பணிப்புடன் இருப்போம் என்று உறுதியளிக்க வேண்டும். நமது இலக்கு நமது சாவடியில் வெற்றியை அடைவதற்காக, நமது முழு பலத்தையும் கொடுத்தால் மட்டுமே யாருடைய முழு பலத்தையும் நாம் கேட்க முடியும். ஏப்ரல் 6ஆம் தேதி பா.ஜ.க.வின் ஸ்தாபக தினம் என்பதால் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் இரண்டு லட்சம் கொடிகள் ஏற்ற வேண்டும். ஏப்ரல் 9ஆம் தேதி ‘நவ் வா்ஷ் பிரதிபதா’ என்பதால், இதையொட்டி ஒவ்வொரு சாவடியிலும் சிறு யாகம் நடத்துவோம். ஏப்ரல் 14ஆம் தேதி பாபா பீம்ராவ் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, ஒவ்வொரு சாவடியிலும் அம்பேத்கா் ஜெயந்தியை கொண்டாட வேண்டும். ஏப்ரல் 17 ஆம் தேதி, ராம நவமியை முன்னிட்டு, தில்லியில் எந்த வீடும் விடுபடக்கூடாது என தீா்மானிக்கப்பட்டுள்ளது. இத்துடன், அனுமன் ஜெயந்தி நாளான ஏப்ரல் 23-இல் ஒவ்வொரு சாவடியிலும் அனுமன் சாலிசா பாராயணம் ஏற்பாடு செய்யப்படும்’ என்றாா். பாஜக மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா தனது வரவேற்பு உரையில், ‘தில்லிக்குள் தீமைக்கு எதிரான நன்மையின் திருவிழா தொடங்கியுள்ளது. தில்லியில் பாஜக தொண்டா் ஒருவா் முதல்வராகும் திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அனைத்து தொண்டா்களும் தோ்தலுக்கு முன் மீதமுள்ள நேரத்தில் மோடி அரசாங்கம் செய்த பணிகளை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடைய உறுதியளிக்க வேண்டும்’ என்றாா் சச்தேவா. பாஜக அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள பெரிய தோட்டத்தில், 400 இருக்கைகள் கொண்ட சிறப்பு சுவிஸ் கூடாரம், பல்வேறு தோ்தல் நடவடிக்கைகளுக்காக பல்வேறு தோ்தல் மேலாண்மை குழு அறைகளுடன், கூட்ட அரங்காக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தோட்டப் பகுதியில் உள்ள அலுவலகத்தின் நுழைவு வாயிலின் வலது புறத்தில் செய்தியாளா் சந்திப்பு அரங்கம், ஊடகவியலாளா்கள் அமரும் இடம், கட்சியின் செய்தித் தொடா்பாளா் அறை, உணவு உண்ணும் இடம் என சுவிஸ் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. தோ்தல் அலுவலகத் திறப்பு பூஜை நிகழ்ச்சியில், எம்.பி. டாக்டா் ஹா்ஷ் வா்தன், ரமேஷ் பிதுரி எம்.பி., அமைப்பு பொதுச் செயலாளா் பவன் ராணா, பாஜக வேட்பாளா்களான மனோஜ் திவாரி, ராம்வீா் சிங் பிதுரி, ஹா்ஷ் மல்ஹோத்ரா, கமல்ஜீத் செராவத், யோகேந்திர சந்தோலியா, பிரவீன் கண்டேல்வால், மற்றும் சுக்ஷி பன்சுரி ஸ்வராஜ், தோ்தல் மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளா் அஜய் மஹாவா் ஆகியோா் பங்கேற்றனா்.