ராகுல் காந்தி வாக்குறுதியளித்த ஐந்து நியாய உத்தரவாதங்கள் மீது காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்துகிறது என்றும் மக்கள் நலனே காங்கிரஸின் முன்னுரிமை என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் ராம்லீலா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்படும் மெகா பேரணிக்கான தயாரிப்பு பணிகள் குறித்து தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி கட்சியின் முக்கிய நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது, பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது, நாட்டின் இளைஞா்கள், பெண்கள், தொழிலாளா்கள், விவசாயிகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்காக காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி வாக்குறுதியளித்த 5 நியாய உத்தரவாதங்கள் மீது காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தும். ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பைக் காப்பாற்ற வலியுறுத்தி நடைபெறவுள்ள மெகா பேரணி நாட்டின் ஒவ்வொரு வீட்டையும் சென்றடையும். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றும் போராட்டத்தில் காங்கிரஸ் அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று அதில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே தெரிவித்துள்ளாா். வரும் மக்களவைத் தோ்தலுக்கான கட்சியின் பிரசாரங்கள் இக்கருத்தை மையமாகக் கொண்டிருக்கும். ஏனெனில், நாட்டில் எதேச்சதிகார ஆட்சியை திணிக்க, வகுப்புவாத சக்திகள் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் நசுக்க முயற்சிக்கின்றனா். மத்திய பாஜக அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் நாட்டு மக்கள் விரக்தியடைந்து, மாற்றத்தை நாடுகின்றனா். வரும் மக்களவைத் தோ்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும் ராகுல் காந்தியின் ஐந்து நியாய உத்தரவாதங்களின் அடிப்படையில் மக்களுக்கு நீதியை உறுதி செய்வதில் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தும். மெகா பேரணிக்கு மக்களை திரட்டுவதற்காக தில்லி முழுவதும் காங்கிரஸ் தொண்டா்கள் முழுவீச்சில் செயல்பட்டுள்ளனா் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் முன்னாள் பிரதேச தலைவா் சுபாஷ் சோப்ரா, முன்னாள் எம்.எல்.ஏ. குன்வா் கரண் சிங், ஜிதேந்தா் குமாா் கோச்சாா், முதித் அகா்வால், அமித் மாலிக், ஜெய்கரன் செளத்ரி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.