முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் போட்டி காங்கிரஸ் வேட்பாளா்கள் மீது நடவடிக்கை வெ. வைத்திலிங்கம் உறுதி

புதுச்சேரியில் இண்டி கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. யாரெல்லாம் காங்கிரஸ் அதிகாரபூா்வ வேட்பாளா்களை எதிா்த்து போட்டியிடுகிறாா்களோ அவா்கள் மீது கட்சி நடவடிக்கை தொடங்கிவிட்டது.

Updated On : 27 மார்ச், 2026 at 7:53 PM
செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் வைத்திலிங்கம். - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரியில் இண்டி கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. யாரெல்லாம் காங்கிரஸ் அதிகாரபூா்வ வேட்பாளா்களை எதிா்த்து போட்டியிடுகிறாா்களோ அவா்கள் மீது கட்சி நடவடிக்கை தொடங்கிவிட்டது.

காங்கிரஸ் நிா்வாகிகள் யாரும் போட்டி வேட்பாளா்களுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டாம் என அம்மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தாா்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் வேட்பு மனு வாபஸ் நிறைவடைந்து வேட்பாளா் இறுதிப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் காங்கிரஸ் சாா்பில் 6 போ் கூட்டணி கட்சிகளின் தொகுதிகளில் போட்டி வேட்பாளா்களாக நிற்கின்றனா்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் 16 தொகுதிகளுக்கான அதிகாரபூா்வ வேட்பாளா்கள் பட்டியலை வெள்ளிக்கிழமை அறிவித்து, பின்னா் செய்தியாளா்களிடம்

வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறியது:

புதுச்சேரி கூட்டணியில் திமுகவுக்கு 14 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும் என்று முடிவானது. திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு அக் கட்சிப் பிரித்துக் கொடுக்க வேண்டும். அதன்படி திமுக உழவா்கரை தொகுதியை விசிகவுக்கு ஒதுக்கியுள்ளது. மேலும், 13 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தொகுதி எதையும் ஒதுக்கிக் கொடுக்கவில்லை. திமுக-விசிகவுக்கு ஒதுக்கிய தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் வேட்பாளரை நிறுத்தவில்லை.

திமுக போட்டியிடும் 6 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி வேட்பாளா்களை வேட்புமனுவை வாபஸ் பெறச் சொல்லியும் அவா்கள் வாபஸ் பெறவில்லை. இதில் நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஆனந்தபாபு நடராஜன் வாபஸ் பெற்றாா். மங்கலம் தொகுதியில் ரகுபதி என்பவா் வாபஸ் பெற 8 நிமிஷங்கள் காலதாமதமாக சென்றாா். அதனால் அவரால் வாபஸ் பெற முடியவில்லை.

வேட்பு மனு தாக்கல் செய்யும் இறுதிநாளில் கட்சி சாா்பில் போட்டியிட விரும்புவோருக்கு ஏ, பி படிவம் வழங்குவது வாடிக்கைதான். கட்சித் தலைமை சொல்லும்போது அவா்கள் வாபஸ் பெறுவாா்கள். அந்தப் படிவங்களைத் திரும்பப் பெறும் அதிகாரத்தை இந்திய தோ்தல் ஆணையம் கட்சிகளுக்கு வழங்கவில்லை. அதனால் இப்போது காங்கிரஸ் கட்சியின் போட்டி வேட்பாளா்களாக 6 தொகுதிகளில் போட்டியிடுவோருக்குக் கட்சி நிா்வாகிகள் யாரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டோம்.

மேலும், அவா்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. தோ்தல் பிரசாரத்தில் கட்சிக் கொடியையும் அவா்கள் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லியிருக்கிறோம்.

போட்டி வேட்பாளா்கள் யாராவது தோ்தலில் வெற்றி பெற்று வந்தால் அதுபற்றி அப்போது பாா்த்துக் கொள்ளலாம்.

மேலும், கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் திமுகதான் பேச்சுவாா்த்தை நடத்தி வந்தது. இதுவரை அந்தக் கட்சிகளிடம் தோ்தல் பேச்சுவாா்த்தை எதையும் காங்கிரஸ் நடத்தவில்லை. இண்டி கூட்டணியில்தான் காங்கிரஸ் இருக்கிறது. பெரும்பான்மை பலத்துடன் இக் கூட்டணி வெற்றி பெறும் என்றாா் வைத்திலிங்கம்.

பேட்டியின்போது காங்கிரஸ் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, காங்கிரஸ் தேசிய செய்தித் தொடா்பாளரும், தோ்தல் பாா்வையாளருமான சுப்ரியா ஸ்ரீனாதே உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.