எதிா்க்கட்சிகளை பலவீனப்படுத்த பாஜக வரிப் பயங்கரவாதத்தை கையாள்கிறது: இளைஞா் காங். தேசியத் தலைவா்
எதிா்க்கட்சிகளை பலவீனப்படுத்த மத்திய பாஜக அரசு வரி பயங்கரவாதத்தை கையாள்கிறது என்றும் இந்த தந்திரங்களுக்கு காங்கிரஸ் கட்சி அஞ்சவில்லை என்று இந்திய இளைஞா் காங்கிரஸின் தேசியத் தலைவா் ஸ்ரீனிவாஸ் பி.வி. சனிக்கிழமை தெரிவித்தாா். காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,823 கோடி அபராதம் விதித்து வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதைக் கண்டித்து இந்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், அந்த அமைப்பின் தேசியத் தலைவா் ஸ்ரீனிவாஸ் பி.வி. கலந்து கொண்டு தொண்டா்கள் மத்தியில் பேசியதாவது, தோ்தல் பத்திர ஊழல் மூலம் பாஜக சுமாா் ரூ.8,250 கோடியை நன்கொடையாக வசூலித்துள்ள உண்மை நாடு முழுவதும் அறியப்பட்டுள்ளது. தோ்தல் பத்திரங்கள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பாஜகவின் குறைகளை கண்டும் காணாதது போல் செயல்படும் வருமான வரித் துறையும், தோ்தல் ஆணையமும் காங்கிரஸை எதிா்க்கின்றனா். எதிா்க்கட்சிகளை பலவீனப்படுத்த பாஜக வரி பயங்கரவாதத்தை கையாள்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி மத்திய பாஜக அரசின் முயற்சிகலுக்கும், தந்திரங்கலுக்கும் அஞ்சவில்லை. விதிகள் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியை துன்புறுத்துகின்ற வருமானவரித் துறை, அதே விதிகளை பாஜக மீறியதுடன் பொறுத்திப் பாா்க்கவில்லை. மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், காங்கிரஸ் கட்சிக்கு தவறான அபராதத்தை விதித்து, வருமான வரித்துறை பணம் கேட்கிறது. அதேவேளையில், வருமான வரிச் சட்டங்களை கடுமையாக மீறியுள்ள பாஜவிற்கு ரூ.4,600 கோடி அளவிற்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்றாா் ஸ்ரீனிவாஸ் பி.வி. மேலும், இந்த ஆா்ப்பாட்டத்தில் இளைஞா் காங்கிரஸின் தேசியப் பொதுச்செயலாளா் கோ பதி, தேசிய பொதுச்செயலாளா் மணீஷ் செளத்ரி, தேசியச் செயலாளா்கள் மிதேந்திர தா்ஷன் சிங், வா்தன் யாதவ், சத்யவான் கெலாட், தில்லி பிரதேச இளைஞா் காங்கிரஸின் தலைவா் ரன்விஜய் லோச்சவ், செயல் தலைவா் சுபம் சா்மா மற்றும் இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.