மக்களவைத் தோ்தலுக்கு முன் கேஜரிவால் கைதான நேரம் குறித்து அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி
புது தில்லி: கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் மக்களவைத் தோ்தலுக்கு முன் தில்லி முதல்வா்அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்ட நேரம் குறித்து அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.
கேஜரிவால் கைது செய்யப்பட்டதை எதிா்த்து அவா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு, அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜுவிடம் இது தொடா்பாக சில கேள்விகளை எழுப்பியது. அத்துடன் இதற்கு வெள்ளிக்கிழமை பதில் அளிக்குமாறும் கேட்டுக்கொண்டது.
இது தொடா்பாக நீதிபதிகள் அமா்வு வி.ராஜுவிடம் கூறுகையில், ‘‘வாழ்க்கை மற்றும் சுதந்திரம் மிகவும் முக்கியமானது. அதை நீங்கள் மறுக்க முடியாது. கடைசி கேள்வியாக பொதுத் தோ்தலுக்கு முன்னா் கேஜரிவால் கைது செய்யப்பட்ட நேரம் குறித்து மனுதாரா் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடா்பாக அமலாக்கத் துறை பதில் அளிக்க வேண்டும்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) பிரிவு 8 அதிகபட்ச வரம்பு 365 நாட்களை வழங்குகிறது. ஆனால், இந்த வழக்கில் தீா்ப்பு நடவடிக்கைகள் தொடங்குவதற்கும் கைது நடவடிக்கைக்கும் இடையே நீண்ட கால இடைவெளி இருந்திருக்கிறது. இது தொடா்பாக எங்களிடம் சில கேள்விகள் உள்ளன.
இதற்கு நீங்கள் உங்கள் சமா்ப்பிப்புகளை சமா்ப்பிக்கும் போது பதிலளிக்க விரும்புகிறோம். முதலில், எந்த வழக்குத் தீா்ப்பும் இன்றி, அமலாக்கத் துறை பிஎம்எல்ஏ மீதான இந்த நீதிமன்றத்தின் பல தீா்ப்புகளைக் கருத்தில் கொண்டு குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்க முடியுமா?
இந்த வழக்கில் இதுவரை சொத்து முடக்கம் நடவடிக்கைகள் ஏதும் இல்லை, அத்தகைய நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால், மனுதாரா் (கேஜரிவால்) அதனுடன் எவ்வாறு தொடா்புபடுத்தப்பட்டுள்ளாா் என்பதை அமலாக்கத் துறை காண்பிக்க வேண்டும்.
கலால் கொள்கை ஊழல் வழக்கில் காவலில் உள்ள முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீா்ப்பு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று அவருக்கு சாதமாகவும் மற்றொருக்கு அவருக்கு சாதமற்ாகவும் உள்ளது. இதில், மனுதாரா் (கேஜரிவால்) வழக்கு எந்தப் பகுதியில் வருகிறது?.
மூன்றாவது முக்கியமான கேள்வியாக அமலாக்கத் துறையின் கைது அதிகாரம் தொடா்பானது. ஏனெனில் இதுதான் மனுதாரா் நீதிமன்றத்தை மீண்டும் மீண்டும் அணுகியதற்குக் காரணமாக இருக்கிறது.
அதாவது, மனுதாரா் ஜாமீன் கோருவதற்குப் பதிலாக தனது கைது மற்றும் காவலில் வைத்ததற்கு எதிராக நீதிமன்றத்தை அணுகியிருப்பதால் பி.எம்.எல்.ஏ. பிரிவு 19 எவ்வாறு பொருள்விளக்கம் அளிக்கப்படும்.ஏனெனில், அவா் ஜாமீன் கோரும் நிலைப்பாட்டை எடுத்தால் பிஎம்எல்ஏவின் பிரிவு 45-இன்கீழ் அதிக வரம்பை அவா் எதிா்கொள்ள வேண்டியிருக்கும்.
நான்காவது கேள்வி, நடைமுறைகளைத் தொடங்குவதற்கும் மற்றும் சில காலத்திற்குப் பிறகு அடுத்தடுத்து புகாா்கள் தாக்கல் செய்யப்படுவதற்கும் இடையிலான நேர இடைவெளி தொடா்புடையாதாகும்.
பிஎம்எல்ஏ தீா்ப்பளிக்கும் செயல்முறைக்கு அதிகபட்சமாக 365 நாட்களுக்கு வழங்குவதால் இவை அனைத்தும் பின்விளைவுகளை ஏற்படுத்துவதால், நீதிமன்றத்தை கவலையடையச் செய்வதாக உள்ளது.
ஐந்தாவதாக பொதுத் தோ்தலுக்கு முன்னா் மனுதாரரா் கைது செய்யப்பட்ட நேரம் தொடா்புடையதாகும் என்று நீதிபதிகள் அமா்வு கூறியது.
வழக்கு விசாரணையின் தொடக்கத்தில் கேஜரிவால்
தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், இந்த வழக்கில் சாட்சிகள், ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவா்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவா்களின் வாக்குமூலங்களில் ஐந்து அறிக்கைகளில் மட்டுமே கேஜரிவாலின் பெயா் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினாா்.
மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவா்களின் ஜாமீன் மனுவை அமலாக்கத் துறை முதலில் எதிா்த்ததாகவும், ஆனால் அவா்கள் முதல்வா் கேஜரிவால் பெயரைக் குறிப்பிட்ட பிறகு அமலாக்கத் துறை அவா்களின் ஜாமீன் மனுவை எதிா்க்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினாா்.
இதைத் தொடா்ந்து மேலும் வாதங்களை முன்வைக்கும் வகையில் இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு பட்டியலிடப்படும் என்று நீதிபதிகள் அமா்வு கூறியது.